வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

மழையும் நீயும்

வாசலில்
மழை
வீட்டினுள்
இருந்தும்
நனைந்தேன்
நீ பேசிகொண்டிருந்தாய்

நீயும்
மௌனமாய்
நானும்
மௌனமாய்
இருவருக்குமாய்
பேசிக்கொண்டிருந்தது
மழை

எனக்கு
மழை பிடிக்கும்
நனைந்தேன்
உனக்கும்
பிடிக்குமென்றாய்
இப்போது
கரைகிறேன்

உன்னை
ரசித்து
கொண்டிருந்தேன்
மழை
பொருமி தீர்க்கிறது
தன்னை
ரசிக்கவில்லை
என

வார்த்தைகள் மட்டுமே



அனிச்சையான
ஒரு கணத்தில்
நிகழ்ந்து
விட்டது இப்பிரிவு
வார்த்தைகள்
உடைந்து
பிளவு பட்டு
நிற்கிறோம்
யவனம்
மிகுந்த என்
பிரியங்களை
சொற்களின்
பாத்திரத்தில் நிரப்பி
உனக்கென
உனது கரங்களில்
ஏந்திகொள்வாய் என
எண்ணினேன்
நீயோ
என்னையும்
சேர்த்தே நொறுக்கி
வீசி சிரிக்கிறாய்
ஆயிரம்
துகள்களாய் வீழ்ந்தும்
அத்தனை
சிதரல்களிலும்
உன் மீதான
காதல் பரவி
மேலும் காதலிக்கிறேன்
என்றேனும்
என்னை
நினைவு கூர்கையில்
எனது வார்த்தைகள்
என்னை நினைவு
கூறும்
அப்போது
வார்த்தைகளை
ஏந்தி அழாதே
அவை எப்போதும்
வார்த்தைகள்
மட்டுமே

தோளில் விழும் மழை

ஜன்னலின்
துவாரங்களினுடே
வழிந்து
கொண்டிருக்கிறது
சூரிய வெளிச்சம்

இந்த
அறையில்
நானும் இருளும்
மட்டுமல்ல
தனிமையும்
துயரும்
கூட

இந்த
அறையினின்றும்
உனது
நினைவினின்றும்
வெளியேற வேண்டும்

வானமோ
அடுத்த
மழைக்கு
ஏற்பாடுகளை
செய்து கொண்டிருக்கிறது
எல்லா
வெளியும்
உனது நீட்சியென
விரிகிறது
போக்கிடம்
இன்றி
தவிக்கையில்
தோளை தட்டி
பெய்கிறது
மழை
இன்னும் வாழ்க்கை
இருக்கிறெதென