வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

நட்சத்திர மீன் -தேவதேவன்

உயிர் கொண்டிருக்கையில்
உயிர் கொண்டிருப்பதைத் தவிர
ஒன்றுமறியாது பிசையும் ஐந்துவிரல்களாய்க்
கடலுள் அலைந்து கொண்டிருந்துவிட்டது
இந்த ஜீவன்

மரித்து
அழகுப்பொருளாய்
அதை நான் என் கையில் ஏந்தியபோது
அதிலே பகிரங்கமானது
சொல்லொணாததோர் ரகஸ்யத்தினின்றும்
சில சமிக்ஞைகள்;
நிலை தடுமாறா வண்ணம்
நிற்க விரித்த கால்கள் இரண்டு;
இப் பேரண்டத்தையே தழுவ முன்னி
இதயத்தினின்றும் நீண்ட கைகள் இரண்டு;
ஆர்வம்மிக்கு
மேல்நோக்கி உயர்ந்து எழுந்த
தலைமுளைக்காத கழுத்து ஒன்று

அமைதி என்பது...-தேவதேவன்

பொழுதுகளோடு நான் புரிந்த
உத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
நான் உன்னருகே வந்தேன்

அமைதி என்பது மரணத்தறுவாயோ?

வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ?

வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்குமுறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது

அமைதி என்பது வாழ்வின் தலைவாயிலோ?

எழுந்துசென்ற பறவையினால்
அசையும் கிளையோ?

பயணம்-தேவதேவன்


அசையும்போது தோணி
அசையாதபோதே தீவு

தோணிக்கும் தீவுக்குமிடையே
மின்னற்பொழுதே தூரம்

அகண்டாகார விண்ணும்
தூணாய் எழுந்து நிற்கும்
தோணிக்காரன் புஜ வலிவும்
நரம்பு முறுக்க நெஞ்சைப்
பாய்மரமாய் விடைக்கும் காற்றும்
அலைக்கழிக்கும்
ஆழ்கடல் ரகசியங்களும்
எனக்கு, என்னை மறக்கடிக்கும்!

ஆற்றோரப் பாறைகளின்மேல்-தேவதேவன்

ஆற்றோரப் பாறைகளின்மேல்
அமர்ந்திருக்கும்
இக் கல் மண்டபங்கள்தாம்
எத்தனை அழகு!
எத்தனை எளிமை!
எத்தனை உறுதி!
எத்தனை தூய்மை!

பூஜை வேண்டாமல்
விக்ரகங்கள் வேண்டாமல்
குழந்தைகள் துளைத்து
கும்மாளாமிட்டுக் கொண்டிருக்கும்
இந்த ஆற்றினைப் பார்த்துக்கொண்டேயிருப்பதற்கோ
அமர்ந்துவிட்டன இக் கல் மண்டபங்கள்
இங்கே நிரந்தரமாய்?

சுற்றுச் சுவர்களில்லாத
அதன் உள்வெளிகளில்
'உள்ளொன்றும் புறமொன்றுமி'னால்
உருவாகும் துயரேதுமின்றிச்
சுழன்று கொண்டிருக்கும் சக்கரத்தினைக்
கண்டு நின்றனரோ புத்தர்?

கண்டதும் விண்டதும்- தேவதேவன்

மலையுச்சியேறியவன்
தான் கண்டு கொண்டதை
ஒரு கோயிலென வடித்துவிட்டுக்
கீழிறங்கினான்.

கோயில் சென்றவன்
உதட்டு பிதுக்கலுடன்
கைவிரித்தபடி
கீழிறங்கினான்.

கீழே
ஒரு புல்
அய்யோ,அது
காற்றிலா அப்படித் துடிதுடிக்கிறது?
ஒளியிலா அப்படி மினுமினுக்கிறது?

அங்கே
தலைப்பாகையும்
அரையாடையுமாய்ச்
சுள்ளி விறகு சேகரித்துச்
செல்லும் ஒரு மனிதனை
காதலுடன் கவலையுடனும்
கண்டு கொண்டமையோ அது?

விண்டுரைக்க முடியாத
மெய்மையின் சொற்கள் தாமோ
இந்த மவுனப் பிரமாண்டமும்
பேரியற்கையும்
இந்த மனிதனும்?

தீராப் பெருந் துயர்களின்-தேவதேவன்

முளை எட்டிப் பார்க்கும்
விஷ வித்துக்களையா
கண்டு கொண்டாள் ,சாந்தா,

வேகம் பொறி பரக்க
விளையாட்டுத் திடல் அதிர
ஒருவரை ஒருவர்
முந்தி வந்து கொண்டிருக்கும்
தத்தம் பிள்ளைகளை
அணி மனிதர்களை
ஊக்குவித்துக்கொண்டிருக்கும்
உற்சாக ஆரவாரத்திற்கு நடுவே?