அங்கேயே
கண் முன்னால்ஒரு வசந்தம் போனது
நான் மட்டும் அங்கேயே
நின்றுகொண்டிருக்கிறேன்
ஏதோ
ஒரு பேருந்தை
தவற விட்டதுபோல
விழ முடியாத நிழல்
உன்னை
யாரோ ஒருவரிடம்
ஒப்படைத்துவிட்டு
மனம் உலர்ந்து
திரும்பும் வழியில்
என் நிழல்
தரையில் விழவில்லை
சுவரில் விழவில்லை
நீரில் விழவில்லை
நிலைக்கண்ணாடியில் விழவில்லை
அது வீழ்வதற்கு
எங்குமே
சமாதானமில்லாமல்
சட்டென
ஒரு புகைமூட்டமாகி
கலைந்து செல்கிறது
எப்போது வருவாய்
நீ எப்போது
வருவாய்?
அந்தப் பெண்
கண்களில் நீர் தளும்ப
யாரிடமோ
தொலைபேசியில்
இந்தக் கேள்வியைத்
திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறாள்
நான் கவனிப்பதைப் பற்றி
கவலைப்பட அவளுக்கு
எந்த அவகாசமும் இல்லை
எப்போது வருவாய்
என்பதைக் கேட்பதைத் தவிர
அவளுக்கு இந்த உலகத்திடமிருந்து
தெரிந்துகொள்ள எதுவும் இல்லை
அவள் பிடிவாதமாக இருந்தாள்
மன்றாடுதலுடன் இருந்தாள்
தனிமையாக இருந்தாள்
எந்தக் கணமும் உடைந்து அழக்கூடியவளாக இருந்தாள்
எத்தனை யுகங்களாய்
இதே குரலில்
இதே கண்ணீருடன்
இதே கேள்வி கேட்கப்படும்
என்று தெரியவில்லை
வர வேண்டிய யாரோ ஒருவர்
இன்னும் வராமலேயே
இருந்துகொண்டிருக்கிறார்
என் நற்கணங்கள்
பாடம் செய்யப்பட்ட
வண்ணத்துப்பூச்சிகளைப்போல
இந்தச் சுவர்களெங்கும்
ஒட்டப்பட்டிருக்கின்றன
என் நற்கணங்கள்
எத்தனை சின்ன ஆயுள்
எத்தனை சின்ன பறத்தல்கள்
எத்தனை சின்ன அலைபாயுதல்கள்
இருந்தும்
எவ்வளவோ வண்ணங்களால்
நிரம்பியிருந்தன
என் நற்கணங்கள்
அவை
சிறுபொழுதில்
நீர்க்குமிழிகள் போல உடைகின்றன
அல்லது
நீர் வளையங்கள் போல வெளியேறிவிடுகின்றன
துர்க்கணங்கள் நிகழ்வது போல
ஒரு நாளாக இல்லை
ஒரு பருவமாக இல்லை
ஒரு யுகமாக இல்லை
எனதிந்த நற்கணங்கள்
அவை
வந்தபோது
வந்ததாகக் கூடத் தெரியவே இல்லை
நற்கணங்கள் ஒரு பொழுதும் தங்குவதில்லை
ஆனால் அது தன் சுவடுகளை
ரத்தக்கறைபோல விட்டுச் செல்கிறது
ஒரு பசித்த விலங்கு
அந்தச் சுவடுகளை
எப்போதும் அறியாமையுடன் பின் தொடர்கிறது
நற்கணங்களை எப்படிப் பாதுகாப்பது
என்று தெரியவில்லை
அது ஒரு மலராக இருந்தால்
தொட்டுப் பார்ப்பதற்குள் வாடி விடுகிறது
அது ஒரு கண்ணாடியாக இருந்தால்
சற்றே அழுத்தமாகப் பற்றுவதற்குள்
உடைந்து விடுகிறது
அது நாம் நிற்கும் மர நிழலாக இருந்தால்
சூரியன் வேறு கோணத்திற்கு நகர்ந்துவிடுகிறது
அது வழியில் சந்தித்த ஒருவராக இருந்தால்
அவருக்கு வழிகாட்ட நமக்குத் தெரிவதில்லை
அன்பே
ஒரு கூழாங்கல்லைப் போல
என் துர்கணத்தை
ஒரு கையில் பற்றியிருக்கிறேன்
ஒரு பனிக்கட்டியைப் போல
என் நற்கணத்தை மறுகையால் பற்றியிருக்கிறேன்
ஒரு வண்ணத்துப்பூச்சி
ஒரு கழுகாக மாறும் வினோதத்தைப் பார்த்தபடி
வெகுநேரமாய்
இங்குதான் நின்றுகொண்டிருக்கிறேன்
தனியாக இல்லை
தன்னந்தனியே வீழ்பவன்
யாரோ ஒருவன்
தன்னைத் தொட்டுத் தூக்கும்போது
நினைக்கிறான்
தான் தனியாக இல்லை
என்று
சாலையின் ஓரத்தில் வீழும்
யாரோ ஒருவனைத்
தொட்டுத் தூக்கும்
யாரோ ஒருவன்
நினைக்கிறான்
தான் தனியாக இல்லை
என்று
ஒரு வினாடித் தனிமை
எங்கிருந்தோ
யாரோ ஒருவரிடமிருந்து
யாரோ ஒருவரைப்பற்றி அறிவது போல
என்னைப் பற்றி
ஏதோ ஒன்றை நீ அறிய நேர்கையில்
கண்ணீரின் ஒரு துளி பளபளப்பை
முகச்சிவப்பின் ஒரு துளி தீச்சுடரை
யாரும் அறியாமல் மறைத்துக்கொள்ள
அப்போது உனக்கு
ஒரே ஒரு வினாடி தனிமை கிட்டுமா?
களைப்பு
இன்று எவ்வளவு
களைப்பாகத் திரும்பி வந்திருக்கிறேன்
என்றால்
இந்த வரிகளின் மீது
என் கடவாய் எச்சில் வழிகிறது
இதன் வாக்கியங்களின் அர்த்தங்களின்மீது
நான் தூங்கி வழிகிறேன்
பிரகாசமாக எரியும் ஒரு விளக்கின் கீழ்
நான் நிர்வாணமாக நின்றுகொண்டிருக்கிறேன்
இன்று எனக்கு அளிக்கப்பட்ட உணவை
நான் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அன்பே
இன்று நான்
எவ்வளவு களைத்திருக்கிறேன் என்றால்
உனது இந்த முத்தத்தை
இன்று மட்டும் வேறு யாருக்காவது
கொடுத்துவிடு என்று கேட்கும் அளவுக்கு
மறுபக்கம்
நான் மறுபக்கத்தைப்
பார்க்க விரும்பவில்லை
ஒரு நியாயத்தின் மறுபக்கம்
நமது நியாயங்களை மறுதலித்துவிடும்
ஒரு கண்ணீரின் மறுபக்கம்
நமது கண்ணீரை அர்த்தமற்றதாக்கிவிடும்
ஒரு மனிதனின் மறுபக்கம்
அவனை நிரந்தரமாக நம்மிடமிருந்து பிரித்து விடுகிறது
நான் மறுபக்கத்தைப்
பார்க்க விரும்பவில்லை
நாம் மறுபக்கத்தைப் பார்க்கும்போது
நம் கைகள் கட்டப்பட்டுவிடுகின்றன
நமது இதயம் கனத்து விடுகிறது
நமது அம்புகள் முனை முறிந்துபோய் விடுகின்றன
நமது எல்லா வழிமுறைகளும் பயனற்றதாகிவிடுகின்றன
நான் ஒரு மறுபக்கத்திற்குள் நுழையும்போது
ஒரு இருண்ட அறைக்குள் நுழைகிறேன்
நான் ஒரு மறுபக்கத்தை தொடும்போது
இருளில் வழுவழுப்பான எதையோ தொடுகிறேன்
நான் ஒரு மறுபக்கத்தின் மூச்சுக்காற்றை உணரும்போது
எனது சுவாசம் ஒரு கணம் நின்றுவிடுகிறது
நான் ஒரு மறுபக்கத்தைப் புரிந்துகொள்ளும்போது
நான் அவ்வளவு நஞ்சாகிவிடுகிறேன்
யாருமற்ற அறையில்
திடீரென நிலைக்கண்னாடியில்
ஒரு பிம்பம் விழுகிறது
நீங்கள் நிலை குலைந்து போகிறீர்கள்
உங்களுடைய மறுபக்கம்
நீங்கள் அங்கே இல்லாதபோது விழும்
உங்கள் நிழல்
உங்களால் அதை வழி நடத்த முடியாது
உங்களிடமிருந்து அதைத் துண்டிக்கவும் முடியாது
நீங்கள் அதை ஒரு துணியால் மூடுகிறீர்கள்
ஒரு காகிதத்தால் மூடுகிறீர்கள்
ஒரு கோப்பை மதுவால் மூடுகிறீர்கள்
அதிகாரத்தால், பணத்தால், அன்பால், வன்மத்தால் மூடுகிறீர்கள்
அதுவோ
உங்கள் மண்டியிடுதலுக்காக காத்திருக்கிறது
உங்கள் நிர்வாணத்திற்காக காத்திருக்கிறது
உங்கள் சாவுக்காக காத்திருக்கிறது
நான் ஒரு மறுபக்கத்தைப் பார்க்க நேரும்போது
மேலும் புரிந்துகொள்பவனாக இருக்கிறேன்
மேலும் விட்டுக் கொடுப்பவனாக இருக்கிறேன்
மேலும் என் இயல்புகளை மாற்றிக்கொள்கிறேன்
மேலும் நான் என் சொற்களை இழக்கிறேன்
எந்த ஒன்றிலும் மறுபக்கத்தைக் காண்பது
அது
இன்னொரு பாதியைப் பூர்த்தி செய்வதல்ல
ஒரு பாதியை அழிப்பது
அது
அறியாத ஒன்றை அறிவதல்ல
அறிந்த ஒன்றை இழப்பது
அது
ஒரு முழு நிலவிற்குக் கீழ் நடப்பதல்ல
ஒரு உடைந்த நிலவிற்குக் கீழ் கண்ணீர் சிந்துவது
அது
நள்ளிரவில் ஒரு பூனையின் குழந்தைஅழுகுரல் அல்ல
உண்மையிலேயே ஒரு குழந்தையின் அழு குரல்
ஒரு உண்மையின் மறுபக்கத்திலிருந்து
இன்றைய நம் பொய்கள் அனைத்தும் பிறக்கின்றன
ஒரு காதலின் மறுபக்கத்திலிருந்து
இன்றைய நம் பாசாங்குகள் அனைத்தும் நிகழ்கின்றன
ஒரு புத்திசாலித்தனத்தின் மறுபக்கத்திலிருந்து
இன்றைய நம் வீழ்ச்சியின் பாதைகள் தொடங்கின
ஒரு கருணையின் மறுபக்கத்திலிருந்து
இன்று நாம் கொலைக்களம் நோக்கி நடந்துகொண்டிருக்கிறோம்
எங்கேனும் இருக்கக்கூடும்
மறுபக்கம் இல்லாத ஒரு சுவர்
நாம் அதைத் தாண்டிச்செல்ல வேண்டியதில்லை
மறுபக்கம் இல்லாத ஒரு அன்பு
நாம் அதை சந்தேகிக்க வேண்டியதில்லை
மறுபக்கம் இல்லாத ஒரு ரகசியம்
நாம் அதற்கு அஞ்ச வேண்டியதில்லை
மறுபக்கம் இல்லாத ஒரு காகிதம்
நாம் இந்த வரிகளை
அதன் இன்னொரு பக்கம் நோக்கி செலுத்த வேண்டியதில்லை
கேட்கப்படாத ஒருவன்
‘என்னைப் பற்றி
யாருமே கேட்கவில்லையா?’
என்று கேட்கும்போது
உன் குரல் கொஞ்சம் உடைந்து விடுகிறது
உன்னைப் பற்றி
அங்கே யாரும் கேட்கவில்லை
நான் அங்குதான் இருந்தேன்
எங்கு
நீ அவ்வளவு சம்பந்தப்பட்டிருப்பதாக
நினைத்தாயோ
அங்குதான்
வேர் பரப்பி அமர்ந்திருந்தேன்
உன்னைப் பற்றி யாரும் கேட்கவில்லை
வேறு எல்லாமே கேட்கப்பட்டது
நீ வாழ்கிற உலகில் உன்னைத்தவிர
எல்லாமே பேசப்பட்டன
ஒரு வேளை உன்னைப் பற்றிக்
கேட்க நினைக்கிற எதுவுமே
துரதிருஷ்டத்தைக் கொண்டுவருவதாக இருக்கலாம்
உன்னைப் பற்றி
நினைக்க விரும்புகிற எதுவும்
யாரோ ஒருவரை மனமுடையச் செய்துவிடலாம்
நீ அங்கிருந்து வெளியேறிச் சென்ற
வழிகளின்மீது
இப்போது முற்புதர்கள் படர்ந்திருக்கலாம்
ஒருவேளை
நீ ஒரு மறக்கப்பட்டவனாக இருந்திருந்தால்
நான் நினைவூட்டுபவனாக இருந்திருப்பேன்
நீ தவிர்க்கப்படுபவனாக இருந்தாய்
உன் பெயருக்கு
அவர்கள் அஞ்சினார்கள்
அது உறையிலிருந்து உருவப்படாத
வாள் போல
அந்த வீட்டின் மையத்தில் இருந்தது
அவர்கள் அதைத் தாண்டிக்கொண்டு
குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார்கள்
நீ உன் ரத்தக்கவுச்சியுடன்
பொறுமையாக காத்திருந்தாய்
‘யாருமே என்னைப் பற்றிக் கேட்கவில்லையா’
என்று தவிக்கும் உன் கண்களின் பளபளப்பு
ஒரு கானல் நீர்போல அசைந்துகொண்டிருக்கிறது
நீ இல்லாத இடத்தில்
நீ இல்லாமல் போவதில்லை
இருக்கிறாய் வேறொன்றாக
என்பதை எப்படி நிரூபிப்பேன்
நீ விலக்கப்படும் இடங்களில்
அவர்களின் கனவுகளில் உயிர்த்தெழும்
தீய ஆவியாக உருக்கொள்கிறாய்
அவர்கள் விழித்தெழும்போதோ
அவர்களின் நிழல்களுக்குள்
உன் நிழல்களைக் கரைத்துவிடுகிறாய்
நீ இல்லை என்று
அவர்கள் ஒருவருக்கொருவர்
நிரூபிக்கும் வேளையில்
உன் ஏவல் பொம்மைகள்
நடனமாடத் தொடங்குகின்றன
உன் பெயரின் தடங்களை
அவர்கள் தம் பேச்சிலிருந்து கழுவும்போது
உன் வார்த்தைகளின் பைத்தியக்குரல்கள்
சுவர்களிலிருந்து பெருகத் தொடங்குகின்றன
உன்னைப் பற்றி அவர்கள்
இனி ஒருபோதும்
கேட்காமலேயே இருந்துவிடக்கூடும்
அவர்கள் வேறெப்படியும்
உன் சதுரங்க கட்டங்களின் சூழ்ச்சிகளைத் தாண்டி
தங்கள் வீடுகளில்
பாதுகாப்பாக இருக்க முடியாதுதானே
பூனை என்னும் மிருகம்
பூனை எச்சரிக்கையுள்ள
ஒரு மிருகம்
மழைக்கான அறிகுறி துவங்கும் முன்பே
அது தன் குட்டிகளை எங்கோ ஒளித்து வைத்துவிடுகிறது
பூனை உள்ளுணர்வுள்ள
ஒரு மிருகம்
எந்த இருட்டிலும் அதற்குத்
தனது பாதைகள் தெரியும்
பூனை நம்பிக்கையுள்ள
ஒரு மிருகம்
எவ்வளவு நேரம் ஆனாலும்
எனக்காக அது காத்திருக்கிறது
பூனை சந்தேகமுள்ள
ஒரு மிருகம்
ஒருபோதும் என்னை அது
முழுமையாக நம்புவதில்லை
பூனை பிடிவாதமுள்ள
ஒரு மிருகம்
தனக்கான உணவைப் பெற்றுக்கொள்ளும்வரை
அது அங்கேயே நின்று கொண்டிருக்கிறது
பூனை மன நெகிழ்ச்சியுள்ள
ஒரு மிருகம்
நாம் தொடுவதை
அது அவ்வளவு விரும்புகிறது
பூனை தந்திரமுள்ள
ஒரு மிருகம்
அது இருக்கும் இடத்திலேயே
இல்லாததுபோல நடந்துகொள்கிறது
பூனை சகவாழ்க்கையின் நிபந்தனைகள் அறிந்த
ஒரு மிருகம்
அதற்குத் தன்னை எப்போது மறைக்க வேண்டும்
எப்போது வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்
என்று தெரியும்
பூனை குழந்தைகளின் இயல்புள்ள
ஒரு மிருகம்
அது குழந்தைகளை விடவும்
நம்மைச் சார்ந்திருக்கிறது
பூனை உணர்ச்சிகளை அழுத்தமாக மறைத்துக்கொள்ளும்
ஒரு மிருகம்
அதன் கண்களை நம்மால்
ஒருபோதும் நேருக்கு நேர் பார்க்கவே முடியாது
பூனை பரிதாபத்திற்குரிய
ஒரு மிருகம்
எதற்காகவும்
யாரையும் அதனால்
எதிர்த்து நிற்க முடிவதே இல்லை
பயனற்றுப் போகும்போது
எல்லா பொறுப்புகளிலிருந்தும்
விடுவிக்கப்பட்டு விடுகிறாய்
உன்மீதான மனக்குறைகள்
நிரந்தரமாக நீங்கிவிடுகின்றன
உன்னைப் பற்றிய புகார்கள்
என்றென்றைக்குமாக
ரத்து செய்யப்பட்டுவிடுகின்றன
நீ பயனற்றுப்போகும்போது
வேலியில் பூத்துக்கிடக்கும்
ஒரு கொடிபோல ஆகிவிடுகிறாய்
உனக்கு யாரும் நீரூற்றுவதில்லை
உனது மலர்களுக்காக யாரும் காத்திருப்பதில்லை
ஆனாலும் நீ ஒரு செடியாகவோ
மலராகவோ இருக்கத்தான் செய்கிறாய்
உன் மேல் திணிக்கப்பட்ட
குற்ற உணர்வுகளை இறக்கி வைப்பதற்கு
உனக்கு இதைவிட
வேறு சந்தர்ப்பம் வரப்போவதில்லை
நீ செய்யத் தவறிய ஒவ்வொன்றிற்கும்
பதிலளிக்கும் கடமையிலிருந்து நீ விடுவிக்கப்பட
இதைவிட்டால்
உனக்கும் வேறொரு தருணம் வரப்போவதில்லை
நீ பயனற்றுப் போகும்போது
நீ நிபந்தனைகளிலிருந்து விடுவிக்கப்படுகிறாய்
நிபந்தனையற்று மன்னிக்கப்படுகிறாய்
உனது ஆரோக்கியம்
உன்னை ஒரு பணயப் பொருளாக்குகிறது
உனது திறன்கள்
உன்னைப் புதிய பொறிகளில் சிக்க வைக்கின்றன
உனது சாத்தியங்கள்
உண்மையில் உனக்கான
எல்லா சாத்தியங்களையும் மூடி விடுகிறது
நான் நலமற்றுப் போகையில்
இந்தப் படுக்கை முழுக்க
என்னுடையதாகிவிடுகிறது
நான் அதன் பரப்பளவை
முழுமையாகப் பயன்படுத்துகிறேன்
அதன் தனிமைக்குள்
முழுமையாக என்னை ஒப்புக் கொடுக்கிறேன்
அது ஒரு தீவு போல இருக்கிறது
அல்லது
வனாந்திரத்தின் சின்னக் குகைபோல இருக்கிறது
என் காலடி ஓசைகளை அதில் நானே கேட்கிறேன்
எனக்குக் கிழமைகள் இல்லாமல் போகிறது
தேதிகள் இல்லாமல் போகிறது
மணிகளோ
பகல்களோ இரவுகளோகூட
இல்லாமல் போகும்போது
அப்போது
இந்த உலகம் முற்றிலும் வேறொன்றாக மாறிவிடுகிறது
அது நாம் இதுவரை வாழ்ந்த உலகம்போலவே இல்லை
அது ஒரு துறவியின்
உலர்ந்த மான் தோல்போல உள்ளது
அப்போது நான் கட்டவேண்டிய
ஒரு பில் பற்றி நினைக்கிறேன்
உடனே அதை மறந்து போகிறேன்
ஒரு அன்பை
ஒரு விரோதத்தை நினைக்கிறேன்
உடனே மறந்து போகிறேன்
ஒரு நோய்ப்படுக்கை
ஒரு புனிதரின் மடிபோல உள்ளது
நான் அதன் பயனின்மையை வணங்குகிறேன்
நீ பயனற்றுப் போகும்போது
கண்ணீர் சிந்த வேண்டியதில்லை
ஏதோ ஒன்று
வீணாகிவிட்டது என்று பயப்பட வேண்டியதில்லை
பயனற்றுப் போகாவிட்டால்
பிறகு எப்படி
ஒரு சிசுவைப்போல
மறுபடி பிறந்து
இந்த உலகத்திற்குள் வர முடியும்?
யாருக்கும் நிகழ்வது போல
இங்கும்
அங்கும்
எங்கும்
பறந்தலைகிறது
ஒரு வண்ணத்துப்பூச்சி
எங்கோ
அதற்கு ஒரு பிரத்யேக
இடம் இருப்பதுபோல
இப்படியே பறந்து
வெகுதூரம் போய்விடலாம்
என்பதுபோல
ஒரு துடைத்தழிக்க முடியாத
நினைவைப்போல
இந்த உலகில்
அது எங்குமே தரிக்க முடியாது
என்பது போல
இதே அறையில்
இதே இடத்தில்
இதே உயரத்தில்
பறக்கும் வண்ணத்துப்பூச்சி
கடைசியில் ஒரு நாள்
ஒரு காகிதப்பூவில் அமர்கிறது
ஒரு காகிதப்பூ வண்ணத்துப்பூச்சிக்கோ
ஒரு வண்ணத்துப் பூச்சி காகித மலருக்கோ
தர ஏதுமற்ற போதும்
அங்கே ஏதோ ஒன்று
நிகழாமல்
போகவில்லை
ஒரே விதியைப் பகிர்ந்துகொள்ளும்
யாருக்கும் நிகழ்வதுபோல
manushyaputhiran@gmail.com
நன்றி உயிர்மை இணையதளம்
வணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...
சூப்பர்
ReplyDeleteஉங்கள் கவிதை
ReplyDeleteகாயங்களால்
எனை கலங்கவைக்கிறது.
நான் அழாத குறையாக மட்டும்
கரைந்து அழிந்து மறைந்துவிடுறேன்
யாரோ ஒருவரிடம்
ReplyDeleteஒப்படைத்துவிட்டு
மனம் உலர்ந்து
திரும்பும் வழியில்
என் நிழல்
தரையில் விழவில்லை
சுவரில் விழவில்லை
நீரில் விழவில்லை
நிலைக்கண்ணாடியில் விழவில்லை
அது வீழ்வதற்கு
எங்குமே
சமாதானமில்லாமல்
சட்டென
ஒரு புகைமூட்டமாகி
கலைந்து செல்கிறது
Super ❤️
Deleteவண்ணங்கள்தான்
ReplyDeleteஈர்க்கிறது முதலில்!!
விரைந்து
பிடிக்க எத்தணிக்கையில்
விரல்கள் பட்டு
சிறகுகள் சேதப்பட்டுவிடுகிறது!!
வலியையும் தாண்டி,
பறக்கும் சுதந்திரம்
பறிக்கப்பட்ட
அவமானமும்
சுமந்திருக்குமோ
செத்துப்போன
வண்ணத்து பூச்சி?
❤️
ReplyDeleteHarrah's Cherokee Casino - Dr.MCD
ReplyDeleteAn American Gaming 영주 출장마사지 Conference has been held to discuss Harrah's Cherokee Casino's 부천 출장안마 current offerings. The 여주 출장샵 event 포항 출장안마 will be held 제주도 출장샵 on Friday, May 29.
Dheena
ReplyDelete