வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

ஆர்க்கிபால்ட் மேக்லீஷ் எழுதிய ”கவிதைக் கலை” -பிரம்மராஜனின் மொழிபெயர்ப்பு கவிதை














ஒரு கவிதை இருக்க வேண்டும்
உணர முடிவதாய்
உருண்டு திரண்ட பழம் போல மௌனமாய்
பேச்சற்று
புராதனப் பதக்கங்கள் கட்டைவிரலுக்குத் தட்டுப்படுவது போல்
பாசி வளர்ந்து படிந்த
கைப்பகுதிகளால் தேய்ந்த ஜன்னல் விளிம்புகளைப்
போல மௌனமாய்
ஒரு கவிதை வார்த்தையற்றிருக்க வேண்டும்
பறவைகளின் பறத்தல் போல
நிலா உயர்வதைப் போல்
காலத்தினுள் கவிதை இயக்கமில்லாதிருக்க வேண்டும்
இரவு பின்னலிட்ட மரங்களை குறுங்கிளை அடுத்த குறுங்கிளையாக நிலா
விடுவிப்பது போல,
ஒரு கவிதை இருக்க வேண்டும்
உணர முடிவதாய்
உருண்டு திரண்ட பழம் போல மௌனமாய்
பேச்சற்று
புராதனப் பதக்கங்கள் கட்டைவிரலுக்குத் தட்டுப்படுவது போல்
பாசி வளர்ந்து படிந்த
கைப்பகுதிகளால் தேய்ந்த ஜன்னல் விளிம்புகளைப்
போல மௌனமாய்
ஒரு கவிதை வார்த்தையற்றிருக்க வேண்டும்
பறவைகளின் பறத்தல் போல
நிலா உயர்வதைப் போல்
காலத்தினுள் கவிதை இயக்கமில்லாதிருக்க வேண்டும்
இரவு பின்னலிட்ட மரங்களை குறுங்கிளை அடுத்த குறுங்கிளையாக நிலா
விடுவிப்பது போல,
பனிக்காலத்து இலைகளின் பின்புறமிருந்து நிலா
ஞாபகம் ஞாபகமாக மனதை விடுவிப்பது போல
ஒரு கவிதை காலத்தினுள் சலனமில்லாதிருக்க வேண்டும்
நிலா உயர்வது போல்
ஒரு கவிதை சமானமாய் இருக்க வேண்டும்
நிஜத்திற்கு இணையாய் அல்ல
எல்லாத்துயரத்திற்கும்
ஒரு வெற்று வாசலைப் போல
மேப்பிள் மர இலையைப் போல
காதலுக்கு
தலைசாயும் புற்கள் மற்றும் கடலுக்கு மேலாக இரண்டு வெளிச்சங்களைப் போல
ஒரு கவிதை அர்த்தம் தரக்கூடாது
கவிதையாக இருக்க வேண்டும்

நன்றி பிரம்மராஜன்   

எறும்புகளோடு பேச்சுவார்த்தை -வைரமுத்து

எறும்புகளே எறும்புகளே 
உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே 
பத்துகோடி ஆண்டுகள் முன்னே 
பூமியில் ஊர்ந்த பூச்சியினமே 
உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே 
உங்களோடு பேசவேண்டும் 
சிறிது நேரம் செவி சாய்ப்பீரா?


"நின்று பேசி நேரங்கழிக்க 
நாங்கள் ஒன்றும் மனிதர்கள் இல்லை 
எது கேட்பதாயினும் 
எம்மோடு ஊர்ந்து வாரும் "

ஒரு செண்டிமீட்டரில் 
ஊற்றி வைத்த உலகமே 
அற்ப உயிரென்று 
அவலபட்டதுண்டா ?

"பேதை மனிதரே 
மில்லிமீட்டர்   அளவிலும் 
எம்மினத்தில் உயிருண்டு 
தன் எடை போல ஐம்பது மடங்கு 
எறும்பு சுமக்கும் நீர் சுமபீரா"
***
உங்கள் பொழுது போக்கு 


"வாழ்வே பொழுதுபோக்கு 
தேடலே விளையாட்டு 
ஊர்தலே ஓய்வு 
ஆறு முதல் பத்துவாரம் 
ஆயுள் கொண்ட வாழ்வு -இதில் 
ஓயவேன்ன ஓய்வு ?-தலை 
சாய்வென்ன சாய்வு ?"
**
இந்த ஆயுளுக்கா
இத்தனை பாடு?

"உம்மை போல் எமக்கு 
ஒற்றை வயிறல்ல 
இரட்டை வயிறு 
செரிக்க ஒன்று 
சேமிக்க ஒன்று 
செரிக்கும் வயிறு எமக்கு 
சேமிக்கும் வயிறு 
இன்னோர் எறும்புக்கு 
இரண்டு வயிற்றுக்குத்தான்
இத்தனை பாடு"
****
இனப்பெருமை பற்றி 
சிறு குறிப்பு வரைக .....?

"சிந்து சமவெளிக்கு முற்ப்பட்டது 
எங்கள் பொந்துசமவெளி நாகரீகம்
ராணிக்கென்று அந்தபுறம்
உழைக்கும் எறும்புகள் வசிப்பறை 
இறந்த இரும்பை அடக்கம் செய்ய 
இடிபாடில்லாத இடுகாடு 
மாரிக்கால சேமிப்பு கிடங்கு -
எல்லாம் அமைந்தது எங்கள் ராஜாங்கம்"


எங்கள் வாழ்க்கையின் 
நீளமான நகல் தான் நீங்கள் 
***
உங்களை நீங்கள்  
வியந்து கொள்வதேப்போது ?

"மயிலிறகால் அடித்தாலே 
மாய்ந்து விடும் எங்கள் ஜாதி 
மதயானைக்குள் புகுந்து 
மாய்த்துவிடும்போது"


  நீங்கள் வெறுப்பது...நேசிப்பது ....


வெறுப்பது....

"வாசல்தெளிக்கையில்
வந்துவிழும் கடல்களை"


  நேசிப்பது....

"அரிசிமா கோலமிடும் 
அன்னபூரணிகளை"    


சேமிக்கும் தானியங்களை 
முளைகொண்டால் ஏது  செய்வீர் ?


"கவரும்போதே தானியங்களுக்கு 
கருத்தடை செய்து விடுகிறோம் 
முனைகளைந்த மணிகள் 
முளைப்பதில்லை மனிதா"
****
உங்களால் மறக்க முடியாதது ...?

"உங்கள் அஹிம்சை போராட்ட
ஊர்வலத்தில் 
எங்கள் நான்காயிரம் முன்னோர்கள் 
நசுங்கி செத்தது"
***
எதிர்வரும் எறும்புகளை 
மூக்கோடு மூக்குரசும்  காரணம்?

"எங்கள் காலனி ஏறும்புதானாவென 
மோப்பம் பிடிக்கும் முயற்சியது 
எம்மவர் என்றால் 
வழிவிடுவோம் 
அன்னியர் என்றால் 
தலையிடுவோம்"


சிறிய மூர்த்திகளே -உங்கள் 
பெரிய கீர்த்தி எது?

"அமேஸான் காட்டு ராணுவ எறும்புகள் 
யானை-வழியில் இறந்து கிடந்தால் 
முழு யானை தின்றே முன்னேறும்


மறவாதீர் 
எறும்புகளின் வயிறுகள் 
யானைகளின் கல்லறைகள்"


சாத்வீகம் தானே 
உங்கள் வாழ்க்கை முறை...?

"இல்லை 
எங்களுக்குள்ளும் வழிப்பறி உண்டு 
எங்களுக்குள்ளும் யுத்தங்கள் உண்டு 
அபாயம் அறிவிக்க 
சத்தம் எழுப்பி 
சைகை செய்வதுண்டு "

 எறும்புகளின் சத்தமா 
இதுவரை கேட்டதில்லை ?

" மனிதர்கள் செவிடாயிருந்தால் 
எறும்புகள் என்ன செய்யும்"


நன்றி எறும்பே நன்றி....
 
"நாங்கள் சொல்ல வேண்டும் 
நன்றி உமக்கு"


எதற்கு எதற்கு....


"காணாத காமதேனு பற்றி 
இல்லாத ஆதிசேஷன் பற்றி 
பொய்யில் நனைந்த 
புராணம் வளர்க்கும் நீங்கள் 
இருக்கும் எங்களை பற்றி 
இன்றேனும் எண்ணிப் பார்த்தீரே   
அதற்க்கு"



சூழல் -தமிழச்சி தங்கபாண்டியன்













மழைச் சனியன் வந்தாலே
பிழைப்பு மந்தம்தான்
தெருவோரச்
செருப்பு தைப்பவரின்
உரத்த சாபத்தை வாங்கித்
தேம்பிச் செல்லும் மழையை
வழி மறித்து
முத்தமிட நின்ற என்மேல்
முந்திக்கொண்டு
முழுமூச்சாய்
நீரடித்துச் சென்ற
காரோட்டியைச்
சாபமிட்டுச்
சேறாகிப் போனது மனது





குழந்தைகள் என்றால் -கவிஞர் தேவதேவன்


















குழந்தைகளென்றால் கடவுளுக்கு ரொம்பப் பிடிக்குமாம்
குழந்தைக்கு அதைப் பற்றி என்ன
?
கடவுள் எப்போதும் குழந்தைகளோடு இருக்கிறாராம்

குழந்தைக்கு அதைப் பற்றி என்ன
?
அண்டத்திலேயே பெரிய சிம்மாசனம் கடவுளுடையதுதானாம்

குழந்தைக்கு அதைப் பற்றி என்ன
?
கடவுள் அதிலேவந்து குந்தியிருகாதப்போ

குழந்தைகள் அதிலே ஏறி உட்கார்ந்து நடிக்குமாம்

கடவுளுக்கு அதைப் பற்றி என்ன
?
சமயங்களில் குழந்தைகள் அதிலே சிறுநீரும் பெய்துவிடுமாம்

கடவுளுக்கு அதைப் பற்றி என்ன
?

நன்றி - கவிஞர் தேவதேவன் 

மௌனமாய்


ஒரு
மன்னிப்பை
தயையை
எதிர்நோக்கி
காத்திருக்கும்
தருணமொன்றில்
அறைந்து சாத்தப்படும்
கதவும்
விடை தாராத
மௌனமும்
எதிர்கொண்ட அக்கணங்களை
எந்த சொற்கள்
மொழி பெயர்க்க கூடும்
மௌனமாய்
உடைந்து வெளியேறும்
கண்ணீர் மட்டுமே
உணர்த்தும்
அந்த ரணங்களை
பரிதவிப்பின்
சொல்லொணா துயரின்
உச்சமல்லவா அவை

சகோதரனின் திருமகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


இணையம் கொடுத்த
இணையற்ற சகோதரனின்
திருமகளே
நீ பெரும் புகழும் நீள் ஆயுள் நிறை செல்வம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

நட்சத்திர மீன் -தேவதேவன்

உயிர் கொண்டிருக்கையில்
உயிர் கொண்டிருப்பதைத் தவிர
ஒன்றுமறியாது பிசையும் ஐந்துவிரல்களாய்க்
கடலுள் அலைந்து கொண்டிருந்துவிட்டது
இந்த ஜீவன்

மரித்து
அழகுப்பொருளாய்
அதை நான் என் கையில் ஏந்தியபோது
அதிலே பகிரங்கமானது
சொல்லொணாததோர் ரகஸ்யத்தினின்றும்
சில சமிக்ஞைகள்;
நிலை தடுமாறா வண்ணம்
நிற்க விரித்த கால்கள் இரண்டு;
இப் பேரண்டத்தையே தழுவ முன்னி
இதயத்தினின்றும் நீண்ட கைகள் இரண்டு;
ஆர்வம்மிக்கு
மேல்நோக்கி உயர்ந்து எழுந்த
தலைமுளைக்காத கழுத்து ஒன்று





அமைதி என்பது...-தேவதேவன்

பொழுதுகளோடு நான் புரிந்த
உத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
நான் உன்னருகே வந்தேன்

அமைதி என்பது மரணத்தறுவாயோ?

வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ?

வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்குமுறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது

அமைதி என்பது வாழ்வின் தலைவாயிலோ?

எழுந்துசென்ற பறவையினால்
அசையும் கிளையோ?

பயணம்-தேவதேவன்


அசையும்போது தோணி
அசையாதபோதே தீவு

தோணிக்கும் தீவுக்குமிடையே
மின்னற்பொழுதே தூரம்

அகண்டாகார விண்ணும்
தூணாய் எழுந்து நிற்கும்
தோணிக்காரன் புஜ வலிவும்
நரம்பு முறுக்க நெஞ்சைப்
பாய்மரமாய் விடைக்கும் காற்றும்
அலைக்கழிக்கும்
ஆழ்கடல் ரகசியங்களும்
எனக்கு, என்னை மறக்கடிக்கும்!

ஆற்றோரப் பாறைகளின்மேல்-தேவதேவன்

ஆற்றோரப் பாறைகளின்மேல்
அமர்ந்திருக்கும்
இக் கல் மண்டபங்கள்தாம்
எத்தனை அழகு!
எத்தனை எளிமை!
எத்தனை உறுதி!
எத்தனை தூய்மை!

பூஜை வேண்டாமல்
விக்ரகங்கள் வேண்டாமல்
குழந்தைகள் துளைத்து
கும்மாளாமிட்டுக் கொண்டிருக்கும்
இந்த ஆற்றினைப் பார்த்துக்கொண்டேயிருப்பதற்கோ
அமர்ந்துவிட்டன இக் கல் மண்டபங்கள்
இங்கே நிரந்தரமாய்?

சுற்றுச் சுவர்களில்லாத
அதன் உள்வெளிகளில்
'உள்ளொன்றும் புறமொன்றுமி'னால்
உருவாகும் துயரேதுமின்றிச்
சுழன்று கொண்டிருக்கும் சக்கரத்தினைக்
கண்டு நின்றனரோ புத்தர்?

கண்டதும் விண்டதும்- தேவதேவன்

மலையுச்சியேறியவன்
தான் கண்டு கொண்டதை
ஒரு கோயிலென வடித்துவிட்டுக்
கீழிறங்கினான்.

கோயில் சென்றவன்
உதட்டு பிதுக்கலுடன்
கைவிரித்தபடி
கீழிறங்கினான்.

கீழே
ஒரு புல்
அய்யோ,அது
காற்றிலா அப்படித் துடிதுடிக்கிறது?
ஒளியிலா அப்படி மினுமினுக்கிறது?

அங்கே
தலைப்பாகையும்
அரையாடையுமாய்ச்
சுள்ளி விறகு சேகரித்துச்
செல்லும் ஒரு மனிதனை
காதலுடன் கவலையுடனும்
கண்டு கொண்டமையோ அது?

விண்டுரைக்க முடியாத
மெய்மையின் சொற்கள் தாமோ
இந்த மவுனப் பிரமாண்டமும்
பேரியற்கையும்
இந்த மனிதனும்?

தீராப் பெருந் துயர்களின்-தேவதேவன்

முளை எட்டிப் பார்க்கும்
விஷ வித்துக்களையா
கண்டு கொண்டாள் ,சாந்தா,

வேகம் பொறி பரக்க
விளையாட்டுத் திடல் அதிர
ஒருவரை ஒருவர்
முந்தி வந்து கொண்டிருக்கும்
தத்தம் பிள்ளைகளை
அணி மனிதர்களை
ஊக்குவித்துக்கொண்டிருக்கும்
உற்சாக ஆரவாரத்திற்கு நடுவே?

நகர்ந்து கொண்டிருக்கிறது


நகர்ந்து
கொண்டிருக்கிறது நதி
மேற்பரப்பில்
மிதக்கும் மேகங்களை
சுமந்து
யுகாந்திர
படிமங்கள்
நிறைந்த வெளியில்
நழுவிய
காலத்தின்
கணங்களை
கையிலேந்தி
நகர்ந்து கொண்டே இருக்கிறது
நதி
வேரினை தழுவி
விடை பெரும்
நதிக்கு
விருட்சம்
தரமுடிந்ததேல்லாம்
உதிர் இலைகள் மட்டுமே

மொழிபெயர்ப்பு கவிதைகள் -அப்துல் கையூம்

பாட்டுக்கோர் புலவன் பாரதியே !

பைந்தமிழ்ச் சாரதியே !

பகிரங்கமாய் உனக்கோர் கடிதம் .. ..

பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்க்க வேண்டும் என்றாய். உன் வாக்கை படு சீரியஸாக எடுத்துக் கொண்டு நானும் சில பிறமொழி அறிஞர்களின் கருத்துக்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.


திருமணம்


திருமணம் புரி !


அடக்கமான மனைவி

அதிசயமாய்

அமைந்து விடில்

அகமகிழ்ந்து சிரி !


கணக்கு உனது

கணிசமாய் மாறிப்போனால்

கவலையே படாமல்

காவி தரி !


வங்கி

குடை

கடன் கொடுப்பார்;

வானிலை

தெளிவாய் இருக்கையில்.


‘படக்’கென

பிடுங்கிக் கொள்வார்;

அடைமழை

விடாது பெய்கையில்.

- By Robert Frost



வேடிக்கை

ஆக அனைத்தும்

நகைப்பூட்டும் ..

பிறருக்கு அது

நடக்கையில்

மட்டும் !

- By Will Rogers (1879 – 1935)



ஹோனோலூலூ

விடுமுறை கழிக்க

படுஜாலி பிரதேசம்.


எல்லாமே கிடைக்கும்..


மழலைகள் களிக்க

மணற்வெளி;


மனைவி காய

வெயில் குளியல்;


ஆங் . மறந்து விட்டேனே ..

மாமியார்களுக்கென

பிரத்யேகமாக

கடல்நீரில்

சுறாமீன்கள் !!

- By Ken Dodd



சுற்றுச் சூழல்

பின்தங்கிய நாட்டில்

நீர் குடிக்க யோசி !


முன்னேறிய நாட்டில்

சுவாசிக்க யோசி.


அவை யாவும் தூசி !

Jonathan Raban



பயம்

ஆட்டுக்கு

அருகில் செல்ல

எனக்கு பயம் !


கழுதைக்குப் பின்னால்

கடந்துப் போக பயம் !


முட்டாளிடம் நெருங்க

முழுவதும் பயம்

அவனது

நாலாபுரத்திலும் !!

- By Edgar Watson Howe



பிரம்மச்சாரிகள்

பிரம்மச்சாரிகளுக்கு

கணிசமான வரியினை

கடுமையாக விதியுங்கள்.


பல மனிதர்கள்

வதைக்கப்பட ..


சில மனிதர்கள் மாத்திரம்

மகிழ்சியில் திளைக்க ..


இது என்ன

பாரபட்சம் ..?

(திரு. வாஜ்பாய் அவர்களும். திரு. அப்துல் கலாம் அவர்களும் என்னை மன்னிப்பார்களாக)

By Oscar Wilde


பிரபலங்கள்

பிரபலமாய் இருப்பதில்

பெரியதொரு வசதி.


அவர்கள்

போரடித்தாலும் கூட

ரசிக்கத் தெரியாதது

இவர்களது குற்றமென

எண்ணிக் கொள்கிறார்கள்

அப்பாவி மனிதர்கள் !!

By Henry Kissinger


நன்றி திண்ணை

உறக்கம் கலைந்த இரவு


எவருமற்ற
வீதியெங்கும்
வெளிச்ச எச்சில்
துப்பி நிற்கிறது
தெருவிளக்கு
காற்றின்
கதைப்பில்
அசைந்து
சிரிக்கிறது
வரிசையாய் மரங்கள்
தாமதமாய்
வீடு

திரும்புவனின்
வாகனசப்தம்
நிசப்தத்தின்
திரைகளை
கிழித்து எரிகிறது
திசைகள்
அற்ற இருள்
வெளியில் கடந்து
கொண்டிருக்கிறது
இந்த நாளின் இறுதி
பொழுது
உறக்கம்
கலைந்த நடு நிசிகளை
நிரப்புகிறான்
வார்த்தைகளை
கொண்டு




சொற்களின் குருதி











சொற்களின்
கூர் முனைகளில்
வழிகிறது
என் மௌன குருதி
உனது
மௌன கதவுகளை
திறக்க முயற்சித்து
திரும்புகிறது
சொற்கள்
உனது
புறக்கணிப்பின்
முன் எப்பொழும்
நிராயுதபாணியாக
நான்
வீழ்த்தபட்டும்
உனக்கென
சேகரித்துள்ளேன்
ஒளி ஊடுருவும்
மகத்தான
கண்ணீரை



வழிமயக்கம்-கலாப்ரியா


பாதை நொடியின்

ஒவ்வொரு

குலுக்கலுக்கும்

நொதித்த திரவம்

பீப்பாயின்

பக்கவாட்டில் வழிந்து

பாளைச் சொட்டை

சுவைத்து

மயங்கியிருந்த வண்டுகளை

வெளித்தள்ளின.

கிறக்கம் நீங்க நீங்க

வண்டியின் வேகத்திற்கு

ஈடு கொடுத்து

அவை பறந்து

பறந்து விழுந்தன

நிழலில் நிறுத்தி

முற்றாய்ச் சுடாத

கலயத்தில் சாய்த்த

திருட்டுக்கள்ளை

மாந்தி மாடுகளுக்கும்

தந்தான்

இப்போது பாதையில்

நொடியே இல்லை

வண்டிக்கும் மாடுகளுக்கும்

வண்டியோட்டிக்கும்

உயர்திணை












பற்றிய

கிளை விட்டே
மேலெழும்புகிறது
பறவை
வெட்டி
வீழ்த்தப்பட்ட
போதும்
துளிர்விட்டு
சிரிக்கிறது
விருட்சம்
புதைந்த
போதும்
முகிழ்த்து
கிளம்புகிறது
விதை
உதிரும்போதும்
சிரித்தும்
மனம் கமழ்ந்தும்
மலர்
பற்றியதை
விடவும்
முகிழ்த்து எழவும்
துயரில் மணக்கவும்
இல்லை
நேற்றைய தோல்விக்கு
இன்றுகளை பலிகொடுக்கும்
நான் எப்படி ஆனேன்
உயர்திணை

வாழ்வின் வெகுமதி














எல்லோருக்கும்
தருவதற்கு
பிரியங்களை
தவிர வேறொன்றுமில்லை
விருப்பு வெறுப்பின்
மேடு பள்ளங்களை
கடந்து நதியென
பரவுகிறேன்
எனது
பிரியங்கள்
நித்தியமானவை
ஒரு பெயர் அற்ற
சாலை மலரென
என்றேனும்
ஒரு சிறுவன்
கொய்து உச்சி முகரலாம்
இதழ் இதழாய்
முத்தமிடலாம்
புறக்கணிப்பின்
வலிகளை கடந்து
பிஞ்சு விரல்களில்
கமழும் மணமும்
ஒட்டிய நிறமும்
வாழ்ந்த வாழ்வின்
உன்னத தருணங்கள்

சில கவிதைகள்













சொற்களுக்கு
அப்பால்
நிரம்புகிறது
மௌனம்
சொற்
படகுகள்
உடைந்து கரைகிறது
மௌன வெளியில்

உதிர்வதும்
துளிர்ப்பதுமாய்
வாழ்வு
மலரென
சமயங்களில்
முள்ளாய்

எந்த
சொல்லேனும்
உணர்த்திவிடுமா
ஏன்
சொல்லில் அடங்கா
பிரியங்களை

வார்த்தைகளுக்கு
தவமிருந்து
வடித்த
கவிதையை
காட்டிலும்
ஒரு கிழவியின்
கபடமில்லா சிரிப்பு
நிரப்பி விடுகிறது
காகிதங்களுக்கும்
அப்பால் ஒரு கவிதையை

எல்லாவற்றையும்
எழுதி விட
முடிவதில்லை
கவிதையாய்
சில கவிதைகள்
வார்த்தைகளுக்கு
அடங்காமல்

எனக்கு பொழுது போகவில்லை எனில் இப்பிடி தான் மொக்கை போடுவேன் திட்ட படாது

காதல் கவிதை













மௌன
வெளியில் உடைந்து
சிதறுகிறது
துளி கண்ணீர்
மரத்தின் இறுதி
இலையென
உனது
நினைவுகளின்
சுவடுகளில்
நிரம்பி வழிகிறது
கண்ணீரும்
எவருடனும்
பகிரவியலா காதலும்
ஒரு உதிர்
பூ
நதியின் அலைகளில்
நிகழ்த்தும்
நடனமென
காலவெளியில்
என் காதலும்
உனது
வனங்களில்
தொலைந்து
போகிறேன் சாபங்களின்
பள்ளத்தாக்குகளில்
மீண்டு
விலகி
சென்றாலும்
கரை தேடும்
அலையென
தேடிக்கொண்டே
கரைந்து கொண்டிருகிறது
வாழ்வும் காதலும்





எறும்பு




















ஊர்ந்து
கொண்டிருக்கிறது
பெரும் பரப்பில்
எறும்பு
முன்னர் சென்ற
தடம் தேடியோ
மூச்சு காற்றில்
இணை தேடியோ
வளைந்தும்
நெளிந்தும்
பெரும் சுவரில்
நகரும் சிறு புள்ளியாய்
கேள்விகள்
மழையென
எறும்பு
ஆன்மா
உயிரென
இப்பொழுது எறும்பு
ஊர்ந்து
கொண்டிருந்தது
நினைவுகளில்
ஸ்தம்பித்து
நகர்ந்தேன்
சிறு புள்ளியென
பிரபஞ்சத்தில்

மழை பெய்து-தேவதேவன்


அப்போதுதான் முடிந்திருந்தது

அனைத்தும் முழுமுற்றாய் தூய்மைசெய்யப்பட்டு

பளாரென்று நீண்டிருந்தது ஒரு கிளை

நித்யத்திலிருந்து குதித்த ஒரு பாய்ச்சலுடன்

அப்போதுதான் உறையிலிருந்து வெளிப்பட்ட வாள்போல

வானளாவிய சூனிய வெளியெங்கும்

என் பார்வையை இழுத்தபடியே

பறந்துகொண்டிருந்த பறவை அதில் அமர்ந்திருந்தது

அதன் கூரிய கூச்சமுள்ள கால்விரல்களில் காலம்

ஒரு செத்த எலி

வண்ணத்துப்பூச்சி-தேவதேவன்
















அன்று மண்ணின் நிறம் என்னை உருக்கிற்று

வீழ்ந்த உடம்புகள் கழன்று உறைந்த ரத்தங்கள்

இன்னும் மறக்கமுடியாத கொடூரங்களின் எச்சங்கள்

அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டதா இம்மண்ணில் ?

மண்ணின் வளமும் பெருமையும் மின்ன

மேலெழும்பி பிரகாசித்து நின்றன பூக்கள்

எத்தனை வண்ணங்களில் !

ஆனால்

தேன் தேன் தேன் என பரவச பதைப்புடன்

சிறகுகள் பரபரக்க

அங்கே ஒரு வண்னத்துப் பூச்சி வந்தபோது

என்னை அறுத்தது அழகா அருவருப்பா

எனப் பிரித்தறியமுடியா ஓர் உணர்ச்சி

உறிஞ்சும் வேகத்தில்

கைகூப்பி இறைஞ்சுவதுபோல

மேல்நோக்கி குவிந்த சிறகுகள் நீங்கலான

உடல் முழுக்க விர்ரென்று

நிரம்பிக் கொண்டிருந்தது தேன்

சிறகுகளின் மெலிதானதுடிப்பில்

ஆழமானதோர் நடுக்கம்

எந்தமொரு வைராக்கியத்தை

மூச்சை பிடித்துகாக்கிறது அது ?

அதேவேளை அதே வேகத்துடனும் துடிப்புடனும்

கீழ்நோக்கி சுருண்டு உன்னியது

கரு தாங்கும் அதன் கீழ்பகுதி

தேன் நிரம்பி கனத்து

பூமி நோக்கி தள்ளும்

சின்னஞ்சிறு பாரத்தை

வெகு எளிதாக

தேன்தொடா சிறகுகள் தூக்கிச் செல்கின்றன

மரணமற்ற ஆனந்த பெருவெளியில்!

நிசி-தேவதேவன்


இரை பொறுக்கவும்

முட்டை இடவும் மாத்திரமே

பூமிக்கு வந்தமரும்

வானவெளிப்பறவை ஒன்று

இட்ட ஒரு பகல் முட்டையின்

உட்கரு நிசியுள்

பகல் வெளியிப் பாதிப்பு கூறுகளால்

உறங்காது துடிக்கும் நான்

என் அவஸ்தைகள்

கர்வுவில் நடைபெறும் வளர்ச்சியா

பரிணாம கதியில்மனிதனை புதுக்கி

ஓர் உன்னதம் சேர்க்கும் கிரியையா

பகலின் நினைவுகள் கொட்டி கொட்டி

இரவெல்லாம் தெறிக்கும்

என் சிந்தனைகள் வேதனைகள்

ஏன் இவ்வேதனை ?

எதற்கு இச்சிந்தனைகள் ?

நானே அறியாது

என்னில் கலக்கும் ஜீன்கள்

கருவே அறியாது

கருவில் கலக்கும் தாதுக்கள் எவை ?

இனி நான் எவ்வாறாய் பிறப்பேன்

என் கனவில் எழுந்த அந்த மனிதனாய்

நான் என்று பிறப்பேன் ?

அல்ல மீண்டும் மீண்டும்

முட்டை இடவும் இரை ப்றுக்கவும்

இரைக்காய் சக ஜீவிகளுடன்

போராடவும் மாத்திரமே

பூமிக்கு வந்தமரும்

அதே வானவெளிபறவையாக

சொற்களாய் நிறைந்து ததும்பும் வெளிமண்டலத்தில்...-தேவதேவன்


ஒரு பறவை நீந்துகிறது

சொற்களை வாரி இறைத்தபடி

சொற்களை வாரி இறைப்பதனாலேயே

அது நீந்துகிறது

காற்றின் துணையும் உண்டு

நீ இக்கவிதையை வாசிக்கையில்

அமைதியான ஏரியில்

துடுப்பு வலிக்கும் ஒலி மட்டுமே கேட்கும்

படகுப்பயணம் போல

கேட்கிறதா உனக்கு

அப்பறவையிந் சிறகசைவு தவிர

வேறு ஒலிகளற்ற பேரமைதி ?

சொற்பெருவெளியில்

சொல்லின் சொல்லாய் அப்பறவை

தன் பொருளை தேடுவதாய்

சொற்களை விலக்கி விலக்கி

முடிவற்று முன் செல்கிறது

அப்போது

உன் உயிரில் முகிழ்க்கும் உணர்ச்சி என்ன ?

பரவசமா ?

ஏகாந்தமா ?

குற்றவுணர்ச்சியின் கூசலா ?

தனிமையா ?

தாங்கொணாத துக்கமா ?

இவற்றில் ஏதாவது ஒன்றை என் கவிதை

உன்னில் உண்டாக்கி விடலாம்

ஆனால் எந்தபொறுப்பையும்

அறிந்திரராதது அது .


சிறகுகள்-தேவதேவன்


வானம் விழுந்து நீர்

சிறகுதிர்ந்து மீனாகிவிட்டது பறவை

நீரில் எழுந்தது வானம்

சிறகு முளைத்துவிட்டது மீனுக்கு

சிறகினுள் எரியும் சூரியத்தகிப்பே

சிறகடிப்பின் ரகசியம் ஆகவேதான்

சுய ஒளியற்ற வெறும் பொருளை

சிறகுகள் விரும்புவதில்லை

பூமி போன்ற கிரகங்களை

அது நோக்குவதேயில்லை

[சிறகடிக்கையில்

வெட்கி ஒடுங்கிக் கொள்கின்றன

பறவையின் கூர்நகக் கால்கள்]

சூர்யனுக்குள் புகுந்து வெறுமே

சுற்றிசுற்றி வருகின்றன சிறகுகள்

சிறகின் இயல்பெல்லைக்குள்

நிற்குமிடமென ஏதுமில்லை

வெளியில் அலையும் சிறகுகளுக்கு

இரவுபகல் ஏதுமில்லை


அமைதி எனபது -தேவதேவன்


பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
உன்னருகே வருகிறேன்


அமைதி என்பது மரணத் தறுவாயோ ?


வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ ?


வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்கு முறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது.


அமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ ?


எழுந்து சென்ற பறவையினால்
அசையும் கிளையோ ?

எஞ்சோட்டுபெண் -தமிழச்சி தங்கபாண்டியன்

‘எனக்கான வார்த்தைகளை
நீ முடிவு செய்கையில்
நான் தேர்கிற மௌனம்
மிக வலிமையானது
ஒரு வயோதிகப் பிச்சைக்காரனைப்
புறந்தள்ளிய அலட்சியத்துடன்
நீ நடக்கும்பொழுது
அவனுக்கு நிழல் தரும் மரத்தின்
திடத்துடன் உன்னைச் சந்திக்கும்
உரத்த குரலெழுப்பும்
மல்யுத்த வீரனின் சவாலுடன்
நீ திமிர்த்திருக்கையில்
நடுங்கும் கைகளுடன் உணவிடும்
தாயின் கனிவுடன் உன்னை நேரிடும்
தன் இரவிற்கான போர்வையினை
ஒரு நாடோடியிடமிருந்து
இரவலாய்ப் பெற்றுக்கொண்டு
உன்னை உறுதியாய் எதிர்கொள்ளும்
தனித்து வரும்
ஒற்றை யானையின் கோபத்துடனும்
பிடிபடா வண்ணத்துப் பூச்சியின் சாதுரியத்துடனும்.

கனாக் கண்டேன் தோழா-வைரமுத்து

கனவெனப் படுவது
மனதின் நீட்சி

அது
ஆழியளக்கும் நாழி
பொய்யில் பூத்த நிஜம்
அன்றி
நிஜத்தில் மலரும் பொய்

* * * * *
என் கனவுகள்
வினோதமானவை

கோளங்களற்ற பெருவெளியில்
உட்கார இடம்தேடுமொரு
பட்டாம்பூச்சியும்

வீழ ஒரு தளமின்றிப்
பயணித்துக் கொண்டேயிருக்கும்
அனாதை மழைத்துளியும்

வாரம் ஒருமுறை வந்துபோகும்
என் கனவில்

* * * * *
ஆயிரம்மைல் நீளத்தில்
உலகராணுவ ஊர்வலம்

அது
அலையற்ற ஒரு கடலில் முடிகிறது

ஒவ்வொரு வீரனும்
கைக்கொண்ட ஆயுதம்
கடலில் எறிகிறான்

எறிந்த ஆயுதம்
விழுந்த இடத்தில்
ஆளுக்கொரு கலப்பை
ஆளுக்கொரு ரோஜாப்பூ
மிதந்து மிதந்து மேலேறி வருகிறது

ஒருமுறை கண்டும்
மறவாத கனவிது

* * * * *
மேகத்தில் ரத்தம்
பூக்களில் மாமிசம்
கத்தியில் கண்ணீர்
வழிந்தன கனவில்

கண்கசக்கி விழிக்குமுன்
ஜாதிக்கலவரம்

* * * * *

கொம்பு முளைத்த
புலியன்று துரத்தும்

ஆற்றில் விழுந்து
சேற்றில் புதைவேன்

கிட்ட இருக்கும் மரத்தின் வேர்
என்ன முயன்றும் எட்டவே எட்டாது

எழுந்து... எழுந்து... அழுந்தி... அழுந்தி...

பரீட்சை மாதம் அதுவென்பதை
எங்ஙன்ம் அறியுமோ என் கனவு?

* * * * *

போக்குவரத்துக்கிடமின்றிச்
சாலைகள் எல்லாம்
தானிய மூட்டைகள்

மூட்டைகளுக்கடியில்
நசுங்கிச் செத்த பிச்சைக்காரர்கள்

பொருளாதாரமும்
புரியும் என் கனவுக்கு

* * * * *


மனதின் நீட்சி

அது
ஆழியளக்கும் நாழி
பொய்யில் பூத்த நிஜம்
அன்றி
நிஜத்தில் மலரும் பொய்

* * * * *
என் கனவுகள்
வினோதமானவை

கோளங்களற்ற பெருவெளியில்
உட்கார இடம்தேடுமொரு
பட்டாம்பூச்சியும்

வீழ ஒரு தளமின்றிப்
பயணித்துக் கொண்டேயிருக்கும்
அனாதை மழைத்துளியும்

வாரம் ஒருமுறை வந்துபோகும்
என் கனவில்

* * * * *
ஆயிரம்மைல் நீளத்தில்
உலகராணுவ ஊர்வலம்

அது
அலையற்ற ஒரு கடலில் முடிகிறது

ஒவ்வொரு வீரனும்
கைக்கொண்ட ஆயுதம்
கடலில் எறிகிறான்

எறிந்த ஆயுதம்
விழுந்த இடத்தில்
ஆளுக்கொரு கலப்பை
ஆளுக்கொரு ரோஜாப்பூ
மிதந்து மிதந்து மேலேறி வருகிறது

ஒருமுறை கண்டும்
மறவாத கனவிது

* * * * *
மேகத்தில் ரத்தம்
பூக்களில் மாமிசம்
கத்தியில் கண்ணீர்
வழிந்தன கனவில்

கண்கசக்கி விழிக்குமுன்
ஜாதிக்கலவரம்

* * * * *

கொம்பு முளைத்த
புலியன்று துரத்தும்

ஆற்றில் விழுந்து
சேற்றில் புதைவேன்

கிட்ட இருக்கும் மரத்தின் வேர்
என்ன முயன்றும் எட்டவே எட்டாது

எழுந்து... எழுந்து... அழுந்தி... அழுந்தி...

பரீட்சை மாதம் அதுவென்பதை
எங்ஙன்ம் அறியுமோ என் கனவு?

* * * * *

போக்குவரத்துக்கிடமின்றிச்
சாலைகள் எல்லாம்
தானிய மூட்டைகள்

மூட்டைகளுக்கடியில்
நசுங்கிச் செத்த பிச்சைக்காரர்கள்

பொருளாதாரமும்
புரியும் என் கனவுக்கு

* * * * *

மேலே
மேலே
மேலே
மேலே
பறக்கிறேன்

எங்கிருந்தோ ஓர் அம்புவந்து
இறக்கை உடைத்து இரைப்பை கிழிக்கக்
கீழே
கீழே
கீழே
கீழே
விழுகிறேன்

ஒரு கையில் வாளும்
ஒரு கையில் வீணையும் கொண்ட
பெண்ணொருத்தி
என்னைத் தன் மடியில் ஏந்திக்கொள்கிறாள்

அடிக்கடி தோன்றும்
அதிகாலைக் கனவிது
அவள்
முகம்பார்க்குமுன் முடிந்துபோகிறது

* * * * *
வெயிலஞ்சும் பாலைவனம்
வெறுங்காலொடொரு சிறுமி
அவளுக்கு மட்டும்
குடைபிடிக்கும் ஒரு மேகம்

அவள் நடந்தால் நகரும்
நின்றால் நிற்கும்

இன்றவள்
எங்குற்றாளோ?
என்னவானாளோ?
இன்று
இருந்தால் அவளுக்கு
இருபத்தொரு வயதிருக்கும்

* * * * *
ஷேக்ஸ்பியர் வீடு...

பிரம்பு வாத்தியார்...

பிரபாகரன் தொப்பி...

கம்பங்கொல்லைக் குருவி...

கலைஞர் கண்ணாடி...

ராத்திரிவானவில்...

அராபத்தின் குழந்தை...

டயானாவின் முழங்கால்...

கொடைக்கானல் மேகம்...

வீட்டில் வெட்டிய ஆட்டின் தலை...

இப்படி...
அறுந்தறுந்துவரும் கனவுகள் ஆயிரம்

* * * * *
கடந்த சில காலமாய்
இப்படியோர் கனவு

இமயமலை - பனிப்பாளம்
தலை இல்லாத ஒற்றை மனிதன்
ஏந்தி நடக்கிறான் தேசியக்கொடியை

அடிவாரத்தில்
கோடி ஜனங்கள் கைதட்டுகிறார்கள்
நிர்வாணம் மறைத்த கையை எடுத்து

என்ன கனவிது?

வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?

* * * * *

மெழுகுவர்த்தி-வைரமுத்து

தனக்காக அல்ல...
தன் திரிக்கரு
சிதைவதை
எண்ணியே
அந்தத் தாய்
அழுகிறாள்

மேனியில் தீ விழுந்து
நரம்புதான் எரியும்...
இங்கோ
நரம்பிலே தீ விழுந்து
மேனி எரிகிறது

மரணத்தை
வரங்கேட்டா
அந்த
உச்சித்தவம் நடக்கிறது?

அந்த ஒற்றைப் பூக்கொண்டை
செடியையே தின்னுகிறதே

விரலை அழிக்கவா
அந்த நெருப்புநகம் முளைத்தது?

நெருப்புப் பாசனம்
அங்கு
நீர்ப்பயிர் வளர்க்கிறது

மெளனத்தை
திரவ வார்த்தைகளால்
அந்தத் தீ நாக்கு
எத்தனை அழகாய் உச்சரிக்கின்றது?

எந்த துயரத்தை எழுதியெழுதி
இப்படி மசிகசிகிறது இந்தப் பேனா?

கண்டு சொல்லுங்கள்
கண்ணெதிரே நடப்பதென்ன
கொலையா? தற்கொலையா?

எப்பொழுதுமே இதற்குத் தேய்பிறையென்றால்
இது என்ன
சபிக்கப்பட்ட நிலவா?

இந்தத்
தீக்குளிப்பின் முடிவில்
மரணத்தின் கற்பு ருசுவாகிறது

இந்தச் சிதையைக் -
கலங்கரை விளக்காய்க் கருதி
விட்டில் கப்பல்கள்
முட்டி மூழ்கும்

அங்கே வடிவது
கண்ணீரென்றால்
கண்கள் எங்கே?

ஓ கண்களைத் தேடியே
அந்த அழுகையோ?

இந்தப் பிணத்திற்குக்
கொள்ளி வைத்த பிறகு தான்
உயிர் வருகிறது

மனிதனைப் போலவே
இந்த
அஃறிணையும் நான்
அதிகம் நேசிப்பேன்

எனக்குள் இது
சாவைச் சாகடிக்கும்

என் இரத்த நெய்யில்
இது
நம்பிக்கைச் சுடரேற்றும்

வாருங்கள் மனிதர்களே
மரணத்திற்கும் சேர்த்து நாம்
மெளன அஞ்சலி செலுத்துவோம்

அதோ
உயிரின் இறுதி ஊர்வலம்
உடல்மேலேயே நடக்கிறது.

இலை- வைரமுத்து

நிறைந்த வாழ்வு என் வாழ்வு

நான் குளித்த மிச்சத்தில்
பூமி குளித்தது

சூரியக்கீற்று
என்னைத் தொட்ட பிறகுதான்
மண்ணைத் தொட்டது

பகலில் நான் விட்ட மூச்சில்
பாழ்பட்ட காற்று
பத்தினியானது

இந்த மரத்தில் நான்
எடுத்தது பகுதி
கொடுத்தது மிகுதி

என் வாழ்விலும்
சாயம் போகாத சம்பவங்கள்
இரண்டுண்டு

அடையாளம் தெரியாத புயலொன்று
தளிர்களையும் தலைவாங்கிப் போனதே
அந்த ராட்சச ராத்திரியும் -
பூவில் வண்டு
கலந்த காட்சி கண்டு
பக்கத்து இலை கொண்டு
முகம் மூடிக்கொண்டேனே
அந்த மன்மதப் பகலும்.

ஒருநாள்
ஒண்டவந்த ஒரு பறவை
கிண்டியது என்னை

"மலராய் ஜனிக்காமல்
கனியாய்ப் பிறக்காமல்
இவ்வடிவு கொண்டதெண்ணி
என்றேனும் அழுதாயோ
ஏழை இலையே!"

காற்றின் துணையோடு
கலகலவென்று சிரித்தேன்

"நல்லவேளை
நான் மலரில்லை

தேனீக்கள் என்கற்பைத்
திருடுகின்ற தொல்லையில்லை

நல்ல வேளை
நான் கனியில்லை

கிளிக்கூட்டம் என் தேகம்
கிழிக்கின்ற துன்பமில்லை

இயல்பே இன்பம்
ஏக்கம் நரகம்"

அதோ அதோ
வாயு வடிவில்
வருகுதென் மரணம்

இதோ இதோ
பூமியை நோக்கி
விழுகுதென் சடலம்

வழிவிடு வழிவிடு
வண்ணத்துப் பூச்சியே

விலகிடு விலகிடு
விட்டில் கூட்டமே

நன்றி மரணமே
நன்றி

வாழ்வுதராத வரமொன்றை
வழங்க வந்தாய் எனக்கு

பிறந்த நாள் முதல்
பிரிந்திருந்த தாய்மண்ணை
முதன்முதல் முதன்முதல்
முத்தமிடப் போகிறேன்

வந்துவிட்டேன் தாயே
வந்துவிட்டேன்

தழுவிக்கொள் என்னைத்
தழுவிக்கொள்

ஆகா
சுகம்
அத்வைதம்

வருந்தாதே விருட்சமே

இது முடிவில்லை
இன்னொரு தொடக்கம்

வாழ்வு ஒரு சக்கரம்
மரணம் அதன் ஆரம்
சக்கரம் சுற்றும்

கிளைக்கு மறுபடியும்
வேறு வடிவில் உன்
வேர்வழி வருவேன்

எங்கே
எனக்காக ஒருமுறை
எல்லா இலைகளையும்
கைதட்டச் சொல்

நட்புக்காலம் -அறிவுமதி

என் துணைவியும்
உன் கணவரும்
கேட்கும் படி
நம்
பழைய மடல்களையெல்லாம்
படித்துப் பார்க்க
ஒரு
மழை தொடங்கும்
நாள் வேண்டும்.

தேர்வு முடிந்த
கடைசி நாளில்
நினைவேட்டில்
கையொப்பம் வாங்குகிற
எவருக்கும்
தெரிவதில்லை
அது
ஒரு நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கை என்று

அணுத்திமிர் அடக்கு -அறிவுமதி

கொடிமரம்
ஒடி

சிறைகள்
இடி

இராணுவம்
அழி

அரசுகள்
அற்ற
அரசினைச்
செய்
'
கனவைச்
சுருட்டு

புனிதம்
விரட்டு

தீது
செயற்கை

காத்திருக்காதே

கற்பு
உடலுக்கு

காதல்
உயிருக்கு

காதலி

கோடுகளும் சித்திரங்களே-வைரமுத்து


என்
பாதங்களுக்குக் கீழே
பூக்கள் இல்லை
மொய்த்துக் கிடந்தவை
முட்களே.
எனினும்
ரத்தம் துடைத்து
நடந்து வந்தேன்.

என்னைத்
தடவிச் சென்றது
தெற்கே குளித்து வந்த
தென்றல் அல்ல
நுரையீரல்களை -
கார்பன் தாள்களாய்க்
கறுக்க வைக்கும்
கந்தகக்காற்று
இருந்தும்
சுடச்சுடவே
நான்
சுவாசித்து வந்தேன்

ஆண்டு முழுவதும் இருந்த
அக்கினி நட்சத்திரத்தில்
எரிந்து போயிற்று
எனது குடை
ஆயினும்
என்
நிழலின் நிழலிலேயே
நீண்டதூரம் ஒதுங்கிவந்தேன்

என்
தலைக்கு மேலே
பருந்துகள் எப்போதும்
பறந்துகொண்டிருந்ததால்
நான் இன்னும்
செத்துவிடவில்லை
என்பதை
நித்தம் நித்தம்
நிருபிக்க வேண்டியதாயிற்று

என் நிர்வாணத்தை
ஒரு கையால்
மறைத்துக்கொண்டு
என்
அடுத்த கையால்
ஆடை நெய்து
அணிந்து கொண்டேன்

இன்று-
என்
பிரவாகம் கண்டு கரைகள்
பிரமிக்கலாம்
ஆனால் -
இந்த நதி
பாலைவனப் பாறைகளின்
இடுக்கில் கசிந்துதான்
இறங்கி வந்தது

தனது
சொந்தக் கண்ணீரும்
சுரந்ததால்
இரட்டிப்பானது
இந்த நதி

இந்த விதை
தன்மேல் கிடந்த
பாறைகளை
முட்டி முட்டியே
முளைத்துவிட்டது

இன்று என்
புண்களை மூடும்
பூக்களினால்
நான்
சமாதானம் அடைவது
சாத்தியமில்லை
இந்தச்
சமூக அமைப்பு
எனக்குச்
சம்மதமில்லை

சரிதம் என்பது
தனி ஒரு
மனிதனின்
அறிமுக அட்டையோ...?
அல்ல
அது
முடிவைத்தேடும்
ஒரு சமூகத்தின்
மொத்த விலாசம்

இதுவோ...
ரணத்தோடு வாசித்த
சங்கீதம்...
எனது
ஞாபக நீரோடையின்
சலசலப்பு...
நசுங்கிய
நம்பிக்கைகளுக்கு
என்
பேனாவிலிருந்தொரு
ரத்ததானம்

இதில்
சில நிஜங்களைச்
சொல்லவில்லை என்பது
நிஜம்.
ஆனால் -
சொன்னதெல்லாம் நிஜம்

நான்
வரைய நினைத்தது
சித்திரம்தான்.
வந்திரப்பவை
கோடுகளே
ஆனால் -
கோடுகளும்
சித்திரங்களே!

மனித நேசம்தான்
வாழ்க்கை என்பதை
அறிய வந்தபோது
என்
முதுகில் கனக்கிறது
முப்பது வயது.