வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

நீராலானது

ஓர் அற்புதத்திற்காக
———————
ஓர் அற்புதத்திற்காக காத்திருக்கிறேன்
அது நிகழவேயில்லை
அற்புதங்கள் இனி நிகழாதென்றே
சகுனங்களும் சொல்கின்றன

ஆனால்
நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது
அற்புதத்திற்கு முந்தைய ஒரு கணம்

இன்னும் ஒரே ஒரு கணம்தான்
என்று சொல்லிக்கொண்டேயிருக்கும்
ஒரு கணம்

இழந்த காதல்
————–
நின்று சலித்த
என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது

மரங்கள் நடப்பது
சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்

ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்

கசங்குதல்
———–
இன்று
உன்னுடையதுபோலவே இல்லை
உன் பிரியம்

என்றாலும்
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நீண்ட நாட்களின்
நீண்ட வெயிலில்
ஓர் உணர்வு
எப்படி கசங்குகிறதென்று

ஒரு மலர் கசங்குவதுபோலவோ
ஒரு துணி கசங்குவதுபோலவோ
ஒரு காகிதம் கசங்குவதுபோலவோ
இல்லை அது

விடுவிப்பிற்குப் பின்
——————–
இத்தோடு
என்னைப்பற்றிய
குற்ற உணர்வுகள் அனைத்திலிருந்தும்
உன்னை விடுவித்துவிட்டேன்

ஆனால்
அது ஏன்
ஒரு வெறுப்பைப்போல
ஒரு பிரிவைப்போல
ஒரு புறக்கணிப்பைப்போல
காட்சியளிக்கிறது?

என்னைப் பற்றிய வருத்தங்கள்
——————————-
நான் உனக்காக
விட்டுச் செல்லும்
சிறந்த பரிசு
என்னைப் பற்றிய
இந்த வருத்தங்கள்

என்னைப் பற்றிய
வருத்தங்கள்
விநோதக் கதைகள் போல
என்னிடம் வருகின்றன
கபடமற்ற ஒரு குழந்தையாக
அவற்றைக் கேட்கிறேன்

என்னைப் பற்றிய வருத்தங்களை
நான் உருவாக்கவில்லை
எனக்கு முன்பாகவே
வெகுகாலமாக
அவை நிலவி வருகின்றன

என்னைப் பற்றிய
உன் வருத்தங்களை
மறுத்து
ஒரு சொல்லும் கூற மாட்டேன்
ஒரு இரகசிய நகக்குறி போல
நம் அந்தரங்கங்களில் அவை வலிக்கட்டும்

என்னைப் பற்றிய
வருத்தங்கள் மட்டும்
இல்லாமல் போனால்
இவ்வளவு காதலை
இவ்வளவு கண்ணீரை
எங்கு போய் மறைப்பாய்


No comments:

Post a Comment