வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

மணலின் கதை

உதறி விடுவித்துக்கொண்ட
கைகளை நான் முத்தமிடக் குனிகையில்
தொண்டையை அடைத்ததில்லை
அவமானத்தின் எந்தக்கசப்பும்

நிராகரிப்பின்
நெருப்பை எடுத்து
ஏற்றி வைப்பேன்
வீட்டின் நடுவே ஒரு விளக்கை

திரும்பிப் பாராமல்
போனவர்களின் கால் தடம் பற்றி
தொடர்ந்து போவேன்
ஒரு சந்தேகமுமின்றி

வெளியேறச் சொன்னவர்களிடம்
நாளை மீண்டும் சந்திப்போம்
என்பதன்றி வேறொன்றும்
சொல்லத் தோன்றியதில்லை

இன்று வாழ்ந்து கொண்டிருப்பதில்
எவ்வளவு பனி
எவ்வளவு நட்சத்திரங்கள்
எவ்வளவு தனிமை
எவ்வளவு இயலாமைகள்
ஒரு வருத்தமில்லை
ஒரு துளிக்கண்ணீரில்லை

இன்றென்னைக்
கொல்வதெல்லாம்
உன்
கருணையிலிருந்து பிறக்கும்
ஒரு கனிவு

ஒரு
கடமையிலிருந்து
உதிக்கும்
உன் பரிவு

manushya puthiran

No comments:

Post a Comment