வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

சந்திப்பு

என்னதான் ஆனாலும்
நீ ஒரு சுயம்பு
நான் ஒரு சுயம்பு
உன்போக்கில் நீ
என் போக்கில் நான்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்
இருபுள்ளிகள்

நம் சந்திப்பு அதாவது
புரிந்துகொள்ளல் அன்பு முதலானவை
எங்கு எப்போது எவ்விதம் கிட்டும் ?

சம எடையுள்ள இரண்டுக்கும்
சம அந்தஸ்து அளிக்கும் நீதியுணர்வில்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்
இரண்டு புள்ளிகளுக்கு மத்தியில்
தன் செம்மத்திக்காய்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும் புள்ளி--தேவதேவன்

உதயம்

முன் நடக்கும் பெண்ணணங்கின்
நீலவானக் கொண்டையின் கீழ்
நிலப்பூவே மதுரக்
கழுத்தாய் சரிந்த தோள்வரையாம்
என் கண்கள் மட்டுமே தொடு[ம்]வானில்
கைக்குழந்தைமுகம் ஒன்று சிரிக்கிறது எனக்காக
இவ்வுலகம் எனக்காக----------தேவதேவன்

தாய்வீடு

பாதுகாப்பையே தேடுபவர்கள்
பாதுகாப்பை அடைவதேயில்லை.
பொருளையே தேடுபவர்கள்
அன்பை அடைவதேயில்லை.
இன்பத்தையே விழைபவர்கள்
நிறைவை அடைவதேயில்லை.
ராணுவத்திற்கும் கோரிக்கைகளுக்கும்
பெருஞ்செலவுபுரியும் உலகிலன்றோ
நாம் வாழ்கிறோம்.

நல்லாசனமிட்டபடி
கையில் சீப்புடன்
தன் மகள் சகுந்தலாவின்
தலை ஆய்ந்துகொண்டிருக்கிறாள்
அம்மா.
சிக்கலில்லாத கூந்தலில்
வெகு அமைதியுடன் இழைகிறது சீப்பு.

தாங்கொணாத
ஒரு துயர்க் கதைக்குப் பின்தான்
திடமான ஒரு முடிவுடன்
பேராற்றங்கரையின்
தருநிழல்மீதமர்ந்திருக்கும்
தாய்வீடு திரும்பிவிட்டிருக்கிறாள் சகுந்தலா.---தேவதேவன்