இலை- வைரமுத்து
கோடுகளும் சித்திரங்களே-வைரமுத்து
என்
பாதங்களுக்குக் கீழே
பூக்கள் இல்லை
மொய்த்துக் கிடந்தவை
முட்களே.
எனினும்
ரத்தம் துடைத்து
நடந்து வந்தேன்.
என்னைத்
தடவிச் சென்றது
தெற்கே குளித்து வந்த
தென்றல் அல்ல
நுரையீரல்களை -
கார்பன் தாள்களாய்க்
கறுக்க வைக்கும்
கந்தகக்காற்று
இருந்தும்
சுடச்சுடவே
நான்
சுவாசித்து வந்தேன்
ஆண்டு முழுவதும் இருந்த
அக்கினி நட்சத்திரத்தில்
எரிந்து போயிற்று
எனது குடை
ஆயினும்
என்
நிழலின் நிழலிலேயே
நீண்டதூரம் ஒதுங்கிவந்தேன்
என்
தலைக்கு மேலே
பருந்துகள் எப்போதும்
பறந்துகொண்டிருந்ததால்
நான் இன்னும்
செத்துவிடவில்லை
என்பதை
நித்தம் நித்தம்
நிருபிக்க வேண்டியதாயிற்று
என் நிர்வாணத்தை
ஒரு கையால்
மறைத்துக்கொண்டு
என்
அடுத்த கையால்
ஆடை நெய்து
அணிந்து கொண்டேன்
இன்று-
என்
பிரவாகம் கண்டு கரைகள்
பிரமிக்கலாம்
ஆனால் -
இந்த நதி
பாலைவனப் பாறைகளின்
இடுக்கில் கசிந்துதான்
இறங்கி வந்தது
தனது
சொந்தக் கண்ணீரும்
சுரந்ததால்
இரட்டிப்பானது
இந்த நதி
இந்த விதை
தன்மேல் கிடந்த
பாறைகளை
முட்டி முட்டியே
முளைத்துவிட்டது
இன்று என்
புண்களை மூடும்
பூக்களினால்
நான்
சமாதானம் அடைவது
சாத்தியமில்லை
இந்தச்
சமூக அமைப்பு
எனக்குச்
சம்மதமில்லை
சரிதம் என்பது
தனி ஒரு
மனிதனின்
அறிமுக அட்டையோ...?
அல்ல
அது
முடிவைத்தேடும்
ஒரு சமூகத்தின்
மொத்த விலாசம்
இதுவோ...
ரணத்தோடு வாசித்த
சங்கீதம்...
எனது
ஞாபக நீரோடையின்
சலசலப்பு...
நசுங்கிய
நம்பிக்கைகளுக்கு
என்
பேனாவிலிருந்தொரு
ரத்ததானம்
இதில்
சில நிஜங்களைச்
சொல்லவில்லை என்பது
நிஜம்.
ஆனால் -
சொன்னதெல்லாம் நிஜம்
நான்
வரைய நினைத்தது
சித்திரம்தான்.
வந்திரப்பவை
கோடுகளே
ஆனால் -
கோடுகளும்
சித்திரங்களே!
மனித நேசம்தான்
வாழ்க்கை என்பதை
அறிய வந்தபோது
என்
முதுகில் கனக்கிறது
முப்பது வயது.
மழைக்காலப் பூக்கள்-வைரமுத்து
அது ஒரு
காலம் கண்ணே
கார்க்காலம்
நனைந்து கொண்டே
நடக்கின்றோம்
ஒரு மரம்
அப்போது அது
தரைக்குத்
தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருந்தது
இருந்தும்
அந்த
ஒழுகுங் குடையின்கீழ்
ஒதுங்கினோம்
அந்த மரம்
தான் எழுதிவைத்திருந்த
பூக்கள் என்னும்
வரவேற்புக்கவிதையின்
சில எழுத்துக்களை
நம்மீது வாசித்தது
இலைகள்
தண்ணீர்க்காசுகளைச்
சேமித்து வைத்து
நமக்காகச் செலவழித்தன
சில நீர்த்திவலைகள்
உன் நேர்வகிடு என்னும்
ஒற்றையடிப்பாதையில்
ஓடிக்கொண்டிருந்தன
அந்தி மழைக்கு நன்றி
ஈரச்சுவாசம்
நுரையீரல்களின் உட்சுவர்களில்
அமுதம் பூசியது.
ஆயினும் - நான்
என் பெருமூச்சில்
குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்
நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது.
எவ்வளவோ பேச எண்ணினோம்
ஆனால்
வார்த்தைகள்
ஊலீவலம் வரும் பாதையெங்கும்
மௌனம் பசை தடவி விட்டிருந்தது
உன்முகப்பூவில்
பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு
உன் நெற்றியில் நீர்த்துளிகள்
பட்டுத்தெறித்தன
உனக்குப்
பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு
எனது கைக்குட்டையை
எடுத்து நீட்டினேன்
அதில்
உன் நெற்றியை ஒற்றி நீ நீட்டினாய்
நான் கேட்டேன்
இந்தக் கைக்குட்டையை
உலராமல் இருக்க
ஓர்
உத்தி சொல்லக்கூடாதா?
நீ சிரித்தாய்
அப்போது
மழை
என் இருதயத்துக்குள் பெய்தது.
அது ஒரு
காலம் கண்ணே
கார்க்காலம்.
பெயர் சொல்ல மாட்டேன்-வைரமுத்து
மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு
- சிலமின்னல்கள் எனை உரசிப்
போனதுண்டுதேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
- மனம்சில்லென்று சிலபொழுது சிலிர்ததுண்டுமோகனமே
உன்னைப்போல என்னையாரும் -
என்மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லைஆகமொத்தம்
என்நெஞ்சில் உன்னைப்போல - எரிஅமிலத்தை வீசியவர் எவரும் இல்லை
கண்மணியே உன்னைக்காண வைத்ததாலே - என்கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்பொன்மகளே நீ போகும் பாதையெல்லாம் - தினம்பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை - காதல்வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே - இந்தப்பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகின்றேன்
விதையோடு தொடங்குதடி விருட்சமெல்லாம் - துளிவிந்தோடு தொடங்குதடி உயிர்கள் எல்லாம்சதையோடு தொடங்குதடி காமம் எல்லாம் - ஒருதாலாட்டில் தொடங்குதடி கீதமெல்லாம்சிதையோடு தொடங்குதடி ஞானமெல்லாம் - சிறுசிந்தனையில் தோன்றுதடி புரட்சியெல்லாம்கதையோடு தோன்றுமடி இதிகாசங்கள் - உன்கண்ணோடு தொடங்குதடி எனது பாடல்
உலகத்தின் காதலெல்லாம் ஒன்றே ஒன்றே - அதுஉள்ளங்கள் மாறிமாறிப் பயணம் போகும்உலகத்தின் முத்தமெல்லாம் ஒன்றே ஒன்றே - அதுஉதடுகளில் மாறிமாறிப் பயணம் போகும்உலகத்தின் உயிரெல்லாம் ஒன்றே ஒன்றே - அதுஉடல்கள் மாறிமாறிப் பயணம் போகும்உலகத்தின் சுகமெல்லாம் ஒன்றே ஒன்றே - என்உத்தரவுக் கிணங்கிவிடு புரிந்து போகும்
செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடிதினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் - உன்செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அதுதெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் - அடிஎவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்இவ்வாறு தனிமையிலே பேசிக் கொண்டே - என்இரவுகளைக் கவிதைகளாய் மொழிபெயர்த்தேன்
பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என்பிரியத்தை அதனால்நான் குறைக்கமாட்டேன்சரிந்துவிடும் அழகென்று தெரியும் பெண்ணே - என்சந்தோஷக் கலைகளைநான் நிறுத்த மாட்டேன்எரிந்துவிடும் உடலென்று தெரியும் பெண்ணே - என்இளமைக்குத் தீயிட்டே எரிக்க மாட்டேன்மரித்துவிடும் உறுப்பென்று தெரியும் பெண்ணே - என்வாழ்வில் நான் ஒரு துளியும் இழக்கமாட்டேன்
கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் - என்காதல்மனம் துண்டுதுண்டாய் உடையக் கண்டேன்துண்டுதுண்டாய் உடைந்த மனத்துகளை எல்லாம் - அடிதூயவளே உனக்குள்ளே தொலைத்து விட்டேன்பொன்மகளே உனக்குள்ளே தொலைத்ததெல்லாம் - சுகபூஜைகொள்ளும் நேரத்தில் தேடிப் பார்த்தேன்கண்மணிஉன் கூந்தலுக்குள் கொஞ்சம் கண்டேன் - உன்கால்விரலின் பிளவுகளில் மிச்சம் கண்டேன்
கோடிகோடி ஜீவன்கள் சுகித்த பின்னும் - இன்னும்குறையாமல் வீசுதடி காற்றின் கூட்டம்கோடிகோடி ஜீவன்கள் தாகம் தீர்த்தும் - துளிகுறைந்தொன்றும் போகவில்லை காதல் தீர்த்தம்மூடிமூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் - மண்ணைமுட்டிமுட்டி முளைப்பதுதான் உயிரின் சாட்சிஓடிஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே - நாம்உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி
கல்யாண்ஜி கவிதைகள்
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை
*****************************************
தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவேஎந்தக் கடிதமும் இல்லாதஏமாற்றம்.
இன்று எப்படியோஎன்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறுஇறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.
**********************************************
நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது
*************************************
குற்றவுணர்வுகள் ஏதுமில்லை
சந்தோஷமாகவே இருக்கிறது
ஆனாலும் அவள் என்கனவில் வந்ததை
இவளிடம் சொல்லமுடியவில்லை
இவளுக்கும் இருக்கலாம்
குற்றவுணர்வுகள் அற்ற
சந்தோஷம் தந்த
என்னிடம் சொல்ல முடியாத
இவள் அவனிடம் பேசுகின்ற கனவுகள்.
அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல்
அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல்
இவளும் நானும்
இருக்கின்றோம்
சந்தோஷமின்றி, குற்றவுணர்வுகளுடன்.
************************************************
தானாய் முளைத்த
செடி என்கிறார்கள்
யாரோ வீசிய
விதையிலிருந்து தானே
*****************************************************
நீச்சல் தெரியாது இருவருக்கும்
என்ற உணர்வு
படகுப் பயணத்தின் மகிழ்ச்சியில்
பொத்தலிட்டுக் கொண்டிருந்தது.
துடுப்புகளின் ஓய்வற்ற துளாவலில்
தண்ணீரின் உறைந்த தகடுகள்
உடைந்து விழுந்தன.
வட்டமடிக்கிற ஏரியின்
குளிர்விளிம்பில்
அமிழ்ந்து நீர் அள்ளிய
விரல் மரத்துப் போனாலும்
அல்லிப்பூ
பறித்தெடுத்த பரவசத்தில்
பனியுடன் அப்பால்
நகர்ந்து விட்டிருந்தது
பயம்.
அனைவரும் பார்க்க
முத்தமிட்டுக் கொள்ளவும்
முடியலாம் இனிமேல்.
************************************
இத்தனை காலம்
சவரக் கத்தியைத்
தீட்டி மழித்தவன்.
பசிக்குப் பயந்து
மல்லிகைப்பூ விற்கையில்,
எனக்கு மட்டும் தெரிகிறது
கத்தித் துரு
ஒவ்வொரு பூவிலும்.
****************************************
முற்றிலும்
விரைத்துக் கிடந்தது பிணம்.
நெட்டுக் குத்திய
இறந்த பார்வையின் மேல்
மழை தெறித்துக் கொண்டிருக்கிறது.
வாகனச் சக்கரங்கள்
சேறு தெளித்து இரங்கல் செய்ய
ஈரச் சிதையில்
நீண்டு கொண்டிருந்தது கால்கள்.
நடைபாதையில்
நேற்றுப் போலவே பழம்
விற்றுக் கொண்டிருந்தார்கள்.
பேரம் பேசி நிற்கும்
சாதுரியக் கைகளில்
உருளும் ஆப்பிளில்
பக்கத்துச் சாவின்
அடையாளம் எதுவும் இல்லை.
ஏற்கனவே தொலத்திருந்தது
வாழ்வின் நிழல்கள்.
**************************************
ட போல் மடங்கி கம்பளிப் பூச்சி
மூன்றாம் படியில் ஏறக்கண்டு
புறப்பட்டக் காலை ஒன்றாய் சேர்த்து
உற்றுப்பார்த்தேன்
அழகே நகரும்
அற்புதம் வியந்து
செருப்பைப் போட்டேன்
இரண்டாம் படியில் ஏறியபொழுது
நசுங்கும்படியாய்
வசமாய் மிதித்து
நடந்தேன் வெளியே
ஒன்றாம் படியோ
நிகழ்ந்ததைக் கண்டு
திடுக்கிட்டிருக்க.
**********************************
அடிக்கடி பார்க்க முடிகிறது
யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து
***********************************
எனக்கு சங்கீதம் தெரியாது.
பூசினாற்போன்ற நல்ல வெளிச்சம்
நிரம்பிய அந்த வீட்டின்
மேஜையில் வயலின் இருந்தது
படுக்கை வசத்தில்.
எத்தனை பேருக்கு வயலினையும் வில்லையும்
தொடுகிற தூரத்தில் பார்க்க வாய்த்தது.
வயலினின் நிறமோ அற்புதம்.
இசை புழங்கிய வழவழப்பு
எல்லா இடத்திலும்.
தப்பித்தவறி வந்து
ஊர்ந்து கொண்டிருக்கிறது
வயலின் நரம்புகளில்
மேல்நோக்கி ஒரு சிற்றெறும்பு.
வாய் குவித்து ஊதத் தயக்கம்.
விரலால் அப்புறப்படுத்தவும்.
என் செயல்கள் உண்டாக்கக்கூடிய
இசைக் கேடுகளை விட
எறும்பு ஊர்வது ஒரு ராகத்தின்
மேல் தானே.
**************************************
இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்.
*************************************
விக்ரமாதித்யன் கவிதைகள்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு
சோரம் தொழிலாகக் கொண்டதில்லை நான்
எனினும்
சோரம் போகிறவர்களிடம்
சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு
திருடிப் பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம் வாங்கி வாழநேர்கிறது எனக்கு
கூட்டிக் கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக் கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு
காட்டிக் கொடுத்ததில்லை நான்
எனினும்
காட்டிக் கொடுப்பவர்களின்
கருணையில் காலம் கழிக்க நேர்கிறது எனக்கு
பாபத்தில் வந்த பலனைக் கையாடினால்
பாபம் படியாதோ சாபம் கவியாதோ
********************************************************
அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்தது வந்து கொண்டிருந்தேன்
மனசுகிடந்து அடித்துக்கொள்ள
******************************************
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக் கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்துக்கு இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப் புலிகள்
********************************************
விரும்புவது
நதிக்கரை நாகரிகம்
விதிக்கப்பட்டது
நெரிசல் மிக்க நகரம்
**************************************
அவன் திருட
இவன் திருட
அதையெல்லாம் பார்த்து
நீயும் திருட
நான் மட்டும்
எப்படிச் சாமியாராய் இருக்க
***********************************
நகுலன் கவிதைகள்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிறவரை.
***************************
வந்தவன் கேட்டான்
`என்னைத் தெரியுமா ? `
`தெரியவில்லையே`
என்றேன்
`உன்னைத்தெரியுமா ?`
என்று கேட்டான்
`தெரியவில்லையே`
என்றேன்
`பின் என்னதான் தெரியும்`
என்றான்.
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன்.
***********************************
தன்மிதப்பு
யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சிலைச்
சீவிக் கொண்டிருந்தான்
அவனைப்போல் பென்சிலும்
பேசாமல் இருந்தது – அது
கூடத்தவறு, அந்த நிலையில்
அவன் தன் கழுத்தை
இன்னும் இவனுக்குச்
சௌகரியமாகச் சாய்த்துக்
கொடுத்திருப்பான் – இந்த
நிலைமையையும் தன்னுடைய
வெளித்தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில்
**********************************
இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்
*******************************
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.
******************************
எனக்கு யாருமில்லை
நான்
கூட...
இவ்வளவு பெரிய
வீட்டில்
எனக்கு இடமில்லை
இவ்வளவு
பெரிய நகரத்தில்
அறிந்த முகம் ஏதுமில்லை
அறிந்த முகம் கூட
மேற் பூச்சுக் கலைய
அந்நியமாக
உருக்காட்டி
மறைகிறது
என்னுருவங்
கலைய
எவ்வளவு
காலம்
கடந்து செல்ல வேண்டும்
என்ற நினைவுவர
''சற்றே நகர்''
என்று ஒரு குரல் கூறும்.
********************************
அங்கு
"இப்பொழுதும்
அங்குதான்
இருக்கிறீர்களா?"
என்று
கேட்டார்
"எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்"
என்றேன்.
*********************************
நான் இறந்த பிறகு
எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள்
நடத்த வேண்டாம்.
ஏனென்றால்,
என்னால் வர முடியாது!’’
************************************
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புத்தகத்தில் எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!
என்னைப்
பார்க்கவந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்
*********************************