வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

பிரமிள் கவிதைகள்

நான்

ஆரீன்றாள் என்னை?
பாரீன்று பாரிடத்தே
பாரீன்று உயிர்க்குலத்தின்
வேரீன்று வெறும்வெளியில்
ஒன்றுமற்ற பாழ்நிறைத்து
உருளுகின்ற கோளமெலாம்
அன்று பெற்று விட்டவளென்
தாய்!

வீடெதுவோ எந்தனுக்கு?
ஆடும் அரன் தீவிழியால்
மூடியெரித்துயிரறுத்த
காடு ஒத்துப் பேய்களன்றி
ஆருமற்ற சூனியமாய்
தளமற்ற பெருவெளியாய்
கூரையற்று நிற்பது என்
இல்!

யாரோ நான்? - ஓ! ஓ! -
யாரோ நான் என்றதற்கு
குரல் மண்டிப் போனதென்ன?
தேறாத சிந்தனையும்
மூளாது விட்டதென்ன?
மறந்த பதில் தேடியின்னும்
இருள் முனகும் பாதையிலே
பிறந்திறந்து ஓடுவதோ
நான்!

கவிதையின் முதல் பத்தியில் தனது தாயைப் பற்றிச் சொல்லப்படுகிறது; இரண்டாம் பத்தியில் நானுடைய இருப்பிடத்தைப் பற்றிச் சொல்லப்படுகிறது. மூன்றாம் பத்தியில் மனித விசாரணையின் ஆதிக் கேள்வியான நான் யாரென்ற கேள்வி கேட்கப்படுகிறது. மூன்று பத்திகளிலும் முதல் வரியில் கேள்வி கேட்கப்பட்டுத் தொடர்ந்து வரும் வரிகளில் பதில் வருகிறது. முதல் இரண்டு பத்திகளிலும் தீர்மானமான பதில் வருகிறது. மூன்றாம் பத்தியிலுள்ள கேள்விக்கு மற்றொரு கேள்வி, பதிலாக வைக்கப்படுகிறது. பதிலில்லை என்னும் பதில் முன்வைக்கப்படுகிறது.

யாரிந்த நான்? யாரிவர் தாய்? எங்கிருந்து வந்தவர் இவர்? பாரும் ஊரும் வேரும் ஈன்றவள். சரி, எல்லாத் தாய்களும் ஈனும்போது ஏதோ ஓர் இடத்தில், ஏதோ ஓர் ஊரில்தான் ஈனுகிறார்கள். ஒரு குழந்தை பிறந்தவுடன் இந்த இனக்குழுவைச் சேர்ந்த இன்னார் குழந்தை என்ற வேரும் அந்தக் குழந்தையின் புலன்கள் இயங்கத் தொடங்கியவுடன் அதற்கொரு உலகமும் கிடைத்துவிடுகிறது. ஆனால், இந்தக் கவிதையில் வரும் தாய், வம்சவிருத்தி செய்யும் தாய்தானா? இவள் பார் படைத்தவள், பாரில் ஊர் சமைத்தவள். உயிர்க் குலத்தின் வேரை ஈன்றவள். உபயோகமுள்ளது, உபயோகமற்றது எனப் பல பொருள்களையும் வாங்கிப் போட்டு நாம் வீட்டை அடைப்பதுபோல், வெறும் வெளியில் ஒன்றுமற்ற பாழை நிறைப்பதற்காக உருளுகின்ற கோளமெல்லாம் பெற்றுவிட்டவள் இந்தத் தாய். 'அதுவும் அன்று பெற்றுவிட்டவளென் தாய்' என்று வருகின்றது. இந்த அன்று என்றென்பதற்கு விஞ்ஞானத் திடமே இன்றும் அறுதியான பதிலில்லை.

இவருடைய இருப்பிடம் எது? சிவன் தனது தீக்கண்களால் எரித்துக் கொன்ற சுடுகாட்டை ஒத்த இடம். ஆனால், பேய்களற்றுக் கூரையின்றித் தளமுமின்றிப் பெருவெளியாக நிற்கிற யாருமற்ற சூனியம்தான் இவருடைய இருப்பிடம்.

மூன்றாம் பத்தியில் நான் யார் என்னும் கதறலுக்குப் பதில் வரவில்லை. குரல் மண்டிப்போய்விட்டதால் குரல் வரவில்லை. உருப்படாத சிந்தையும் மூளவில்லை. பதில் தேடி இருண்ட பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நான் பல காலமாகப் பிறந்து இறந்து ஓடிக்கொண்டிருக்கிறான். ஓடிக்கொண்டிருக்கிறான் என்று சொல்லும்போது அவன் ஒற்றை ஆள் அல்ல; அறியாததன் இருண்ட பாதையில் காலங்காலமாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதன் என்று வேண்டுமானால் சொல்லலாம். அல்ல, கேள்விதான் ஓடுகிறது. இப்படிக் காலங்காலமாக அகத்திலும் காலாதீதத்திலும் ஓடும் கேள்விக்கான பதில் மனிதச் சிந்தனை என்னும் அறிவு மட்டத்தில் கிடைப்பதில்லை என்றெல்லாம் கொள்ளலாம்.

இப்படியான கேள்விகளுக்குப் பதிலுள்ளதா என்றால் உள்ளது. மறந்த பதிலைத் தேடித்தான் இந்த ஓட்டம். அதைத் தேடி இருண்ட பாதைகளில் ஓடிக்கொண்டிருப்பவன் இந்த நான். இவனது தாயோ அகிலத்தையும் அண்டத்தையும் பெற்றுவிட்டவள். இருப்பிடம் கூரையற்றுத் தரையுமற்ற பெருவெளி.


பார்வை

நிலவை மழித்தான்
தேவ நாவிதன்.
சிகையாய் முகில்கள்.
வானில் விரிந்தன.
மனிதன் வியந்து.
கவியானான்.

வெயிலை வழியவிட்டான்
வெளிக் கடவுள்.
இரவு பகலுக்கு
எதிரிடை யாச்சு.
மனிதன்
இருமையை விசாரித்தான்.

போகப் போக
வியப்பும் விசாரமும்
தளரத் தளர
மீந்தது கண்வெளி
உலகு ஒன்றே.

இன்று
சூர்ய சந்திரச்
சிற்றணு ஒதுக்கி
புவனப் படர்ப்பை
கால வெளியைக்
கணித நோக்கால்
கடந்து
நட்சத்திர மண்டல
காலக்ஸிக் குவியல்
குவாஸர் சிதைவைக்
கண்டான்.

கொஞ்சம் வியப்பு
ஒருகண விசாரம்
மறுகணம் மனிதன்
கண்டதைப் பிடித்து
ஆராய்ந்தான்.
கண்டதைக் கண்டது
கண்ணீர் விட்டது.

இந்தக் கவிதையின் ஆரம்பத்தில் முகில்கள் நிரம்பிய வானத்தின் பகல் நேரக் காட்சி காட்டப்படுகிறது. இந்தக் காட்சிக்குப் பின்னால் இரவுக் காட்சியொன்று காட்டப்பட்டு அந்தக் காட்சியிலிருந்த நிலவு மழிக்கப்பட்டதால்தான் மறுநாள் முகில்கள் வானில் விரிந்தன என்று வியப்போடு சொல்லி மனிதன் வியந்து கவியாவது சொல்லப்படுகிறது. வியப்பும் விசாரணையும் தளரத் தளரக் கண்ணால் காணப்படுகிற உலகு மட்டும் மீள்கிறது. நான்காம் பத்தியில் பார்வை விரிவடைந்து விஞ்ஞான நோக்கு கூடிய மனிதன் ஆராய்ந்து புதிய விஷயங்களைக் காண்கிறான். ஒரு கண விசாரத்துக்குப் பிறகு தான் கண்டதைப் பிடித்து ஆராயத் தொடங்கிவிடுகிறான். கண்டதைக் கண்டது கண்ணீர்விட்டது என்று முடிகிறது கவிதை. கண்டதைக் கண்டது எது?

இந்தக் கவிதையில் முதலில் ஒரு வியப்பும் பிறகு ஒரு விசாரமும் சொல்லப்படுகின்றன. அடுத்து வியப்பும் விசார மும் தளர்ந்த ஒரு சலிப்பு நிலை. பின்னர் தற்போதைய விஞ் ஞான நோக்கு கூடிய மனிதனின் ஆராயும் நிலை. இறுதியாக வருவது குறைந்த வியப்பும் குறைந்த விசாரமும் உள்ள ஆராய்ச்சி மனிதன். இந்தக் கவிதையில் வெயிலை வழிய விடும் வெளிக் கடவுள் என்ற சொற்பிரயோகத்தையும் அதன் அழகையும் கவனியுங்கள். இந்தக் கவிதையின் கடைசி இரண்டு வரிகளுக்குப் போவோம். கண்டதைக் கண்டு கண்ணீர்விடுவது எது? காணும் கண்களைக் காண்பது எது? நாம் ஒரு மலரைப் பார்க்கிறோம். நமக்கு மலர் தெரிகிறது; நாம் மலரைப் பார்க்கிறோம் என்பதும் தெரிகிறது அல்லவா?

நமது வாழ்வில் அதிசயங்களும் விசாரமும் அருகிவிட்டன. அதிசயமும் விசாரமும் கவனம் கூடினால் மட்டுமே சாத்தியப்படுபவை. கவனம் குவியும்போதே சட்டெனச் சிதறிவிடுகிறது. இனி அதிசயிக்க வாய்ப்பில்லாது காண்பதைக் காண்பது கண்ணீர்விடுகிறது. எது காண்பதைக் காண்பது?

பசுந்தரை

கருகாத தவிப்புகள் கூடி
நாவின் திரி பிளந்து
அணையாது எரியும் ஒருபெயர்
நீ!
புதுநெருப்பில் இடைபுதைத்து
வெளியில் எரியும் வகிடெடுத்து
திரண்டு சிவந்தவள்
நீ!
என்நரம்பு வலைதொறும் விரியும்
உன்தீத் தளிர் வடிவுகளை
என் தழுவல்கள் கவ்வி
மின் நதியைப் புணரும்
சர்ப்பச் சுருணைகளாய்
எரிந்து சிந்த
மீண்டும் என்
பஸ்மத்திலிருந்தே
படம்புடைத்தெழுகிறேன்
உன்மீது சரிகிறேன்.
எரிவின் பாலையிலிருந்து மீண்டு
உன்தசைப் பசுந்தரையில்
என்வாய் பாதம் பதிக்கிறது.
பற்கள் பதிந்தகல
இதோ உன்மீதென்
முதிராத யுவ நடையில்
தத்தளித்த முத்தங்கள்.
நீ தரும் பதில் முத்தங்களின்
மதுர வெளியில் மீண்டும் என்
உதிரம் அலைகிறது.
பாலையில் படர்கிறது
பசுந்தரை.

ஒரு நீயும் ஒரு நானும் வருகிறார்கள். நீ பெண் பாலாகவும் நான் ஆண்பாலாகவும் அமைந்துள்ளன. தீப் போன்ற பெண்ணும் அவளால் சாம்பலாகித் தீராத மோகத்தால் மீண்டும் கிளர்ந்தெழ எரிவின் பாலையில் படர்கிறது பசுந்தரை. அற்புதமான கவிதை இது.

இருள்/ஒளி, நன்மை/தீமை, அறியாமை/ஞானம் என்னும் இருமையில் உலவி, தற்போதில் கவனம் நிலைக்க, தற்கணத்தின் வழியாக எல்லையின்மையாகவும் தொடக்கத்துக்கு முந்தைய சூனியத்தையும் கனவில் கண்டு நனவில் தேடியலையும் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள இயலாத அறிவுப் பாலையில் அலைந்து திரிகிற ஒற்றை உருவம். "மூளைக்குள் சுழன்றடித்த மூலாதாரப் புயலில்" தன்னை நிறுவத் தொடர்ந்து பிரயத்தனப்பட்டு மனித மனத்தின் இருண்ட பகுதிகளில் பிரவேசிப்பதற்கே நம்மில் அநேகரும் அஞ்சி நிற்கப் பிரமிள் அநாயாசமாகச் சென்று வந்தவர் (விமர்சனக் கவிதைகள் என்ற பெயரில் பிரசுரமாகியிருப்பவை கவிதை சார்ந்ததாக அல்லாமல் கவிஞன் சார்ந்ததாகவும் இருப்பதால் அவை பொருட்படுத்தப்படவில்லை).



நன்றி
காலச்சுவடு