வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

பெயர் சொல்ல மாட்டேன்-வைரமுத்து

பெயர் சொல்ல மாட்டேன்———————————-
மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு
- சிலமின்னல்கள் எனை உரசிப்
போனதுண்டுதேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
- மனம்சில்லென்று சிலபொழுது சிலிர்ததுண்டுமோகனமே
உன்னைப்போல என்னையாரும் -
என்மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லைஆகமொத்தம்
என்நெஞ்சில் உன்னைப்போல - எரிஅமிலத்தை வீசியவர் எவரும் இல்லை
கண்மணியே உன்னைக்காண வைத்ததாலே - என்கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்பொன்மகளே நீ போகும் பாதையெல்லாம் - தினம்பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை - காதல்வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே - இந்தப்பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகின்றேன்
விதையோடு தொடங்குதடி விருட்சமெல்லாம் - துளிவிந்தோடு தொடங்குதடி உயிர்கள் எல்லாம்சதையோடு தொடங்குதடி காமம் எல்லாம் - ஒருதாலாட்டில் தொடங்குதடி கீதமெல்லாம்சிதையோடு தொடங்குதடி ஞானமெல்லாம் - சிறுசிந்தனையில் தோன்றுதடி புரட்சியெல்லாம்கதையோடு தோன்றுமடி இதிகாசங்கள் - உன்கண்ணோடு தொடங்குதடி எனது பாடல்
உலகத்தின் காதலெல்லாம் ஒன்றே ஒன்றே - அதுஉள்ளங்கள் மாறிமாறிப் பயணம் போகும்உலகத்தின் முத்தமெல்லாம் ஒன்றே ஒன்றே - அதுஉதடுகளில் மாறிமாறிப் பயணம் போகும்உலகத்தின் உயிரெல்லாம் ஒன்றே ஒன்றே - அதுஉடல்கள் மாறிமாறிப் பயணம் போகும்உலகத்தின் சுகமெல்லாம் ஒன்றே ஒன்றே - என்உத்தரவுக் கிணங்கிவிடு புரிந்து போகும்
செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடிதினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் - உன்செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அதுதெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் - அடிஎவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்இவ்வாறு தனிமையிலே பேசிக் கொண்டே - என்இரவுகளைக் கவிதைகளாய் மொழிபெயர்த்தேன்
பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என்பிரியத்தை அதனால்நான் குறைக்கமாட்டேன்சரிந்துவிடும் அழகென்று தெரியும் பெண்ணே - என்சந்தோஷக் கலைகளைநான் நிறுத்த மாட்டேன்எரிந்துவிடும் உடலென்று தெரியும் பெண்ணே - என்இளமைக்குத் தீயிட்டே எரிக்க மாட்டேன்மரித்துவிடும் உறுப்பென்று தெரியும் பெண்ணே - என்வாழ்வில் நான் ஒரு துளியும் இழக்கமாட்டேன்
கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் - என்காதல்மனம் துண்டுதுண்டாய் உடையக் கண்டேன்துண்டுதுண்டாய் உடைந்த மனத்துகளை எல்லாம் - அடிதூயவளே உனக்குள்ளே தொலைத்து விட்டேன்பொன்மகளே உனக்குள்ளே தொலைத்ததெல்லாம் - சுகபூஜைகொள்ளும் நேரத்தில் தேடிப் பார்த்தேன்கண்மணிஉன் கூந்தலுக்குள் கொஞ்சம் கண்டேன் - உன்கால்விரலின் பிளவுகளில் மிச்சம் கண்டேன்
கோடிகோடி ஜீவன்கள் சுகித்த பின்னும் - இன்னும்குறையாமல் வீசுதடி காற்றின் கூட்டம்கோடிகோடி ஜீவன்கள் தாகம் தீர்த்தும் - துளிகுறைந்தொன்றும் போகவில்லை காதல் தீர்த்தம்மூடிமூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் - மண்ணைமுட்டிமுட்டி முளைப்பதுதான் உயிரின் சாட்சிஓடிஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே - நாம்உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி

கல்யாண்ஜி கவிதைகள்

சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை
*****************************************
தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவேஎந்தக் கடிதமும் இல்லாதஏமாற்றம்.
இன்று எப்படியோஎன்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறுஇறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.
**********************************************
நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது
*************************************
குற்றவுணர்வுகள் ஏதுமில்லை
சந்தோஷமாகவே இருக்கிறது
ஆனாலும் அவள் என்கனவில் வந்ததை
இவளிடம் சொல்லமுடியவில்லை
இவளுக்கும் இருக்கலாம்
குற்றவுணர்வுகள் அற்ற
சந்தோஷம் தந்த
என்னிடம் சொல்ல முடியாத
இவள் அவனிடம் பேசுகின்ற கனவுகள்.
அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல்
அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல்
இவளும் நானும்
இருக்கின்றோம்
சந்தோஷமின்றி, குற்றவுணர்வுகளுடன்.
************************************************
தானாய் முளைத்த
செடி என்கிறார்கள்
யாரோ வீசிய
விதையிலிருந்து தானே
*****************************************************
நீச்சல் தெரியாது இருவருக்கும்
என்ற உணர்வு
படகுப் பயணத்தின் மகிழ்ச்சியில்
பொத்தலிட்டுக் கொண்டிருந்தது.
துடுப்புகளின் ஓய்வற்ற துளாவலில்
தண்ணீரின் உறைந்த தகடுகள்
உடைந்து விழுந்தன.
வட்டமடிக்கிற ஏரியின்
குளிர்விளிம்பில்
அமிழ்ந்து நீர் அள்ளிய
விரல் மரத்துப் போனாலும்
அல்லிப்பூ
பறித்தெடுத்த பரவசத்தில்
பனியுடன் அப்பால்
நகர்ந்து விட்டிருந்தது
பயம்.
அனைவரும் பார்க்க
முத்தமிட்டுக் கொள்ளவும்
முடியலாம் இனிமேல்.
************************************
இத்தனை காலம்
சவரக் கத்தியைத்
தீட்டி மழித்தவன்.
பசிக்குப் பயந்து
மல்லிகைப்பூ விற்கையில்,
எனக்கு மட்டும் தெரிகிறது
கத்தித் துரு
ஒவ்வொரு பூவிலும்.
****************************************
முற்றிலும்
விரைத்துக் கிடந்தது பிணம்.
நெட்டுக் குத்திய
இறந்த பார்வையின் மேல்
மழை தெறித்துக் கொண்டிருக்கிறது.
வாகனச் சக்கரங்கள்
சேறு தெளித்து இரங்கல் செய்ய
ஈரச் சிதையில்
நீண்டு கொண்டிருந்தது கால்கள்.
நடைபாதையில்
நேற்றுப் போலவே பழம்
விற்றுக் கொண்டிருந்தார்கள்.
பேரம் பேசி நிற்கும்
சாதுரியக் கைகளில்
உருளும் ஆப்பிளில்
பக்கத்துச் சாவின்
அடையாளம் எதுவும் இல்லை.
ஏற்கனவே தொலத்திருந்தது
வாழ்வின் நிழல்கள்.
**************************************
ட போல் மடங்கி கம்பளிப் பூச்சி
மூன்றாம் படியில் ஏறக்கண்டு
புறப்பட்டக் காலை ஒன்றாய் சேர்த்து
உற்றுப்பார்த்தேன்

அழகே நகரும்
அற்புதம் வியந்து
செருப்பைப் போட்டேன்

இரண்டாம் படியில் ஏறியபொழுது
நசுங்கும்படியாய்
வசமாய் மிதித்து
நடந்தேன் வெளியே
ஒன்றாம் படியோ
நிகழ்ந்ததைக் கண்டு
திடுக்கிட்டிருக்க.
**********************************
அடிக்கடி பார்க்க முடிகிறது
யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து
***********************************
எனக்கு சங்கீதம் தெரியாது.
பூசினாற்போன்ற நல்ல வெளிச்சம்
நிரம்பிய அந்த வீட்டின்
மேஜையில் வயலின் இருந்தது
படுக்கை வசத்தில்.
எத்தனை பேருக்கு வயலினையும் வில்லையும்
தொடுகிற தூரத்தில் பார்க்க வாய்த்தது.
வயலினின் நிறமோ அற்புதம்.
இசை புழங்கிய வழவழப்பு
எல்லா இடத்திலும்.
தப்பித்தவறி வந்து
ஊர்ந்து கொண்டிருக்கிறது
வயலின் நரம்புகளில்
மேல்நோக்கி ஒரு சிற்றெறும்பு.
வாய் குவித்து ஊதத் தயக்கம்.
விரலால் அப்புறப்படுத்தவும்.
என் செயல்கள் உண்டாக்கக்கூடிய
இசைக் கேடுகளை விட
எறும்பு ஊர்வது ஒரு ராகத்தின்
மேல் தானே.
**************************************
இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்.

*************************************

விக்ரமாதித்யன் கவிதைகள்

ரத்தத்தில் கைநனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு
சோரம் தொழிலாகக் கொண்டதில்லை நான்
எனினும்
சோரம் போகிறவர்களிடம்
சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு
திருடிப் பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம் வாங்கி வாழநேர்கிறது எனக்கு
கூட்டிக் கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக் கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு
காட்டிக் கொடுத்ததில்லை நான்
எனினும்
காட்டிக் கொடுப்பவர்களின்
கருணையில் காலம் கழிக்க நேர்கிறது எனக்கு
பாபத்தில் வந்த பலனைக் கையாடினால்
பாபம் படியாதோ சாபம் கவியாதோ
********************************************************
அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்தது வந்து கொண்டிருந்தேன்
மனசுகிடந்து அடித்துக்கொள்ள
******************************************
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக் கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்துக்கு இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப் புலிகள்
********************************************
விரும்புவது
நதிக்கரை நாகரிகம்
விதிக்கப்பட்டது
நெரிசல் மிக்க நகரம்
**************************************

அவன் திருட

இவன் திருட

அதையெல்லாம் பார்த்து

நீயும் திருட

நான் மட்டும்

எப்படிச் சாமியாராய் இருக்க

***********************************

நகுலன் கவிதைகள்

அலைகளைச் சொல்லி...
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிறவரை.
***************************
வந்தவன் கேட்டான்
`என்னைத் தெரியுமா ? `
`தெரியவில்லையே`
என்றேன்
`உன்னைத்தெரியுமா ?`
என்று கேட்டான்
`தெரியவில்லையே`
என்றேன்
`பின் என்னதான் தெரியும்`
என்றான்.
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன்.

***********************************
தன்மிதப்பு
யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சிலைச்
சீவிக் கொண்டிருந்தான்
அவனைப்போல் பென்சிலும்
பேசாமல் இருந்தது – அது
கூடத்தவறு, அந்த நிலையில்
அவன் தன் கழுத்தை
இன்னும் இவனுக்குச்
சௌகரியமாகச் சாய்த்துக்
கொடுத்திருப்பான் – இந்த
நிலைமையையும் தன்னுடைய
வெளித்தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில்
**********************************
இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்
*******************************
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.
******************************
எனக்கு யாருமில்லை
நான்
கூட...
இவ்வளவு பெரிய
வீட்டில்
எனக்கு இடமில்லை
இவ்வளவு
பெரிய நகரத்தில்
அறிந்த முகம் ஏதுமில்லை
அறிந்த முகம் கூட
மேற் பூச்சுக் கலைய
அந்நியமாக
உருக்காட்டி
மறைகிறது
என்னுருவங்
கலைய
எவ்வளவு
காலம்
கடந்து செல்ல வேண்டும்
என்ற நினைவுவர
''சற்றே நகர்''
என்று ஒரு குரல் கூறும்.
********************************

அங்கு

"இப்பொழுதும்
அங்குதான்
இருக்கிறீர்களா?"
என்று
கேட்டார்
"எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்"
என்றேன்.

*********************************

நான் இறந்த பிறகு
எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள்
நடத்த வேண்டாம்.
ஏனென்றால்,
என்னால் வர முடியாது!’’

************************************

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புத்தகத்தில் எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!
******************************
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!

***************************8

என்னைப்
பார்க்கவந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்

*********************************

நீயிருக்கநானிருக்க
நேற்று இன்று நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!

************************8
உன்னையன்றி
உனக்கு
வேறுயாருண்டு?

**************************88
ஆர்ப்பரிக்கும்
கடல்அதன் அடித்தளம்
மௌனம்
மகா மௌனம்!

**********************
முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை
ஞானம்!

************************

எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும் நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்
ன!
** ** ** ** ** ** ** **

எந்த நல்லோனுக்காய்

முக்கண்ணன்
முடி துறந்த
கங்கையென,
ஊழி
முன்னோட்டமாய்
வானம் உடைந்து
உக்கிரம் கொண்டு
வீழ்ந்தது மழை,
எப்பொழுதும்
மனிதர்களால்
நிறையும் சாலை
மழையால் நிறைந்தது, 
சாரல்
மட்டும்
சந்திக்கும் இடங்களில்,
நடுங்கி கொண்டும்
ஒடுங்கியும்
ஆடு மாடு
கூட நிறைய
மனிதர்கள்,
மழை
கிழித்து கடந்தனர்
குடை கொண்டவர்கள்,
கனத்த
மழையை காட்டிலும்
நழுவிய கணங்கள்
மனதுக்குள்
கனக்க,
நனைந்து கடக்க
நினைக்க,
சொந்த ரத்தம்
வீழ்ந்து கிடந்தும்
வேறு திசை காணும்
இவர்களை
நனைக்க மறுத்து
நின்று போனது அப்பெருமழை,
இருந்தும்
ஒரு கேள்வி
கனக்கிறது விடை
புரியாது,
எந்த
நல்லோனுக்காய்
இங்கே பெய்து
தொலைத்தது
இம்மழை என ?

வலி -2
மீனை
அரியும்போது
கிடைத்தது
குழந்தையின்
கண்
★★★
பச்சிளங்குழந்தையை
நெடுக
உளியால்
கொத்தியிருக்கிறார்களே
புத்தர் சிலைக்கு
முயற்சி செய்திருப்பார்களா ?
★★★
சாலைபோடும்
பெரு வண்டியைப்
பார்த்ததும்
பதறிப்போய்
பதுங்குகின்றன
விளையாடிக்
கொண்டிருந்த
குழந்தைகள்!

******
மருந்து பற்றி
படித்துக்
கொண் டிருக்கையில்
விழுந்தது மரணம்

********
ஆழிப் பேரலைகளும்
எங்கள் பெண்களை
வீடு புகுந்து
இழுத்துப்போய்
கொல்லத்தான் செய்தன
ஆனாலும்….
--அறிவு மதி

ஒரு வலியா இருவலியா
நடந்து அழுதமின்னா
நடந்த
எடம்
ஆறாகும்!

நின்னு அழுதமின்னா
நின்ன
எடம்
குளமாகும்!

புரண்டு அழுதமின்னா
புரண்ட
எடம்
கடலாகும்!
★★★

ஒரு வலியா
இரு
வலியா
ஒப்பாரி
வச்சி
அழ!

இது வழியா
அது
வழியா
எங்கேன்னு
போயி
விழ!
★★★

பூன வழி மறிச்சி
போகாதே
என்று சொல்ல

நாயி வழி மறிச்சி
நானும்
வர்றேன்
என்று சொல்ல

வளத்த
பூச்செடிய
வாகாக
வருடிவிட்டு

படிச்ச
படித்துறைய
பாத்து
அழுதுபுட்டு


வாறேன்னு
சொன்னதுமே
வாகை
மரமங்கே
வாடி
அழுததய்யா!

போறேன்னு
சொன்னதுமே
பூவரசு
மரமங்கே
புலம்பி
அழுததய்யா!
★★★

தூங்க மகனுக்கு
அங்க
தூளி
கட்ட
முடியலய்யா!

வெளஞ்ச
மகளுக்கு
அங்க
வேலி
கட்ட
முடியலய்யா!

நாய் குரைக்கும்
சத்தத்துக்கு
நாங்க
நடுங்காத
நாளுமில்ல!

போய்ப் பதுங்கும்
பொந்துக்குள்ள
அய்யோ
புடுங்காத
தேளுமில்ல!
★★★

பட்ட கத சொன்னமின்னா
ஒங்க
மனம்
பத்தி
எரியுமய்யா!

அவுக . . .
சுட்ட கத சொன்னமின்னா
ஒங்க
மனம்
துடிச்சி
எரியுமய்யா!
★★★

எங்கமன வேதனைய
எழுத்தாக்க
நெனச்சமுன்னா
அய்யோ அந்த
எழுத்தாணி
உருகுமய்யா!

பாவி மன
வேதனைய
படமாக்க
நெனச்சமுன்னா
அய்யோ அந்த
படச்சுருளும்
கருகுமய்யா!


ஒரு வலியா
இரு
வலியா
ஒப்பாரி
வச்சி
அழ!

இது வழியா
அது
வழியா
எங்கேன்னு
போயி
விழ!

-அறிவுமதி

செம்மொழி‍ - காரணப் பெயர்
செம்மொழி‍ - காரணப் பெயர்

செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்!
***

அறிவு மதி

காதலின் கரையில்

பிரியங்களின்
கரையில்
நீயும்
நானும்
நமக்கு
இடையே
நகர்கிறது காதலின்
நதி
இருவரையும்
இணைத்து
எனது
கனவினை
பிரதிபலிக்கிறது
நீரின் ஆழத்தில்
புன்னைகைக்கும்
உனது வதனம்
உனது
சொற்களை
விதைத்து நகர்கிறது
காலம்
என்னுள் கிளை
பரப்பி முகிழ்க்கிறது
காதல்
நமது
நினைவுகள் நீந்தி
கொண்டிருக்கிறது
காதலின்
கரையில்
உனது கரையின்
கால்களில்
எனது முத்தங்களை
இடுகிறேன்
சிறு அலை என
காலத்தின்
எல்லைகளுக்கு
வெகு தொலைவில்
சங்கமிக்கும்
இந்நதியில்
நீயும் நானும்


காதலின் விருட்சம்


நினைவுகள்
உதிர்ந்து
பரவுகிறது
வெளியங்கும்

எங்கும்
வியாபித்த
உன் காதலை
சுட்டுகிறது
எனது கிளைகள்

உனது
நினைவுபறவைகளை
கூடுகட்டி
சேமிக்கிறேன்எனது
காதலின்
விருட்சம் செழிக்கிறது
நீயும்காதலும்
உள்ள மண்ணில்

எனது
கனவுகள்
மலர்ந்தும் கனிந்தும்
காதலின்
விதைகளை தூவுகிறது

சமயங்களில்
சொற்கள்
எனது
வேரருப்பினும்
உனது
வருகையின்
நம்பிக்கையில்
துளிர்க்கிறது
வெட்டப்பட்ட வேர்

கவிஞனில்லை தந்திரக்காரன்நீங்கஅறீவீர்களா
நான்
கவிஞனில்லை
தந்திரக்காரன்
வார்த்தைகளை
கொண்டு
தந்திரங்கள்
செய்பவன்
சொற்களை உடைத்தும்
கலைத்து பின்
சேர்த்தும்
உங்கள் விழிகள்
அறியாமல்
வேடிக்கை காட்டும்
ரசவாதி
எனது
கவிதைகள்
என்பது
கட்டுக்களை உடைத்து
செல்வதுமில்லை
சாஸ்வதம் குறித்து
பேசவுமில்லை
உங்கள் கண்ணீரை
இல்லை ஆமோதிப்பை
ஏந்தியதும் இல்லை
அவைகள்
சாலையோர
விருட்சங்கள்
பயணிக்கையில்
உங்கள் விருப்பத்தின்
பேரில் சற்று
ஓய்வெடுக்கலாம்
ஆனால்
எனக்கோ
அது தீராத மழை
எப்போதும்
நினைகிறேன்
ஒரு சிறுவனென
குதுகலித்து

உன் கணவன்

இரவு
முழுக்க
அமர்ந்து இருந்தேன்
உன்
நினைவு
மரத்தடியில்
அது எனக்கு
போதி
எவ்வளவு
அழகாய்
கைகளை
பிடித்தாய்
இன்னும் மணக்கிறது
உன் வாசம்
பட்டாம்பூச்சி
பிடித்த
கைகளில்
ஒட்டும்
வண்ணம் போல்
உன்
வார்த்தைகள்
இன்னும் காற்றிலே
என்னவெல்லாம்
கனா கண்டேன்
நீயும்
நானும்
இதில்
எதாவது
செய்திருப்பனா
உன் கணவன்

_________________________

வெறும் கரங்களோடு

வெறும்
கரங்களோடு
திரும்புகிறேன்
ஏதோ
ஒன்றின்
ஞாபக
மறதியாய்
மீண்டும்
நினைவில்லா
அந்த
நினைவுகள்
என்னுள்
வெறுமை
நிரம்புகிறது
நீரற்ற
மீனை
போல்
பரிதவிக்கிறது
நம்பிக்கை
வாழ்வின்
மூடப்பட்ட
கதவுகளில்
மோதி
கலைத்து போகிறேன்
இருந்தும்
காத்து
கை கொடுக்க்ப்பது
தெய்வமோ
எதோ ஒன்று
என்னை
கரையில்
சேர்க்கிறது

______________

வார்த்தை

மௌன
தவமிருந்தேன்
வார்த்தை வரம் பெற
வறண்ட
நிலம் நிரம்பும்
மழையென
நிரம்பி
வழிகிறேன்
உன்
சொற்களின்
அன்பில்
சொற்களை
நீ
கவனமாக
கையாளுகிறாய்
மேலும்
கவனமாக
கையாள்கிறது
உன்
சொற்கள்
எனை
சமயத்தில் மலர்களென
சமயத்தில் சுடரென
ஒளிர்ந்தும் மலர்ந்தும் வெளிப்படுகிறது
உன் சொற்கள்
கடல் கொண்ட
உயிர்களென
உன் சொற்கள்
சமயங்களில்
கொள்கிறது
தாய் பறவையின்
சிறகை போல
அடைகாக்கிறது
சமயங்களில்
ஏதாயினும்
உன் வார்த்தைகள்
எனக்கு வரமே
நம்மால்
வார்த்தைகள் வாழ்கிறது
வார்த்தையால்
நாம் வாழ்கிறோம்
_______________________________________________

என் செல்ல தேவதைக்கு


சாபங்களின்
துயர் பாலையில்
உனது
வார்த்தைகள்
வரமென
நனைத்தது
உயிரின் ஆழத்தை
உனது
சிறு விரல்களின்
ஸ்பரிசத்தில்
சாப தழும்புகள்
மறைந்து
வண்ண மலர்களென
நிறைந்து கிடக்கிறேன்
வழி
தொலைந்த
வனத்தில்
எவருமின்றி
திரிந்த போது
விரல் பிடித்து
அழைத்து செல்கிறாய்
ஒளி தேசம் நோக்கி
நினைவில் கொள்
உனது கரங்கள்
பற்றியது
எனது விரல்துளி
மட்டுமல்ல
உயிர் துளியும்
கூட

மழையும் நீயும்

வாசலில்
மழை
வீட்டினுள்
இருந்தும்
நனைந்தேன்
நீ பேசிகொண்டிருந்தாய்

நீயும்
மௌனமாய்
நானும்
மௌனமாய்
இருவருக்குமாய்
பேசிக்கொண்டிருந்தது
மழை

எனக்கு
மழை பிடிக்கும்
நனைந்தேன்
உனக்கும்
பிடிக்குமென்றாய்
இப்போது
கரைகிறேன்

உன்னை
ரசித்து
கொண்டிருந்தேன்
மழை
பொருமி தீர்க்கிறது
தன்னை
ரசிக்கவில்லை
என

வார்த்தைகள் மட்டுமேஅனிச்சையான
ஒரு கணத்தில்
நிகழ்ந்து
விட்டது இப்பிரிவு
வார்த்தைகள்
உடைந்து
பிளவு பட்டு
நிற்கிறோம்
யவனம்
மிகுந்த என்
பிரியங்களை
சொற்களின்
பாத்திரத்தில் நிரப்பி
உனக்கென
உனது கரங்களில்
ஏந்திகொள்வாய் என
எண்ணினேன்
நீயோ
என்னையும்
சேர்த்தே நொறுக்கி
வீசி சிரிக்கிறாய்
ஆயிரம்
துகள்களாய் வீழ்ந்தும்
அத்தனை
சிதரல்களிலும்
உன் மீதான
காதல் பரவி
மேலும் காதலிக்கிறேன்
என்றேனும்
என்னை
நினைவு கூர்கையில்
எனது வார்த்தைகள்
என்னை நினைவு
கூறும்
அப்போது
வார்த்தைகளை
ஏந்தி அழாதே
அவை எப்போதும்
வார்த்தைகள்
மட்டுமே

தோளில் விழும் மழை

ஜன்னலின்
துவாரங்களினுடே
வழிந்து
கொண்டிருக்கிறது
சூரிய வெளிச்சம்

இந்த
அறையில்
நானும் இருளும்
மட்டுமல்ல
தனிமையும்
துயரும்
கூட

இந்த
அறையினின்றும்
உனது
நினைவினின்றும்
வெளியேற வேண்டும்

வானமோ
அடுத்த
மழைக்கு
ஏற்பாடுகளை
செய்து கொண்டிருக்கிறது
எல்லா
வெளியும்
உனது நீட்சியென
விரிகிறது
போக்கிடம்
இன்றி
தவிக்கையில்
தோளை தட்டி
பெய்கிறது
மழை
இன்னும் வாழ்க்கை
இருக்கிறெதென

பிரிவு


எதிர்பாரா
மரணமென
நிகழ்கிறது
உனது பிரிவு
இரண்டுதுளி
கண்ணீருக்கும்
கூட
இடமின்றி

வாழ்த்துக்கள்

17 -09 -2010 அன்று பிறந்த நாள் காணும் நண்பர் தஞ்சை ஸ்ரீனிவாசனுக்கும் திருமதி ஆதிரா@பானுமதி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் பானுமதி அவர்கள் 6000 ௦௦௦பதிவுகல் கடந்து மிக சிறப்பாக ஈகரை வழி நடுத்துவதர்க்காக மட்டுமின்றி எனக்கு பிடித்த சில நல்ல மனிதர்களில் இவர்கள் இருவரும் உண்டு அதற்க்கு இந்த தருணம் சரியாய் இருந்தது இதை ஈகரையில் வாழ்த்த வேண்டும் ஆனாலும் எனது இந்த வலைப்பூவிலேயே வாழ்த்தலாம் என இந்த பதிவை இடுகிறேன் இவர்கள் இருவரையும் வாழ்த்தும் அளவு நான் பெரியவனில்லை ஆனாலும் இருவருக்கும் ஒரு கவிதை இட வேண்டும் என ஒரு ஆசை ஆனால் ஓகோவென்று முகஸ்துதி செய்வது போல் இருந்து இதற்க்கு இந்த பயல் சும்மாவே இருந்திருக்கலாம் என தோன்றிவிடகூடாதே என்ற அச்சமும் இருக்கிறது ஆனால் கவிதை இட வேண்டும் என்ற ஆசையும் விடவில்லை இறை அருளால் சென்ற வருட ஒரு இலக்கிய இதழை புரட்டி கொண்டிருந்த போது எனக்கு மிக பிடித்த தேவதேவன் கவிதை ஒன்றை வசிக்க நேர்ந்தது அதையே இவர்களுக்கு வாழ்த்து இடுகிறேன்

கேண்மை
வின் தழுவி அளாவும்
இந்த மஞ்சுகளை நெருங்கித்
தீண்டுமின்பம் காண்பதற்கோ
நெடிதோங்கின இந்த மலைகள் ?

தீண்டி சிலிர்த்து
செழித்து உருகி
தீராது அருவி நிற்கின்றன

மஞ்சு தவழும்
இந்த மலைகளின் சகவாசத்தாலோ
நெடிதோங்கி வளர்ந்து நிற்கின்றன
இந்த மரங்களும்

மலைகளும் பெரிதுஉவக்கும்
இந்த மரங்களின் சகவாசத்தால்தனோ
வற்றாத
நீரும் ஆங்கு தவழும் காற்றும்
நிழலும் பூவும் கனிகளும் தேனும்
பல்லுயிர்களின் கூட்டுறவு வாழ்வும் போல்
இனிக்கின்றனர் சில மனிதர்கள்

இந்த இனிக்கும் மனிதர்களுக்கு எனது வாழ்த்துகள்

என்னை நான்


எல்லோரையும்
கடந்து
போகிறேன்
சமயங்களில்
என்னையும்
செல்கின்ற
இடங்களில்
விட்டு விட்டு
திரும்புகிறேன்
என்னை
மீண்டும்
தேடி
கிடைப்பதற்குள்
தொலைத்து
விடுகிறேன்
போகும் இடங்களில்
மீண்டும்
என்னை
தொலைப்பதற்கும்
தேடுவதற்குமே
சரியாய்
இருக்கிறது
வாழ்க்கை
பின் எங்கே
வாழ்வது


வாழ்க்கையா வார்த்தையா

உனது
விவாஹம்
குறித்த
விவாதம்
எழுகையில்
தொண்டையில்
அடைப்பது
வாழ்க்கையா
வார்த்தையா


பின் தொடர்கிறது

எல்லோருக்கும்
கொடுத்து
விடுகிறேன்
இதயத்தை
இலவச இணைப்பென
உரியவள்
வாசல் வருகையில்
இடமின்றி
உதிர்த்து செல்கிறாள்
கண்ணீர் விதைகளை
அவை நெருப்பின்
கிளை பரப்பி
அழிவின் தாண்டவம்
புரிகிறது
உயிரோ
அவள் சென்ற
தடத்தில்
பதிந்த சுவடுகள்
முகர்ந்து
யாருமற்ற
குட்டி நாய்
எல்லோர் பின்னும்
வருவது போல்
பின் தொடர்கிறது

உனக்கென விட்டு செல்கிறேன் பிரியங்களையும் கண்ணீரையும்

எல்லாம்
முடிந்துவிட்டது
பாதங்களின் கீழ்
நழுவிக்
கொண்டிருக்கிறது
பிரபஞ்சம்
சொல்வதற்கும்
ஏதுமில்லை
செல்ல வேண்டியதுதான்
இருந்தும்
ஏதோ ஒன்று
உனக்கான
ஒன்று
நெஞ்சில் இறங்குகிறது
பெரும் பாரமாய்
யாதென்று அறிவதில்லை
இருப்பினும்
உனக்கென விட்டு
செல்கிறேன்
பிரியங்களையும்
கண்ணீரையும்

பெண் பிள்ளைகள்

பெண் பிள்ளைகள்

பிறக்கும்போதே

பழகவேண்டும்

அவர்கள் அற்ற

நாட்களை

எவ்வாறு

தனித்து இருப்பது

என்று

ஏனெனில்

அவர்கள்

வளர்ந்த பிறகு

பிடுங்கி மாற்றப்படும்

மரம் போன்றவர்கள்

ஆணி வேர்

பதிந்த மரம்

வெற்றிடம் செல்ல

வளர வெகு

கடினம்

ஆனால்

மரம் இருந்த

பூமி பள்ளம்

காலம்

முழுதும்

தங்கி நிற்கும்

அக்காயத்தை

வண்ணத்து பூச்சி ஏன் உயர பறக்க கூடாது

வண்ணத்து பூச்சி

ஏன் உயர

பறக்க கூடாது

தன் சிறகின்

வண்ணங்களை

வனமெங்கும்

நிரப்பியபடி

நீலமும்

சிவப்பும்

கொண்ட மேகங்கள்

வண்ணமாய் மலரட்டும்

மரங்களின் கிளைகளில்

பூக்களென மாறட்டும்

நிதமும் வானம்

காணட்டும்

அதன் சிறகுகளில்

வானவில்

தனியே பறக்கும் தும்பி

தட்டான்பூச்சிகள்


விளையாட


குழந்தைகள்


இன்றி


அமர்ந்தே இருக்கிறது


அதன்


கண்ணாடி சிறகுகள்


பிஞ்சு விரல்களை


எண்ணி வீரல்


கொண்டது


இப்போதெல்லாம்


குழந்தைகள்


நிஜத்தை விட்டு


நிழலில்


வாழ பழகி


கொண்டனர் போல


ரசித்த கவிதை

ஞானம்சித்தார்த்தனைப் போல்

மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு

நடுராத்திரியில்

வீட்டைவிட்டு

ஓடிப்போக முடியாது என்னால்முதல் காரணம்

மனவியும்,குழந்தையும்

என்மேல்தான்

கால் போட்டுக்கொண்டு தூங்குவார்கள்

அவர்கள் பிடியிலிருந்து

தப்பித்துக் கொள்வது அவ்வளவு எளிதல்லஅப்படியே தப்பித்தாலும்

எங்கள் தெரு நாய்கள் எமன்கள்

லேசில் விடாது

என்னைப் போன்ற

அப்பாவியைப் பார்த்து

என்னமாய் குரைக்கிறதுகள்மூன்றாவது

ஆனால்

மிக முக்கியமான காரணம்

ராத்திரியே கிளம்பிவிட்டால்

காலையில்

டாய்லெட் எங்கே போவது

என்பதுதான்.

-தபசி.

நானே அவனை மன்னித்து விடலாம்

சாலை
நிறைந்த
சேற்றினை மேல்
எரிந்து கடக்கிறது
ஒரு வாகனம்

வெகுண்டு
எழ நினைத்தேன்
அதனால் ஏதும்
நிகழாது

அவ்வாறு
நிகழ்வதால்
அவன் வாகன
கண்ணாடியை நொறுக்கலாம்
நீண்ட மணித்தியால
விவாததிற்கு பின்
ஒரு மன்னிப்பை
கோரலாம்
அதுவும்
நாய்க்கு வீசும்
ரொட்டி துண்டென
வீசுவான்
அதற்க்கு
நானே அவனை
மன்னித்து விடலாம்
என் இயலாமைக்கு
இதை விட
சிறந்த பெயர்
ஏதும் இருக்க இயலாது

நன்றி தோழி

வாழ்வின்
துயர்
மழைகளில்
குடையாகிறது
உன் நடப்பு

இலக்கியத்தில்
பெண்களுக்கு
பருவத்திற்கு
ஒரு பெயர்
நட்ப்பிர்க்கு
ஒரே பெயர்

வாழ்வின்
சரிவுகளில்
கை கொடுக்கிறது
உன் வார்த்தைகள்

உன்
நட்பின் மூலம்
கைபிடித்து
அழைத்து
செல்கிறாய்
நம்பிக்கை
தேசத்திற்கு

ஓயாமல்
நகரும் வாழ்வில்
உன் நட்ப்பே
இளைப்பாறுதல்

ஒரு
வேளை
நாம் பிரியலாம்
ஆனால் உன்
பெயரை
கேட்கும் பொழுதில்
மலர்ந்து விடுகிறது
நட்பின் மலர்
நன்றி இறைவா
சாபம் கொடுத்தே
பழக்கப்பட்ட
நீ கொடுத்த
வரம் இந்த தோழி
இந்த நட்ப்பு

ஒரு மலர் விருட்சம்

ஒரு
மலர் விருட்சம்
கொள்ளை
கடை பகுதியில்

பிரபஞ்சத்தின்
பரபரப்பு
அற்ற தனி
சூழலில்

மண்ணில்
விழுந்த
விதைக்கு
மலர்களை
பரிசாய் தந்து
கொண்டிருந்த
விருட்சம்

அசாதரணத்தில்
அங்கே
சென்ற போது
வார்த்தையை
காட்டிலும்
சிறிய பறவைகள்
மலர்களில்
முத்தம்
பதித்து கொண்டிருந்தது
தன்
உதிர்ந்த
மலர்கள்
புடைசூழ
விருட்சம்
நின்றது ஒரு
அழகிய கனவென

சுழல
தொடங்கியது
பிரபஞ்சம்
விருட்சதினை
அச்சாய் கொண்டுஊர் குருவிகள்

இப்போதெல்லாம்
ஊர் குருவிகள்
காண
கிடைப்பதில்லை

மரங்களோடு
மனதையும்
அழித்த
மனிதர்களோடு
வாழ
பிடிக்கவில்லை போல

மரம்
அற்றுப்போனதால்
கூகுளில் கூடு
கட்டி இருக்கலாம்

கைபேசி
கோபுரங்களின்
நிறைந்த
அலைவரிசையில்
விஷம் கக்கும்
வார்த்தைகளால்
அருகி இருக்கலாம்

உயிரற்ற
மின்வடங்களுகாய்
உயிரை தரும்
மரம்
அழிப்பவர் ஆயிற்றே
நாம்

இது
தொலைந்ததில்
வருத்தம் தான்
ஆனாலும் பெரும்
கவலை
நாளை இவர்கள்
இந்த
பூமிபந்தை
தொலைத்து
விட கூடாதே

மூன்று ஜென் கவிதைகள்

என்னுள்
தேடுகிறேன்
இல்லை கிடைக்கும்
வரை

தேநீர்
தொண்டையில்
இறங்குகிறது
நிகழ் காலம்

தூக்கி
எறிந்துவிட்டேன்
தேவையில்லை
மனது

கடல்வெளியாய் நீ

உன்
கரைகளில்
நின்று உடைந்த
என்னை
பொறுக்குகிறேன்
கிளிஞ்சல்கள் பொறுக்கும்
சிறுமியென
உன்
வார்த்தைகள்
மேலும்
அலைகழிக்கும்
உக்கிரம் நிறைந்த
அலைகலேன
என்
கனவினால்
கட்டும்
மணல் வீடுகளை
கலைத்து
இன்பம் கொள்கிறாய்
இறுதியாய்
உன் முன்
மண்டியிட்டு
கேட்பது
என் உயிரை
எடுத்து கொண்டு
உடலை
வீசி விடாதே
உன் கரைகளில்
அநாதை
பிணமாய்

_________________

சந்திப்பு

என்னதான் ஆனாலும்
நீ ஒரு சுயம்பு
நான் ஒரு சுயம்பு
உன்போக்கில் நீ
என் போக்கில் நான்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்
இருபுள்ளிகள்

நம் சந்திப்பு அதாவது
புரிந்துகொள்ளல் அன்பு முதலானவை
எங்கு எப்போது எவ்விதம் கிட்டும் ?

சம எடையுள்ள இரண்டுக்கும்
சம அந்தஸ்து அளிக்கும் நீதியுணர்வில்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்
இரண்டு புள்ளிகளுக்கு மத்தியில்
தன் செம்மத்திக்காய்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும் புள்ளி--தேவதேவன்

உதயம்

முன் நடக்கும் பெண்ணணங்கின்
நீலவானக் கொண்டையின் கீழ்
நிலப்பூவே மதுரக்
கழுத்தாய் சரிந்த தோள்வரையாம்
என் கண்கள் மட்டுமே தொடு[ம்]வானில்
கைக்குழந்தைமுகம் ஒன்று சிரிக்கிறது எனக்காக
இவ்வுலகம் எனக்காக----------தேவதேவன்

தாய்வீடு

பாதுகாப்பையே தேடுபவர்கள்
பாதுகாப்பை அடைவதேயில்லை.
பொருளையே தேடுபவர்கள்
அன்பை அடைவதேயில்லை.
இன்பத்தையே விழைபவர்கள்
நிறைவை அடைவதேயில்லை.
ராணுவத்திற்கும் கோரிக்கைகளுக்கும்
பெருஞ்செலவுபுரியும் உலகிலன்றோ
நாம் வாழ்கிறோம்.

நல்லாசனமிட்டபடி
கையில் சீப்புடன்
தன் மகள் சகுந்தலாவின்
தலை ஆய்ந்துகொண்டிருக்கிறாள்
அம்மா.
சிக்கலில்லாத கூந்தலில்
வெகு அமைதியுடன் இழைகிறது சீப்பு.

தாங்கொணாத
ஒரு துயர்க் கதைக்குப் பின்தான்
திடமான ஒரு முடிவுடன்
பேராற்றங்கரையின்
தருநிழல்மீதமர்ந்திருக்கும்
தாய்வீடு திரும்பிவிட்டிருக்கிறாள் சகுந்தலா.---தேவதேவன்

கண்டதும் விண்டதும்

மலையுச்சியேறியவன்
தான் கண்டு கொண்டதை
ஒரு கோயிலென வடித்துவிட்டுக்
கீழிறங்கினான்.

கோயில் சென்றவன்
உதட்டு பிதுக்கலுடன்
கைவிரித்தபடி
கீழிறங்கினான்.

கீழே
ஒரு புல்
அய்யோ,அது
காற்றிலா அப்படித் துடிதுடிக்கிறது?
ஒளியிலா அப்படி மினுமினுக்கிறது?

அங்கே
தலைப்பாகையும்
அரையாடையுமாய்ச்
சுள்ளி விறகு சேகரித்துச்
செல்லும் ஒரு மனிதனை
காதலுடன் கவலையுடனும்
கண்டு கொண்டமையோ அது?

விண்டுரைக்க முடியாத
மெய்மையின் சொற்கள் தாமோ
இந்த மவுனப் பிரமாண்டமும்
பேரியற்கையும்
இந்த மனிதனும்? --devadevan

ஆற்றோரப் பாறைகளின்மேல்

ஆற்றோரப் பாறைகளின்மேல்
அமர்ந்திருக்கும்
இக் கல் மண்டபங்கள்தாம்
எத்தனை அழகு!
எத்தனை எளிமை!
எத்தனை உறுதி!
எத்தனை தூய்மை!

பூஜை வேண்டாமல்
விக்ரகங்கள் வேண்டாமல்
குழந்தைகள் துளைத்து
கும்மாளாமிட்டுக் கொண்டிருக்கும்
இந்த ஆற்றினைப் பார்த்துக்கொண்டேயிருப்பதற்கோ
அமர்ந்துவிட்டன இக் கல் மண்டபங்கள்
இங்கே நிரந்தரமாய்?

சுற்றுச் சுவர்களில்லாத
அதன் உள்வெளிகளில்
'உள்ளொன்றும் புறமொன்றுமி'னால்
உருவாகும் துயரேதுமின்றிச்
சுழன்று கொண்டிருக்கும் சக்கரத்தினைக்
கண்டு நின்றனரோ புத்தர்? -devadevan

நீர் சேகரித்த நத்தைக் கூடுகள்

நீர் சேகரித்த
நத்தைக் கூடுகள்
கானகத்தில் வழி தவறிய
சிறுவனின் தாகம் தணிக்கலாம்
பாதாளச் சிறையிலடைக்கப்பட்ட
இளவரசியை உயிர்த்திருக்க வைக்கலாம்
நண்பகல் வரை கத்திக்கொண்டிருந்த
தவிட்டு வால் குருவியின் தொண்டையை
இதப்படுத்தலாம்.
தேனுண்ணும் வண்ணத்துப் பூச்சியினுக்கோ
கவிதை எழுதும் எனக்கோ
தாகம் குறித்துச் சொல்ல
எதுவுமில்லை
ஒருவேளை
மென் சிறு புன்னகையை
எப்போதும் தேக்கி வைத்திருக்கும்
அவளின் ஈர உதடுகளுக்குத்
தெரிந்திருக்கலாம் --ayyanar

ராபர்ட் ஃபிராஸ்ட் கவிதைகள் மொழியாக்கம் : சா.தேவதாஸ்

போகாத பாதை

மஞ்சள் வனமொன்றில் இருபாதைகள் பிரிகின்றன
இரண்டிலும் போகமுடியாதது வருந்த வைக்கிறது
ஒரு பயணியான நான் நீண்டநேரம் நின்று
என்னால் முடிந்தமட்டும் ஒன்றையொன்று உற்று நோக்கினேன்.
ஒன்று புதரில் எங்கே வளைந்து திரும்புகிறதென்று
மற்றொன்று சீரியதாய் இருந்தது இன்னும்
தடங்கள் படியாது புல் நிறைந்ததாயும்
அக்காலையில் இரண்டும் சமமாகக் கிடந்தன.
எந்தக் காலடியும் பதிந்திராத இவைகளில்
முதல் பாதையை இன்னொரு தினத்துக்கு ஒதுக்கினேன்!
ஒருபாதை இன்னொன்றாகக் கிளைத்துச் செல்வதறிந்ததும்
திரும்பி வருவேனா என்று சந்தேகித்தேன்.
இதனை பெருமூச்செறிய கூறிக்கொண்டிருப்பேன்
பல யுகங்கள் கழித்தும்
வனமொன்றில் இருபாதைகள் பிரிந்தன, நான்
இதுவரை போகாத பாதையைத் தெரிவு செய்தேன்.
அதுதான் உண்டாக்கியது எல்லா வித்தியாசங்களையும்.

*********************************

தொலைவாகவும் இயலாது ஆழமாகவும் இயலாது

கடற்கரை ஓரமாய் உள்ளவர்கள்
திரும்பி ஒரே திசையில் நோக்குகின்றனர் எல்லோருமாக.
தம் முதுகைத் திருப்புகின்றனர் நிலத்திற்கு
நாளெல்லாம் நோக்குகின்றனர் கடலினை.
கப்பலொன்று தன் உடற்பாகத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு
ஈரத்தரை பிரதிபலிக்கிறது புல்போல
நிற்கும் கடற்காகத்தை.

நிலம் வேறுபடக்கூடும் மேலும்
ஆனால் நிஜம் எதுவாயினும்
நீர் வந்து சேர்கிறது கரைக்கு
மக்கள் பார்க்கின்றனர் கடலினை

அவர்களால் தொலைவாக பார்க்க முடியாது
அவர்களால் ஆழமாகப் பார்க்க முடியாது
ஆனாலும் எப்போதேனும் தடையிருந்தா
அவர்களின் கவனிப்புக்கு.

*********************************

பனிப்பாலைப் பகுதிகள்

பனி வீழ்வும் இரவு கவிழ்தலும் விரைவாக
கடந்த காலத்துள் போய்க்கொண்டிருந்ததாக நான் கண்ட வயலில்
தரை அநேகமாய் பனியால் மூடுண்டது மிருதுவாய்
ஆனாலும் தலைகாட்டும் சில புல்வண்டுகள்
அதனைச் சூழ்ந்திருந்த வனங்கள்
கொண்டிருந்தன அவற்றினுடைவைகளை
விலங்குகளெல்லாம் அடைந்து கிடக்கும் தம் குகைகளில்
எண்ணிப்பார்க்க மறந்தவனாய் இருக்கின்றேன்
நானறியாதபடி என்னை உள்ளடக்கிக் கொள்ளும் தனிமை.

தனித்திருக்கும் அத்தனிமை
தான் தணிவதற்குள் மேலும் தனிமை கொள்லும்
இருளார்ந்த பனியின் வெண்விரிப்பாக
உணர்வு பலமற்று, வெளிக்காட்ட ஏதுமின்றி.

வெற்று வெளிகளில் அவை கலவரப்படுத்த இயலாது என்னை
மானுட இனம் இல்லாத நட்சத்திரங்களுக்கிடையே
என் வீட்டருகே கொண்டிருக்கிறேன் அதனை
இப்பாலைவனப் பகுதிகளாலேயே என்னைக் கலவரப்படுத்த.

*********************************

சூது

பருத்த வெண்சிலந்தி ஒன்றைக் கண்டேன்
வெள்ளை மூலிகைச் செடிமேல் பூச்சியொன்றை கவ்வியபடி
கெட்டியான வெண்பட்டுத் துணிபோல
மரணம் மற்றும் நோயின் பாத்திரங்கள்
ஆயத்தமாயுள்ளன காலை நாடகத்தை ஆரம்பிக்க
சூனியக்காரியின் கஷாயத்தில் சேர்ந்திருப்பவைபோல
ஒரு பனித்துளி சிந்தி, மலர் நீர்க் குமிழியாக
மற்றும் காகிதப் பருந்தென தூக்கிச் செல்லப்படும் உயிரற்ற சிறகுகள்.

வெண்மையாய் இருப்பதற்கும்
பாதையோரத்து நீலத்திற்கும் மற்றும் மாசற்ற மூலிகைக்கும்
அம்மலருக்கும் என்ன சம்பந்தம்?
உச்சியில் சிலந்தியை நிறுத்தி
அப்புறம் இரவில் வெண்பூச்சியை அங்கு செல்ல வைத்தது எது?
திகைப்புறச் செய்யும் இருளின் சூதன்றி வேறென்ன?
எவ்வளவு அற்பமானதெனினும் கட்டுப்படுத்தும் சூது.


இலைகள் உதிரா மரம்

இருக்கத்தான் செய்கின்றது
எல்லோரிடத்தும்
ஓர் கதை
பொதுவில் சொல்லவும்
மறைத்துச்சொல்லவும்
ரகசியமாய் சொல்லவும்
தனக்குள் சொல்லிக்கொள்ளவும்
அதன்
வடிவமும் முடிவும்
மட்டுமே மாறி மாறி
வதைபட்டுக்கொண்டிருக்க
இலைகள் உதிரா
மரக்கிளைகளைக் கொண்ட
உணர்வுகளற்ற
நீர்த்த வெளியில்
துள்ளுவது
எதுவாக இருந்துவிடமுடியும்

--http://nathiyalai.wordpress.com

ஒரு கூழாங்கல்

ஒரு கூழாங்கல்
—————–
ஒரு கூழாங்கல்லை
வாயில் போட்டுக் கொண்டேன்
அது இதுவரை தான் சார்ந்திருந்த
மண்ணின் சுவையை
நாக்கில் தடவுகிறது

மண்
கல்லின் சுவையை
தக்கவைத்துக்கொண்டிருக்குமா என
ஒரு கூழாங்கல் யோசிப்பதேயில்லை

- மனுஷ்ய புத்திரன்

காற்றிற்கு – மனுஷ்ய புத்திரன்

காற்றிற்கு
வாடைக் காற்று
புயல் காற்று
மழைக் காற்று
அனல் காற்று
கடல் காற்று
என்றெல்லாம் பெயர்கள்

எந்தப் பெயரும் இல்லாமல்
எதையும் கடந்து செல்ல முடியாமல்
கொஞ்சம் காற்றுகள் இருக்கின்றன
நமது உலகில்

அவை உயிரூட்டப் போராடுகின்றன
கண்ணாடி பாட்டில்களில்
அடைக்கப்பட்டிருக்கும்
வண்டுகளுக்கு

- மனுஷ்ய புத்திரன்

கதவு-

பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்

ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன்

கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்

கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன

சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன

பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல

கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது

கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது

கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது

நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன

நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்

மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது

நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்

ஜனனத்தில்
ஒருகதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது

இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா

கதவுதட்டும்
ஓசை கேட்டால்
‘யார்’ என்று
கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம்


மணலின் கதை

உதறி விடுவித்துக்கொண்ட
கைகளை நான் முத்தமிடக் குனிகையில்
தொண்டையை அடைத்ததில்லை
அவமானத்தின் எந்தக்கசப்பும்

நிராகரிப்பின்
நெருப்பை எடுத்து
ஏற்றி வைப்பேன்
வீட்டின் நடுவே ஒரு விளக்கை

திரும்பிப் பாராமல்
போனவர்களின் கால் தடம் பற்றி
தொடர்ந்து போவேன்
ஒரு சந்தேகமுமின்றி

வெளியேறச் சொன்னவர்களிடம்
நாளை மீண்டும் சந்திப்போம்
என்பதன்றி வேறொன்றும்
சொல்லத் தோன்றியதில்லை

இன்று வாழ்ந்து கொண்டிருப்பதில்
எவ்வளவு பனி
எவ்வளவு நட்சத்திரங்கள்
எவ்வளவு தனிமை
எவ்வளவு இயலாமைகள்
ஒரு வருத்தமில்லை
ஒரு துளிக்கண்ணீரில்லை

இன்றென்னைக்
கொல்வதெல்லாம்
உன்
கருணையிலிருந்து பிறக்கும்
ஒரு கனிவு

ஒரு
கடமையிலிருந்து
உதிக்கும்
உன் பரிவு

manushya puthiran

நீராலானது

ஓர் அற்புதத்திற்காக
———————
ஓர் அற்புதத்திற்காக காத்திருக்கிறேன்
அது நிகழவேயில்லை
அற்புதங்கள் இனி நிகழாதென்றே
சகுனங்களும் சொல்கின்றன

ஆனால்
நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது
அற்புதத்திற்கு முந்தைய ஒரு கணம்

இன்னும் ஒரே ஒரு கணம்தான்
என்று சொல்லிக்கொண்டேயிருக்கும்
ஒரு கணம்

இழந்த காதல்
————–
நின்று சலித்த
என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது

மரங்கள் நடப்பது
சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்

ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்

கசங்குதல்
———–
இன்று
உன்னுடையதுபோலவே இல்லை
உன் பிரியம்

என்றாலும்
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நீண்ட நாட்களின்
நீண்ட வெயிலில்
ஓர் உணர்வு
எப்படி கசங்குகிறதென்று

ஒரு மலர் கசங்குவதுபோலவோ
ஒரு துணி கசங்குவதுபோலவோ
ஒரு காகிதம் கசங்குவதுபோலவோ
இல்லை அது

விடுவிப்பிற்குப் பின்
——————–
இத்தோடு
என்னைப்பற்றிய
குற்ற உணர்வுகள் அனைத்திலிருந்தும்
உன்னை விடுவித்துவிட்டேன்

ஆனால்
அது ஏன்
ஒரு வெறுப்பைப்போல
ஒரு பிரிவைப்போல
ஒரு புறக்கணிப்பைப்போல
காட்சியளிக்கிறது?

என்னைப் பற்றிய வருத்தங்கள்
——————————-
நான் உனக்காக
விட்டுச் செல்லும்
சிறந்த பரிசு
என்னைப் பற்றிய
இந்த வருத்தங்கள்

என்னைப் பற்றிய
வருத்தங்கள்
விநோதக் கதைகள் போல
என்னிடம் வருகின்றன
கபடமற்ற ஒரு குழந்தையாக
அவற்றைக் கேட்கிறேன்

என்னைப் பற்றிய வருத்தங்களை
நான் உருவாக்கவில்லை
எனக்கு முன்பாகவே
வெகுகாலமாக
அவை நிலவி வருகின்றன

என்னைப் பற்றிய
உன் வருத்தங்களை
மறுத்து
ஒரு சொல்லும் கூற மாட்டேன்
ஒரு இரகசிய நகக்குறி போல
நம் அந்தரங்கங்களில் அவை வலிக்கட்டும்

என்னைப் பற்றிய
வருத்தங்கள் மட்டும்
இல்லாமல் போனால்
இவ்வளவு காதலை
இவ்வளவு கண்ணீரை
எங்கு போய் மறைப்பாய்