வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

வழிமயக்கம்-கலாப்ரியா


பாதை நொடியின்

ஒவ்வொரு

குலுக்கலுக்கும்

நொதித்த திரவம்

பீப்பாயின்

பக்கவாட்டில் வழிந்து

பாளைச் சொட்டை

சுவைத்து

மயங்கியிருந்த வண்டுகளை

வெளித்தள்ளின.

கிறக்கம் நீங்க நீங்க

வண்டியின் வேகத்திற்கு

ஈடு கொடுத்து

அவை பறந்து

பறந்து விழுந்தன

நிழலில் நிறுத்தி

முற்றாய்ச் சுடாத

கலயத்தில் சாய்த்த

திருட்டுக்கள்ளை

மாந்தி மாடுகளுக்கும்

தந்தான்

இப்போது பாதையில்

நொடியே இல்லை

வண்டிக்கும் மாடுகளுக்கும்

வண்டியோட்டிக்கும்

உயர்திணை
பற்றிய

கிளை விட்டே
மேலெழும்புகிறது
பறவை
வெட்டி
வீழ்த்தப்பட்ட
போதும்
துளிர்விட்டு
சிரிக்கிறது
விருட்சம்
புதைந்த
போதும்
முகிழ்த்து
கிளம்புகிறது
விதை
உதிரும்போதும்
சிரித்தும்
மனம் கமழ்ந்தும்
மலர்
பற்றியதை
விடவும்
முகிழ்த்து எழவும்
துயரில் மணக்கவும்
இல்லை
நேற்றைய தோல்விக்கு
இன்றுகளை பலிகொடுக்கும்
நான் எப்படி ஆனேன்
உயர்திணை

வாழ்வின் வெகுமதி


எல்லோருக்கும்
தருவதற்கு
பிரியங்களை
தவிர வேறொன்றுமில்லை
விருப்பு வெறுப்பின்
மேடு பள்ளங்களை
கடந்து நதியென
பரவுகிறேன்
எனது
பிரியங்கள்
நித்தியமானவை
ஒரு பெயர் அற்ற
சாலை மலரென
என்றேனும்
ஒரு சிறுவன்
கொய்து உச்சி முகரலாம்
இதழ் இதழாய்
முத்தமிடலாம்
புறக்கணிப்பின்
வலிகளை கடந்து
பிஞ்சு விரல்களில்
கமழும் மணமும்
ஒட்டிய நிறமும்
வாழ்ந்த வாழ்வின்
உன்னத தருணங்கள்

சில கவிதைகள்

சொற்களுக்கு
அப்பால்
நிரம்புகிறது
மௌனம்
சொற்
படகுகள்
உடைந்து கரைகிறது
மௌன வெளியில்

உதிர்வதும்
துளிர்ப்பதுமாய்
வாழ்வு
மலரென
சமயங்களில்
முள்ளாய்

எந்த
சொல்லேனும்
உணர்த்திவிடுமா
ஏன்
சொல்லில் அடங்கா
பிரியங்களை

வார்த்தைகளுக்கு
தவமிருந்து
வடித்த
கவிதையை
காட்டிலும்
ஒரு கிழவியின்
கபடமில்லா சிரிப்பு
நிரப்பி விடுகிறது
காகிதங்களுக்கும்
அப்பால் ஒரு கவிதையை

எல்லாவற்றையும்
எழுதி விட
முடிவதில்லை
கவிதையாய்
சில கவிதைகள்
வார்த்தைகளுக்கு
அடங்காமல்

எனக்கு பொழுது போகவில்லை எனில் இப்பிடி தான் மொக்கை போடுவேன் திட்ட படாது

காதல் கவிதை

மௌன
வெளியில் உடைந்து
சிதறுகிறது
துளி கண்ணீர்
மரத்தின் இறுதி
இலையென
உனது
நினைவுகளின்
சுவடுகளில்
நிரம்பி வழிகிறது
கண்ணீரும்
எவருடனும்
பகிரவியலா காதலும்
ஒரு உதிர்
பூ
நதியின் அலைகளில்
நிகழ்த்தும்
நடனமென
காலவெளியில்
என் காதலும்
உனது
வனங்களில்
தொலைந்து
போகிறேன் சாபங்களின்
பள்ளத்தாக்குகளில்
மீண்டு
விலகி
சென்றாலும்
கரை தேடும்
அலையென
தேடிக்கொண்டே
கரைந்து கொண்டிருகிறது
வாழ்வும் காதலும்