வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

சலித்து போன கடவுள்

சமீபத்தில் ஆர்மீனிய எழுத்தாளரான வில்லியம் மிகைலின் எழுதிய இந்த சிறுகதையை வாசித்தேன். இவர் ஒரு முக்கிய கவிஞர். மூன்று கவிதை தொகுப்புகளும் இரண்டு கட்டுரை தொகுதிகளும் ஒரு நாவலும் எழுதியிருக்கிறார். பகடி எழுத்திற்கு உதாரணம் போலிருக்கிறது இந்த கதை. அதை எளிமையாக தமிழ்படுத்தியிருக்கிறேன்.


***
உலகை சிருஷ்டித்து சலித்து போன கடவுள் எட்டாம் நாளில் ஒரு டெலிவிஷனை உருவாக்கினார். கொஞ்ச நேரம் அதை பார்த்து கொண்டிருந்தார். பிறகு சே.. சகிக்கமுடியலே மோசம் என்று அதை அணைத்துவிட்டு உறங்கிவிட்டார். அவர் உறங்கி எழுந்த போது அங்கிருந்த டிவியைக் காணவில்லை. எங்கே போனது என்று தெரியாமல் குழம்பி போனார். இதனால் என்ன விளைவுகள் உருவாக போகிறதோ தெரியவில்லையே என்று ஆதங்கபட்டார்.

அது நிஜம். சாத்தான் அந்த டிவியை திருடிக் கொண்டு போய் என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த ஆதாம் ஏவாளிடம் விற்று விட்டான். அதுவும் ஆதாம் இல்லாத நேரமாக பார்த்து ஏவாளிடம் பேரம் பேசி மயக்கி அதை விற்றிருந்தான்.

அப்பாவி ஆதாம் விலங்குகளுக்கு பெயர் வைத்து முடித்துவிட்டு பசியோடு வீடு திரும்பி வந்து என்ன சாப்பாடு என்றபடியே ஏவாளை சமையல் அறையில் தேடினாள். அவளை அங்கே காணவில்லை. அவள் வெளிச்சம் மினுமினுங்கும் ஒரு பெட்டியின் முன்னால் ஒய்யாரமாக சாய்ந்தபடியே உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதை கண்டான். என்ன அது கேட்டபடியே அருகில் போய் நின்றான். அவள் நிமிர்ந்து பார்த்துவிட்டு பதில் சொல்லாமல் டிவியை ஆசையோடு பார்த்து கொண்டிருந்தாள் ,

டிவியில் தோன்றிய கவர்ச்சியான விளம்பரங்களை காட்டி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆதாம் கேட்டான். எனக்கும் தெரியவில்லை ஆனால் வசீகரமாகயிருக்கிறது என்றாள் ஏவாள். அவள் அருகில் எப்படி ஒரு பாப்கார்ன் பாக்கெட் வந்தது என்று ஆதாமிற்கு புரியவேயில்லை. அவன் தானும் ஒரு கை நிறைய பாப்கார்ன் எடுத்துமென்றபடியே பசியை மறந்து டிவி பார்க்க துவங்கினான்.

டிவி அவனுக்குள் இச்சையை தூண்டியது. அவன் ஏவாளை வியப்போடு உற்று பார்க்க துவங்கினாள். அப்படி என்ன பார்க்கிறாய் என்று ஏவாள் கேட்டாள். இத்தனை நாட்கள் விலங்குகளுக்கு பெயர்வைக்க போகிறேன் என்று வெட்டியாக அலைந்து திரிந்ததில் உன்னுடைய அழகை ரசிக்க தவறிவிட்டேன். உண்மையில் நீ ஒரு பேரழகி என்றான். அ தன்னை ஆதாம் ரசிக்கிறானே என்று பெருமிதம் கொண்டாள் ஏவாள்.

அவர்கள் இருவரும் தங்களை மறந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள். கடவுள் படைத்த உடலுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது என்பதை டிவி வழியாகவே அவர்கள் அறிந்து கொண்டார்கள். அத்துடன் விளம்பரத்தில் வந்த பல உபயோகப்பொருட்களை தாங்கள் உடனடியாக வாங்க வேண்டும் என்று ஆசை கொண்டார்கள்.

அன்றிரவு புகைபிடிப்பதற்காக ஆதாமின் பண்ணை வீட்டுபக்கம் நடந்துபோன கடவுள் என்ன வாழ்க்கையிது என்று புலம்பியபடியே ஆதாம் வீட்டை கவனித்தார். ஏதோ வெளிச்சம் பீறிட்டுக் கொண்டிருந்தது. ரகசியமாக ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்

அவரால் நம்பவே முடியவில்லை. டிவி ஒடிக்கொண்டிருந்தது. அதன் முன்னே ஆதாமும் ஏவாளும் ஒருவரையொருவர் கட்டிபிடித்து முத்தமிட்டபடியே மல்யுத்தம் போல ஒருவர்மீது மற்றவர் ஏறி அமர்ந்து இறுக்கிபிடித்து உருண்டு கொண்டிருந்தார்கள்.

நிச்சயம் இது தனது எதிரியான அந்த சாத்தானின் வேலை தான் என்று கடவுளுக்கு தெரிந்து போனது. தேவிடியா மகன் நம்ம பிள்ளைகளை இப்படி கெடுத்துவிட்டானே என்று சாத்தான் மீது கடுமையான கோபம் வந்தது. ஒரு வாரம் கஷ்டப்பட்டு நாம உருவாக்கியதை மோசம் செய்து விட்டானே புலம்பியபடியே கதவை ரகசியமாக திறந்து உள்ளே போய் டிவியை அணைத்தார்.

திடுக்கிட்டு எழுந்த ஆதாம் ஏவாளை பார்த்து இந்த தவறுக்காக நீங்கள் தண்டிக்கபட போகிறீர்கள் என்று கோபத்துடன் சொன்னார். இருவரும் தங்களின் பாவச்செயலுக்காக மன்னிப்பு கேட்டார்கள். ஆனாலும் கடவுள் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆதாமே நீயும் உன் வாரிசுகளும் இனிவாழ்நாள் முழுவதும் கேபிள் டிவி இணைப்பிற்காக மாதமாதம் பணம் செலவழித்து சீரழிந்து போவீர்கள். ஏவாளே இனி நீ பிள்ளைகளை வளர்க்கும் பிரச்சனையுடன் பகல் எல்லாம் டிவி பார்த்து உன் நேரத்தை செலவழிக்க நேரிடும் என்ற தண்டனையும் தருகிறேன் என்றார்.
அத்துடன் சாத்தானின் வீட்டை நோக்கி சென்று மோசக்காரனே உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கத்தினார். சாத்தான் முடிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று ஏளனம் செய்தான்.

ஆத்திரமான கடவுள் உலகை அழிப்பதற்கான மஹாபிரளயத்தை உருவாக்கினார். மழை கொட்டியது. வெள்ளம் உலகெங்கும் நிரம்பியது . முப்பத்தி ஒன்பது நாட்கள் பகலிரவாக மழை பெய்தது. நாற்பதாம் நாள் கடவுளின் கோபம் தணிந்தது.

வெள்ளம் வடிந்த பிறகு கடவுள் நோவாவின் கப்பல் என்னவானது என்று காண்பதற்காக சென்றார். அது ஆராத் மலையில் தட்டி நின்றிருந்தது. அங்கே நோவா எதையோ பார்த்து கொண்டிருந்தான். என்ன அது என்று கடவுள் நெருங்கி போய் கண்ட போது அவன் முன்னே இரண்டு டிவிகள் ஒடிக் கொண்டிருந்தன.

எப்படி இரண்டு டிவி வந்தது என்று புரியாமல் கடவுள் கோபபடவே உலகில் உள்ள ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியை காப்பாற்ற வேண்டும் நீங்கள் தானே கட்டளை தந்தீர்கள். அதனால் இரண்டு டிவிகள் காப்பாற்றபட்டன என்றான். கடவுளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை

அதன் பிறகு நோவாவின் வாரிசுகளும் வாரிசுகளின் வாரிசுகளும் பெரிய பெரிய டிவிகளை பார்க்க துவஙகினார்கள். விளையாட்டு சீதோஷ்ணநிலை, அன்றாட செய்திகள், சினிமா என்று சேனல் மாற்றி மாற்றி சலிக்காமல் பார்த்து தொலைக்காட்சி அடிமைகளானார்கள்.

மனிதர்களை தன்னால் திருத்தமுடியாது என்று ஒய்வு பெற்ற கடவுளும் பொறுப்பை தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு தனியாக முதுமையை கழிக்க ப்ளேராரிடா மாநிலத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றுவிட்டார்.
சமீபமாக அவரை தொலைக்காட்சி சேனலுக்காக நேர் முகம் செய்த போது ஒருவேளை தன் படைப்புகளை திருத்தி கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் டிவியை உருவாக்கமல் தவிர்த்துவிடுவேன் என்றார்.

இது விளம்பரத்திற்காக அவர் அடித்த ஸ்டண்ட் என்றே பார்வையாளர்கள் நினைத்தார்கள்.

***

நெஞ்சிரங்க மாட்டீரா?………

சொந்தநாய்களுக்குச்
சொத்தெழுதிவைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நெஞ்சிரங்க மாட்டீரா?

பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!
ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தின் வட்டத்தில்
மனித குலம் நிற்கிறதே!
மனம் அருள மாட்டீரா?

வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு
ரொட்டி ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டும் விரல்கள்
கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்களவெறிக் கூத்துகளை
அறிந்தும் அறியாயோ ஐ.நாவே?

வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கதறும் தாய்மார் மறந்தொழிந்தாயோ
அழத்தெரியாத ஐரோப்பாவே!

அடுக்கிவைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
அழுது தொலைக்கும் பிள்ளைகளின்
பெருங்குரல் கேட்டிலையோ பிரிட்டிஷ் அரசே!

எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும்
ராட்சசபக்ஷே மீதல்ல

ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல

எம்மைக்
குறையாண்மை செய்திருக்கும்
இறையாண்மை மீதுதான்
குரங்குகள் கூடிக்
கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக்

கட்ட முடியவில்லையே
ஆனாலும்
போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல

எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை
எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை

அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்

பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனைமரத்தில்
என்றேனும் கூடுகட்டும்..

———————————————————

இரண்டு குறுங்கதைகள்

காதல்மேஜை.

முள்கரண்டி ஒன்று வெள்ளியால் ஆன ஸ்பூன் ஒன்றை நீண்ட நாட்களாக காதலித்து கொண்டிருந்தது. இருவரும் மிக நெருக்கமாக ஒரே மேஜையில் இருந்தபோதும் ஒருவரோடு மற்றவர் பேசிக் கொள்ளவோ, அணைத்துக் கொள்ளவோ விரும்பவில்லை.


பிரிக்க முடியாதபடி தங்கள் இருவருக்கும் ஒரு பிணைப்பு உள்ளது என்றது முள்கரண்டி. ஸ்பூனோ அதை பெரிதாக கண்டு கொள்ளவேயில்லை.
மாறாக ஸ்பூன் சொன்னது ``முள்கரண்டிகள் அருவருப்பானவை. அவை எதையும் லாவகமாக கையாளுவதேயில்லை. குத்தி கிழிப்பது தான் அதன் சுபாவம்`` என்றது.


முள்கரண்டி தீராத காதலுடன் சொன்னது ``தேனில் கிடந்து ஸ்பூன்களின் குரலும் கூட இனிப்பான இருக்கிறது. அதற்காகவே காதலிக்க விரும்புகிறேன்``.


அதை கண்டு கொள்ளாத ஸ்பூன் வெல்வெட் துணியில் புரண்ட படியே சொன்னது``முள்கரண்டிகள் நிம்மதியற்றவை. அவை மூன்று நாக்குகள் கொண்டிருக்கின்றன. நடந்ததையும் நடப்பதையும் நடக்க போவதையும் ஒன்றாக குழப்பிக் கொள்ள கூடியவை ``என்றது.


அப்போதும் காதல் அடங்காத முள்கரண்டி சொன்னது ``ஸ்பூன்கள் கச்சிதமானவை. அளவுக்கு மீறி எதையும் அவை ஏற்றுக் கொள்வதேயில்லை. என்ன நளினம். என்ன ஒய்யாரம். இதற்காகவே காதலிக்க விரும்புகிறேன் ``என்றது.


ஸ்பூன் அசட்டையுடன் சொன்னது ``முள் கரண்டிகள் ஒரு போதும் சூப்பின் சுவையை அறிய முடியாது. உப்பும் சக்கரையையும் ஒரு போதும் தீண்டமுடியாது. ஐஸ்கிரீமின் குளிர்ச்சியை ஒரு போதும் உணரவே முடியாது. பாவம் அர்த்தமற்ற வாழ்க்கை. ``


அதை கேட்டு சற்றே எரிச்சலுற்ற முள்கரண்டி சொன்னது ``ஸ்பூன்கள் வெட்கமற்று மனிதர்களின் நாக்கை முத்தமிடுகின்றன. தடவி கொடுக்கின்றன. நான் ஒரு போதும் அப்படி இருப்பதேயில்லை. ``

கோபத்துடன் இரண்டும் முகத்தை திருப்பிக் கொண்டன.


வீட்டின் உரிமையாளன் உணவு மேஜைக்கு வந்து சேர்ந்தான். சூடான சூப்பிற்குள் ஸ்பூனை தூக்கிபோட்டான். முள்கரண்டியை ஆவி பறக்கும் இறைச்சியின் நடுவில் குத்தினான். இரண்டும் மௌனமாகின. பசி தீருமட்டும் சாப்பிட்டுவிட்டு எச்சில்பட்ட ஸ்பூனையும் முள்கரண்டி இரண்டும் ஒன்றாக தட்டில் போட்டு எழுந்து சென்றான்.


சுத்தம் செய்யப்படுவதற்காக இரண்டும் ஒரே தண்ணீர் வாளிக்குள் போடப்பட்டன. மிகுந்த ஆவேசத்துடன் ஸ்பூனை கட்டி தழுவியபடியே முள்கரண்டி சொன்னது.

``அன்பே இந்த நிமிசத்திற்காக தான் காத்துக் கொண்டிருந்தேன்``.


ஸ்பூனும் முள்கரண்டியும் மாறி மாறி காதலுடன் முத்தமிட்டு கொண்டன.


***


சித்திரமீன்.

ஆறு வயதிருக்கும் அந்த சிறுவன் தனியே உட்கார்ந்து தனக்குதானே பேசியபடியே கலர் பென்சிலால் படம் வரைந்து கொண்டிருந்தான்.


``ஒரு வீட்டை வரையும் போது யாருமே அங்கே இருக்கிற மீன் தொட்டியை கவனிச்சி வரையுறதேயில்லை. ``


``மீன் தொட்டியை வரையுறது ரொம்ப கஷ்டம். ``


``உலகத்திலயே தண்ணியை வரையுறது தான் ரொம்ப ரொம்ப கஷ்டம். எப்படி வரைஞ்சாலும் அது தண்ணி மாதிரியே இருக்காது. ``


``அந்த தண்ணிக்குள்ளே நீந்திக்கிட்டிருக்கிற மீனை வரையுறது முடியவே முடியாது. அந்த மீன் ஒரு இடத்தில நிக்கவே மாட்டேங்குது. எப்பாவது நின்னா அசைஞ்சிகிட்டே நிக்குது. பிறகு மீனு நினைச்சி நினைச்சி ஒடிக்கிட்டு இருக்கு. ``


``படத்தில வரைஞ்ச மீனு அசையுறதேயில்லை. அதை அசைக்கிறதுக்காக நான் தான் பேப்பரை ஆட்ட வேண்டியிருக்குது. அப்போ கூட மீன் முன்னாடி போறதேயில்லை. ``


``படத்தில் வரைஞ்ச மீன் ஏன் நீந்தமாட்டேங்குதுனு தெரியுமா அதுக்கு ஒரு மேஜிக் பிரஷ் இருக்கு. அதை வச்சி வரையணும். அப்போ அந்த மீனு நீந்தும். ``


``மீனை வரையும் போது அதோட கண்ணை வரையுறது லேசில்லை. கண்ணுக்குள்ளே என்னமோ இருக்கு. அது சுத்திகிட்டே இருக்கு. அது நம்மளை பாத்துகிட்டே இருக்கு. சிரிக்குது. மீனுக்கு நிறைய ட்ரீம்ஸ் வரும். அந்த ட்ரிம்ல அது பஸ்மேல நீந்திகிட்டு போகும். ப்ளைட் மாதிரி ஆகாசத்தில நீந்திகிட்டு இருக்கும். ``


``எனக்கு வீட்டை வரையுறது பிடிக்காது. ``

``அதுல கடல் இருக்காது``


``மரம் இருக்காது``

``பூ இருக்காது``


``அணில் இருக்காது.``


``மேகம் இருக்காது``


``சூரியன் இருக்காது. ``


``ஒரு பறவை கூட இருக்காது``


``ஒண்ணுமே இருக்காது. ``


``எனக்கு எங்க வீட்டை தவிர வேற ஒண்ணுமே வரைய தெரியாது. ``


``ஆனா வீட்டை வரையும் போது யாருமே மீன் தொட்டியை வரையுறதேயில்லை. ``


தனியே உட்கார்ந்து சிறுவன் தனக்குதானே பேசியபடியே படம் வரைந்து முடித்திருந்தான்.

***
இவை புதிதாக வெளியாகி உள்ள எனது 50குறுங்கதைகளின் தொகுப்பான நகுலன் வீட்டில் யாருமில்லை புத்தகத்திலிருந்து இரண்டு குறுங்கதைகள்.

ஹரித்துவாரில் பெய்யும் மழை


என் இருபத்தி நான்காவது வயதில் ஹரித்துவாரில் இறங்கி நடக்க துவங்கிய போது மழை பெய்து கொண்டிருந்தது. சில வாரங்களுக்கு முன்பு தான் மழைக்காலம் துவங்கியிருந்தது. எனது பயண வழியெங்கும் மழையின் தடங்கள். ஈரமேறிய கற்கள், மரங்கள், ரயில்நிலையங்கள், சிமெண்ட் பெஞ்சுகளை கடந்தே ஹரித்துவாருக்கு வந்திருந்தேன்.


மழைக்காலத்தில் பயணம் செய்வது அலாதியானது. பழகிப்பிரிந்த நண்பருடன் மீண்டும் சேர்ந்து பயணம் செய்வது போன்றது. அடர்த்தியான மழை. ஷ்ராவன மாதத்து மழை எளிதில் அடங்காது என்பார்கள். அன்றாடம் கங்கையை பார்த்து களிக்கும் சூரியனை அன்றைய பகலில் காணவில்லை. மேகங்கள் இருண்டு அடர்ந்திருந்தன. வானிலிருந்து கங்கை பூமிக்கு இறங்கியது போன்ற அதே வேகம் தான் மழையிலும்.

யாரும் மழையை பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. சுழித்தோடும் கங்கையில் குளிப்பதற்காக படித்துறையெங்கும் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். நீருக்குள் நின்றபடியே ஒரு குடும்பம் ஆகாசத்தை நோக்கி கைதூக்கி மழையை வணங்கி கொண்டது. அவர்கள் நெற்றியில் பட்டு ஆசிர்வதித்தது மழை.

இது கோடையில் பார்த்த கங்கையில்லை . கோடைகாலத்து கங்கை ஒடுங்கியது. உரித்து கிடக்கும் பாம்புசட்டை போன்றது. ஆனால் மழைக்காலத்தின் கங்கை ஆவேசமிக்கது. துடிக்கும் ஆயிரம் நாவுகள் கொண்டது. கற்களை கூட கரைத்து கொண்டு போய்விடும் என்பது போன்ற வேகம். ஒநாயின் சீற்றம் போல உக்கிரம்.

கங்கையை கண்ணிலிருந்து மறைத்துவிட பார்ப்பது போல மழை வேகமெடுத்தது. ஆற்றின் தடுப்பு பாலத்திலிருந்து ஒரு சிறுவன் உற்சாகமாக குதித்து நீரில் மறைந்தான். படித்துறையெங்கும் ஈரம் வழியும் மனிதர்கள். பொதுவாக மழையை கண்டதும் உயரும் குடைகளை அங்கே காணமுடியவில்லை. ஒரு வயதானவர் மழைக்கு தன்னை ஒப்பு கொடுத்து கொண்டவரை போல கல்லில் அமர்ந்தபடியே ஆற்றை பார்த்து கொண்டிருந்தார்.

அவரது உதடுகளில் மழை பட்டு எதையோ பேசுவது போல கரைந்து ஒடியது. அவரிடம் மௌனம். மகாமௌனம். மழை கரைக்கமுடியாத மௌனம் உறைந்து போயிருந்தது. பலநூறு சூரிய உதயங்களை, மழையை கண்டு பழகிய முதிய கண்கள் அவை. முன்பு இல்லாத சந்தோஷத்தை முதன்முறையாக காண்பது போல அந்த கண்களில் உற்சாகம் பெருகி வழிகிறது. அவர் முன்பாக மழை தத்திக் கொண்டிருந்தது.

தன் உடலில் பட்டு ஒடிவிடுவதை தவிர மழையால் வேறு ஒன்றும் செய்யமுடியாது என்பதை போல அவர் அமர்ந்திருந்தார். இந்த தோல்வியை தாங்க முடியாமல் தானோ என்னவோ மழை காற்றையும் துணைக்கு அழைத்து கொண்டது. ஒங்காரமான வேகம். அவரிடம் அசைவேயில்லை. பசுமாடு ஒன்று மழைக்குள்ளாகவே நடந்து வந்தது. மழை அதையும் விடவில்லை. சற்று எரிச்சலானது போல பசு அதன் வாலால் மழையை விசிறி அடித்து துரத்தியது. மழை துளிகள் பசுவோடு விளையாடுவது போல பாவனை காட்டி துரத்தின.

பசு வேகம் கொள்ளவில்லை. அது திரும்பி மழையை பார்த்தது. பின்பு அதை சட்டை செய்யாமல் மழைக்குள்ளாகவே நடந்து யாரோ தூக்கி எறிந்து போன பூமாலை ஒன்றை முகர்ந்து பார்த்து தலை அசைத்தது. அதன் நாக்கு நெற்றியிலிருது மூக்கு நோக்கி வழியும் மழையை தடவி ருசித்தது. பின்பு நாவால் மழையை தொட்டுவிட முயல்வதை போல சுழற்றியது. மழை பசுவின் மீது போக்குகாட்டி பெய்தது. யாரோ மாட்டை விரட்டினார்கள்.

மழையை வேடிக்கை பார்ப்பவர்கள் இங்கே குறைவு. கங்கையில் பெய்யும் மழையை களிப்போடு பார்த்துகொண்டேயிருந்தேன். ஒரு துளிக்கும் இன்னொரு துளிக்கும் எவ்வளவு இடைவெளியிருக்கும். மழையில் எது முதல் துளி. மழை ஏன் துளியாக பெய்கிறது என்று எண்ணங்கள் தானே உருவாகி மறைந்தன. ஆற்றில் மிதந்துசெல்லும் ஆரத்திபூக்கிண்ணம் மீது மழை பெய்து அதை கவிழ்த்தது. பூக்கள் நீரில் மிதக்கின்றன. ஒவ்வொரு பூவின் மீதும் ஒரு துளி மழை உட்கார்ந்திருக்கிறது.

மழை பெய்கிறது என்பது எவ்வளவு சிறிய வார்த்தை இது. ஒவ்வொரு முறை இதன் போதாமையை முழுமையாக உணர்கிறேன்.

மழைக்காலத்தில் கங்கையை பார்ப்பது பேரனுபவம். ஆற்றை மழைக்காலத்தில் தான் பார்க்க வேண்டும். அப்போது தான் அதன் விஸ்வரூபத்தை அறிய முடியும். மனிதர்களுடனான தனது ஸ்நேகத்தை முறித்து கொண்டுவிட்டது போல ஆறு சீறுகிறது. மனிதர்கள் அதை சமாதானப்படுத்துவது போல வணங்குகிறார்கள். பூக்களால் ஆராதனை செய்கிறார்கள். வணங்கி பாடுகிறார்கள்.
ஆறு சிறகுகள் கொண்டது என்பதை மழைக்காலமே நமக்கு உணர்த்துகிறது. மிதமிஞ்சிய வேகத்தில் ஆறு பறப்பதை மழை நாளில் மட்டுமே காணமுடியும். மனிதர்கள் உருவாக்கிய அத்தனை தடைகளையும் ஆறு மழைக்காலத்தில் தாண்டிச் செல்கிறது. மனிதர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள். தானே அடங்கும்வரை விட்டுப்பிடிக்கிறார்கள்.

ஜல்லிகட்டில் சீறிவரும் காளையிடம் தென்படும் அதே ஆவேசம். அடங்கமுடியாத திமிர். ஆனால் மனிதர்கள் தந்திரம் அறிந்தவர்கள். அவர்கள் ஆற்றை எங்கே தடுக்கவேண்டும். எப்படி ஒடுக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள். ஆறு மழைக்காலத்தில் பகலிரவாக பேசி ஒய்கிறது. கூச்சலிடுகிறது. வெறியேறிய மனிதனை போல கடந்தகாலத்தின் அத்தனை கசடுகளையும் அள்ளி வீசி போகிறது.

ஒரு சிறுவன் ஒடும் ஆற்றில் சிறிய வெண்கல குவளையில் தண்ணீர் அள்ளுகிறான். அவன் கங்கையை சுமக்க ஆசைப்படுகிறான். தன் கூடவே ஊருக்கு கொண்டு போய்விட எத்தனிக்கிறான். அவன் கைக்குள் ஒடுங்கிய ஆறு அவனோடு சேர்ந்து பயணித்து அவன் ஊரை தேடி போகிறது. குவளையில் அள்ளிய தண்ணீரில் வேகமில்லை. உதிர்ந்த இலை போல அது தன் இயல்பை மாற்றிக் கொண்டுவிட்டது.

வெண்கல குவளையில் ஒடுங்கிய ஆறு எவ்வளவு நாட்கள் அந்த சிறுவன் வீட்டில் தங்கியிருக்க கூடும் என்று தெரியவில்லை. மரணத்தருவாயில் உள்ள யாரோ ஒரு முதியவனின் கடைசி சொட்டு தாகத்தினை போக்குவதற்காக அது காத்திருக்ககூடும். உதிர்ந்த பூக்கள் மரத்தை மறந்துவிடுவதை போல வெண்கல கிண்ணியில் அள்ளிய நீரும் தன் பூர்வத்தை மறந்துவிடுமா ? அது தான் கங்கை என்று கிராமத்து சிறுவன் எவனோ கண்டால் அதற்கு வெட்கமாக இராதா? ஒடாத கங்கையை காண்பது எவ்வளவு வேடிக்கையானது. அது சித்திரத்தில் தென்படும் ஆற்றை போன்றது தானே.

மழையை பார்த்தபடியே இருக்கிறேன். ஆற்றில் குளிக்கும் உடல்கள் வசீகரமாக இருக்கின்றன. ஆடைகள் நழுவிய உடல்கள் ஏன் இத்தனை வசீகரம் கொள்கின்றன. தண்ணீரை தவிர வேறு எங்கும் உடல்கள் இத்தனை வனப்பு கொள்வதேயில்லை. தண்ணீருக்குள் இறங்கியதும் உடல் உருமாறத்துவங்கிவிடுகிறது. ஆரஞ்சு பழத்தின் தோல் உரிந்து போவது போல நமக்குள் இருந்து ஏதோ ஒன்று ஆற்றில் உரிந்து போய்விடுகிறது. ஒரு இளம்பெண் கங்கையில் நனைந்த புடவையுடன் இறங்கி குளித்து கரையேறி நடந்தாள். அந்த உடல் துடுப்பை போல விசையேறியிருந்தது. கண்கள் விரிந்து மலர்ந்திருக்கின்றன. அடர்ந்த கூந்தல். நீண்ட விரல்கள். உதட்டில் அடங்க மறுக்கும் சிரிப்பு. அவளது நடையில் மழையை தான் மதிக்க போவதில்லை என்று உறுதி தெரிகிறது.

படியோரம் அமர்ந்து ஒரு நாவிதர் ஆற்றை பார்த்து கொண்டிருந்தார். பழகிய ஆறு. என்றாலும் மழையில் புதிதாகவே இருக்கிறது. அவரது காலடியில் எவரது தலையில் இருந்தோ நீக்கபட்ட ரோமங்கள் நனைந்து ஒட்டியிருந்தன. உதிர்ந்த ரோமங்களை கொண்டு எவரது தலையில் அது இருந்தது என்று அறியமுடியுமா என்ன?

பகல் பொழுது தான் என்றாலும் மாலை நேரத்தை போல வெயில் மூடிக் கொண்டிருக்கிறது. மங்கிய வெளிச்சம். மழை உலகின் இயல்பை பெரிதாக மாற்றிவிடுகிறது. அதிலும் இதுபோன்ற ஆற்றுபகுதிகளை உடனே உருமாற்றிவிடுகிறது.

பிளாஸ்டிக் பொருள்களை விற்பவன் தலையில் துணியை போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அவனது கண்கள் மழையை திட்டுகின்றன. அவனது பீடி கூட நனைந்து போயிருக்கிறது.

ஹரித்துவார் மிக பழமையான நகரம். கங்கை இமயமலையில் இருந்து தரையிறங்கும் இடமது. பகிரதன் கங்கையை அங்கே வணங்கியதாக சொல்கிறது புராணம். படித்துறைகளில் இரும்பு சங்கிலிகள் தொங்குகின்றன. அதை கையில் பிடித்து கொண்டு தான் நீரில் இறங்க வேண்டும். அப்படியும் ஆற்றின் வேகம் இழுத்து கொண்டுபோய்விடும். மழையில் அந்த இரும்பு சங்கிலிகள் இளகிப்போயிருப்பது போன்று தெரிகிறது.

முன்னொரு காலத்தில் இந்த இடம் பெரும்வனமாக இருந்திருக்கிறது. அந்த வனத்தில் ஆற்றின் கரையில் மான்கள் துள்ளியலைந்திருக்கின்றன. யாரோ ஒரு முனி தவக்கோலத்தில் அமர்ந்திருக்ககூடும். மிருங்கங்கள் நிலாவெளிச்சத்தில் நடந்து அலைந்திருக்கும். மீன்கள் துள்ளி காட்டை வேடிக்கை பார்த்திருக்கும். அன்றிருந்த அதே சூரியன். அதே ஆகாசம். அதே நிலவு. அதே பூமி. மனிதர்கள் மாறிக் கொண்டேயிருக்கிறார்கள். ஹரித்துவார் அதை ஏதோவொரு வகையில் நினைவு படுத்துகிறது. குறிப்பாக மழைக்கு பிந்திய ஊரின் நிறமும் வீதிகளின் இயல்பும் நூற்றாண்டுகளை கடந்து பின்னால் போய்விட்டது போன்றேயிருக்கிறது.

இறந்தவர்களுக்கான நீத்தார்நினைவு சடங்குகள் மழையிலும் நடக்கின்றன. நினைவுகளை கரைத்து விட முடியுமா என்ன? எண்ணிக்கையற்ற மனிதர்களின் நினைவுகள் கங்கையோடு சேர்ந்து கரைந்திருக்கின்றன. இதே கங்கையின் முன்பாக யுவான் சுவாங் நின்றிருந்ததை பற்றி குறிப்புகள் எழுதியிருக்கிறான். அவன் கண்ட கங்கை என்பதன் சிறு சுவடு கூட இன்றில்லை.

இந்திய இலக்கியங்கள் கங்கையை கொண்டாடுகின்றன. மகாபாரத்தில் குருஷேத்ர யுத்தத்தின் முடிவில் இறந்து போன சொந்த பந்தங்களை மீண்டும் ஒரு முறை பார்க்க முடியாதா என்று கௌரவர்களும் பாண்டவர்களும் இரண்டு பக்கம் உள்ள வீரர்களின் பெண்டுபிள்ளைகளும் அழுது மாய்கிறார்கள். அவர்களை சமாதானம் செய்வதற்காக கிருஷ்ணன் ஒரு இரவை உருவாக்குகிறான்.

அந்தஇரவில் இதே கங்கையில் இருந்து போரில் இறந்து போன அத்தனை பேரும் எழுந்து வருகிறார்கள். இனி பார்க்கவே முடியாதோ என்று கலங்கி போன குடும்பம் கதறி அழுகிறது. தத்தமது மனைவி பிள்ளைகளை இறந்தவர்கள் கட்டிக் கொள்கிறார்கள்.. பிரிவின் வலி தாங்காமல் அவர்களிடம் பெண்கள் ஏதேதோ பேசுகிறார்கள். ஆனால் இறந்து மறு உயிர்ப்பு பெற்றவர்களால் பேசமுடியாது. கட்டிக் கொள்ளவும் கண்ணீர்விடவும் மட்டுமே முடியும். சாவின் துக்கம் பெருகிய பெண்கள் ஆற்றிலிருந்து எழுந்துவரும் கணவனை சகோதரனை கட்டிக் கொண்டு அழுது மாய்கிறார்கள்.

ஆற்றின் கரையெங்கும் துயரம் பீறிடுகிறது. விடியும் வரை இந்த மறுசந்திப்பு நடைபெறுகிறது. விடிவதற்கு முன்பாக இறந்தவர்கள் மறுபடியும் ஆற்றிற்குள் போய்விடுகிறார்கள். அந்த வெறுமை ஆற்றின் மீது நிரம்புகிறது. தங்களை மீறி ஆண்களும் பெண்களும் ஆற்றில் விழுந்து தங்கள் துயரத்தை கலக்கிறார்கள். மஹாபிரஸ்தானிகம் என்னும் பர்வத்தில் இந்த சம்பவம் விவரிக்கபடுகிறது.
யோசிக்கையில் இது எவ்வளவு பெரிய விந்தை. எவ்வளவு பெரிய ஆறுதல். கங்கையின் முன்னால் எல்லா விந்தைகளும் எளிய இயல்பே என்று தோன்றுகிறது. மகாபாரதத்தை கங்கையே வழிநடத்துகிறது. கங்கையின் மகன் தானே பீஷ்மர்

மழை அடங்கவில்லை. மகுடிக்கு கட்டுபட்ட பாம்பை போல ஆட்கள் மழையில் மயங்கி நின்றபடியே இருக்கிறார்கள். சாலையோர கடைகளில் கூட இரைச்சல் இல்லை. சைக்கிள் ரிக்ஷா ஒன்று மழைக்குள்ளாக வருகிறது. பருத்த உடல் கொண்ட ஒரு ஆள் இறங்கி ஆற்றை நோக்கி நடந்து போகிறார். மழை அவரை கேலி செய்வது போல முதுகில் அடிக்கிறது. அவர் கண்டு கொள்ளாமல் நடந்து போகிறார்.

ஹரித்துவாரின் மழை பின்மதியம் வரை பெய்தே அடங்கியது. மழைக்கு பிந்திய ஆற்றின் நிறமும் வேகமும் மாறியிருந்தன. கங்கா ஆரத்தி நிகழ்விற்காக அகல்விளக்குகள் ஏற்றப்படுகின்றன. ஆற்றை வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கில் காத்திருக்கிறார்கள். மாலை மெல்ல அடங்குகிறது. மழையின் விம்மல் எங்கோ கேட்டபடியே இருக்கிறது. ஆற்றின் மீது விளக்கு வெளிச்சம் ஊர்ந்து போகிறது. ஆறு கரையடங்காமல் திமிறிக் கொண்டிருக்கிறது. சேர்ந்திசை போல குரல்கள் பாடுகின்றன. கங்கை பாதி இருளும் பாதி ஒளியுமாக மின்னுகிறது. இருட்டிற்குள்ளாகவும் சிலர் ஆற்றில் இறங்கி குளித்தபடியே இருக்கிறார்கள்.

திரும்பவும் இரவில் மழை வரும் என்றார்கள். அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மழையின் கைகள் துடைத்த வீதிகள் மறுபடி கசடுகளும் குப்பைகளும் நிறைந்து போயிருந்தன. ஊர் மாறாத இயல்புக்கு வந்திருந்தது. கிழக்கில் எங்கோ மின்னல்வெட்டியது. காற்றில் மழையின் ஈரம். அடுத்த மழை எப்போது துவங்கும் என்ற யோசனையுடன் நடந்து செல்ல ஆரம்பித்தேன்.

நனைந்த பஞ்சை போல மனமெங்கும் கங்கை நிரம்பிட துவண்டுபோயிருந்தேன்.. ஆற்றை கூடவே சுமந்து கொண்டுசெல்வது உள்ளுற மிக சந்தோஷமாக இருந்தது.

**

மேல் வீட்டுக்காரன்

மேல் வீட்டுக்காரன்

என்கிற உரிமையில்

நீ கைப்பற்றும் சுதந்திரம்

அதிகப்படியானது.

உன் ஒவ்வொரு அசைவும்

பூதாகரமாய் ஒலிக்கிறது

கீழ்த்தளச் சுவர்களில் .

திட்டமிட்டு நகர்த்தும்

சாமார்த்தியமும் உனக்கில்லை.

பாக்கு இடிக்கும் பாட்டி;

சதுர அம்மியில்

சார்க் புர்ரக்கென்ற

குழவி நகர்த்தும் அம்மா;

ஏதேதோ பாட்டுக்கெல்லாம்

எம்பிக்குதிக்கும் குழந்தைகள்;

என

உன் உறவுகள் கூட

உன்னைப் போலவே.

உன்னை பழிவாங்கும் விதமாக

என்னால் முடிந்தது ஒன்றுதான்.

எனதருமை மேல்தளத்து நண்பா…….

தலையணையையும் மீறி

உன்காதுகளில்

சுழன்று கொண்டிருக்கும்

என் மின்விசிறி.

-நா. முத்துக்குமார்

—————————————

வெண்டைக்காயில் ஒளிந்தவர்கள்

வெண்டைக்காயில் ஒளிந்தவர்கள்

எல்லா வீடுகளையும் போலவே

கிணற்றடித் தண்ணீரை

குடித்து வளரும்

எங்கள் வீட்டிலும்.

வதங்கிச் சுருண்டு

இலைகளில் தொங்கும்

செம்பருத்திப் பூக்கள் தவிர்த்து

அம்மாவினுடையதும்

அக்காவினுடையதுமாக

விரல்களைக் கடன் வாங்கி

பச்சையாய் துளிர்க்கும்

வெண்டைக்காய்ச் செடிகள்

அத்தோட்டத்தின் தனித்தன்மை.

‘மூளைக்கு நல்லது’ என்று

மருத்துவ குணம் கூறி

அதன் காய்களில் ஒளிந்திருக்கும்

என் அல்ஜிப்ரா கணக்கி இற்கான

விடைகளை நோக்கி

ஆற்றுப்படுத்துவாள் அம்மா.

மதிய உணவில்

பெரும்பான்மை வகிக்கும்

அதன் ‘கொழ கொழ’ த் தன்மை

வழக்கம்போல் பள்ளியில்

என் விரல்களில் பிசுபிசுத்து

வராத கணக்கைப் போல்

வழுக்கிக் கொண்டிருக்கும்.

முன்புக்கு முன்பு

அதன் காம்புகள் கிள்ளி

கம்மல் போட்டுக்கொள்ளும்

அக்கா இப்போது,

வைரங்களை நோக்கி

விரியுமொரு கனவில்

‘ உங்களுக்கு வாக்கப்பட்டு

என்னத்தைக் கண்டேன்’ என்று

அத்தானிடம் பொருமுகி்றாள்.

கடன்முற்றித் தத்தளித்த சூழலில்

கியான்சந்த் அண்ட் சன்சுக்கு

கைநடுங்கி கையெழுதுத்திட்டு

வீட்டுடன் தோட்டமும்

விற்றார் அப்பா .

முன்வாசலில் தொங்கும்

குரோட்டன்ஸ் செடி கடந்து

பிஞ்சு வெண்டைகள் பொறுக்கி;

கூர்முனை ஒடித்து;

தள்ளு வண்டிக்காரனிடம்

பேரம் பேசுகையில்

இப்போது உணர்கிறேன் …………

ஒவ்வொரு வெண்டைக்காயிலும்

ஒளிந்திருக்கிறார்கள்

மென்மையான

விரல் கொண்ட

ஒரு அம்மா ;

கனவுகள் விரியும்

ஒரு அக்கா ;

கைகள் நடுங்கும்

ஒரு தந்தை ;

மற்றும்

கணக்குகள் துரத்தும்

ஒரு பையன்.

-நா. முத்துக்குமார்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர்…


“உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர்.
ஆளரவமற்ற இருட்புலத்தில்
அவர்கள் புதைக்கப்பட்டனர்.
யாரும் கண்ணீர் சிந்தவில்லை.
யாரோ அவர்களைக்
கல்லறைக்கு எடுத்துச் சென்றனர்.
அவர்தம்
புகழ்வாய்ந்த பெயர் கூறிட
அங்கே சிலுவையோ…
சமாதியோ… மண்டபமோ
ஏதுமில்லை.
புல் முளைத்திருக்கிறது அங்கே.
தாழ்ந்திருக்கும் புல்லிதழ் ஒன்று
அந்த இரகசியத்தைத் தாங்கியிருக்கிறது.
கரை மீறிச் சீறியடிக்கும்
அலைகள் மட்டுமே சாட்சியம்.
வல்லமை வாய்ந்த
அவ்வலைகள் கூட
தொலைதூர இல்லத்துக்கு
செய்தியைக் கொண்டுபோக முடியாது…”

——————————————————————————————————————————————————-

—எலீ வீஸல் —-

அடம் பிடிக்கிறதே….


தொலைபேசியில் நீ எனக்குத்தானே ” குட்நைட்” சொன்னாய். ஆனால் அந்த இரவோ அதைத்தான் நீ “நல்ல இரவு” என்று சொல்லிவிட்டதாக நினைத்து விடியவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே…

—கவிஞர் தபுசங்கர்…..


நீயன்றி


எனக்குள்
புதைந்து
போகிறேன்
கண்ணீரில்
முழ்கி
நீயில்லை
யாருமற்ற
அநாதை
குழந்தையாய்
அழும் மனதுக்கு
புரிவதில்லை
அடுத்தவர் ஆறுதல்
என்னுள்
படர்ந்து
என்னையே
வீழ்த்தும்
காதல் கொடிகள்
எல்லா
பூவும் கேட்க்குமே
என்ன சொல்ல
கை பிடித்து
நடந்த சாலை
கனலாய்
கொதிக்குமே
அமர்ந்த
மரங்கள்
கண்ணீராய்
உதிர்க்கிறதே சருகுகளை
என் மேல்
கண்ணீரை தவிர
வேறு இல்லை
உன்
மணவாழ்க்கை
பரிசாய்
புன்னகை
நீ எடுத்து
கொள்
கண்ணீரை எனக்கு கொடு

கஜல் கவிதைகள்என் இதயத்தை
உன்னிடம் யாசிக்கிறேன்

சாபத்தையேனும்
வரமாகக்கொடு

****************
காதலைப்போல்
இதயத்திற்கு
இன்பமுமில்லை, வலியுமில்லை

************

உன்னைச்
சொற்களில் தேடுகிறேன்
நீயோ
மெளனத்தில்
ஒளிந்திருக்கிறாய்

*************

வண்ணங்களின்
கனவே!
உன்நிழல்
என்
மரணத்தின்மீது
விழுகிற வெளிச்சம்

அக்னி சொரூபம்
என் காதல்
நீ வந்து
அணைக்கக்கூடாதா

- கோ.பாரதிமோகன்

thank you
namadhukural.blogspot.com

கஜல் கவிதை

கஜல் ஓர் அறிமுகம்.
'கஜல்' அரபியில் அரும்பி, பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.
'கஜல்' என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள்.
கஜல் பெரும்பாலும் காதலையே பாடும், அதுவும் காதலின் சோகத்தை.
'கஜல்' இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
- அப்துல் ரகுமான்.

அப்துல் ரகுமான், கஜல் எனும் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். ஆனால்,உருதுவில் 'மிர்சாகாலிப்' தான்.
கஜல் என்றாலே அதில் 'மிர்சாகாலிப்'பின் வாசம் வீசும்.' என்கிற அளவுக்கு அதில் அவர் சிறந்த கவிஞர். அவரின் கஜல் ஒன்று...
காதல் என்பது
நம் வசத்தில் இல்லை

அது ஒரு
வினோதமான நெருப்பு!

பற்றவைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது!

- மிர்சாகாலிப்

அப்துல் ரகுமானின் கஜல் துளிகள் சில...

நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்
*******
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
*********
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.
*******
மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது

************
என் கனவு
உன்முன் ஏந்திய
பிச்சை பாத்திரம்
*******
உன் கண்களால்தான்
நான் முதன் முதலாக
என்னப் பார்த்தேன்.
- அப்துல் ரகுமான்.
********************************
என் நண்பரின் கஜல்...
எதை எடுப்பது?
எதை விடுப்பது?
தேநீர்கோப்பையிலும் நீ
மதுக்கோப்பையிலும் நீ
************
நெருப்பை விழுங்கியிருந்தால்
ஜீரணித்திருக்கலாம்
நானோ
காதலை விழுங்கிவிட்டேன்.
***********
உன்னைப் பார்ப்பதும்
பார்க்காமல் இருப்பதும்
கண்களுக்கு சாபம்
*********
காதல்
தாய் தந்தையில்லாத
அனாதை
அதை
நீயும் நானும்தான்
வளர்க வேண்டும்
*********
உன் வண்ணம் குழைத்தே
நிறைவடைகிறது ஓவியம்
*********
எனக்குத் தெரியும்
என்னைப்
பழி தீர்க்கத்தான்
நீ
காதலை தேர்ந்தெடுத்தாய்
- கோ. பாரதி மோகன்.