வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

கல்யாண்ஜி கவிதைகள்

சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை
*****************************************
தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவேஎந்தக் கடிதமும் இல்லாதஏமாற்றம்.
இன்று எப்படியோஎன்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறுஇறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.
**********************************************
நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது
*************************************
குற்றவுணர்வுகள் ஏதுமில்லை
சந்தோஷமாகவே இருக்கிறது
ஆனாலும் அவள் என்கனவில் வந்ததை
இவளிடம் சொல்லமுடியவில்லை
இவளுக்கும் இருக்கலாம்
குற்றவுணர்வுகள் அற்ற
சந்தோஷம் தந்த
என்னிடம் சொல்ல முடியாத
இவள் அவனிடம் பேசுகின்ற கனவுகள்.
அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல்
அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல்
இவளும் நானும்
இருக்கின்றோம்
சந்தோஷமின்றி, குற்றவுணர்வுகளுடன்.
************************************************
தானாய் முளைத்த
செடி என்கிறார்கள்
யாரோ வீசிய
விதையிலிருந்து தானே
*****************************************************
நீச்சல் தெரியாது இருவருக்கும்
என்ற உணர்வு
படகுப் பயணத்தின் மகிழ்ச்சியில்
பொத்தலிட்டுக் கொண்டிருந்தது.
துடுப்புகளின் ஓய்வற்ற துளாவலில்
தண்ணீரின் உறைந்த தகடுகள்
உடைந்து விழுந்தன.
வட்டமடிக்கிற ஏரியின்
குளிர்விளிம்பில்
அமிழ்ந்து நீர் அள்ளிய
விரல் மரத்துப் போனாலும்
அல்லிப்பூ
பறித்தெடுத்த பரவசத்தில்
பனியுடன் அப்பால்
நகர்ந்து விட்டிருந்தது
பயம்.
அனைவரும் பார்க்க
முத்தமிட்டுக் கொள்ளவும்
முடியலாம் இனிமேல்.
************************************
இத்தனை காலம்
சவரக் கத்தியைத்
தீட்டி மழித்தவன்.
பசிக்குப் பயந்து
மல்லிகைப்பூ விற்கையில்,
எனக்கு மட்டும் தெரிகிறது
கத்தித் துரு
ஒவ்வொரு பூவிலும்.
****************************************
முற்றிலும்
விரைத்துக் கிடந்தது பிணம்.
நெட்டுக் குத்திய
இறந்த பார்வையின் மேல்
மழை தெறித்துக் கொண்டிருக்கிறது.
வாகனச் சக்கரங்கள்
சேறு தெளித்து இரங்கல் செய்ய
ஈரச் சிதையில்
நீண்டு கொண்டிருந்தது கால்கள்.
நடைபாதையில்
நேற்றுப் போலவே பழம்
விற்றுக் கொண்டிருந்தார்கள்.
பேரம் பேசி நிற்கும்
சாதுரியக் கைகளில்
உருளும் ஆப்பிளில்
பக்கத்துச் சாவின்
அடையாளம் எதுவும் இல்லை.
ஏற்கனவே தொலத்திருந்தது
வாழ்வின் நிழல்கள்.
**************************************
ட போல் மடங்கி கம்பளிப் பூச்சி
மூன்றாம் படியில் ஏறக்கண்டு
புறப்பட்டக் காலை ஒன்றாய் சேர்த்து
உற்றுப்பார்த்தேன்

அழகே நகரும்
அற்புதம் வியந்து
செருப்பைப் போட்டேன்

இரண்டாம் படியில் ஏறியபொழுது
நசுங்கும்படியாய்
வசமாய் மிதித்து
நடந்தேன் வெளியே
ஒன்றாம் படியோ
நிகழ்ந்ததைக் கண்டு
திடுக்கிட்டிருக்க.
**********************************
அடிக்கடி பார்க்க முடிகிறது
யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து
***********************************
எனக்கு சங்கீதம் தெரியாது.
பூசினாற்போன்ற நல்ல வெளிச்சம்
நிரம்பிய அந்த வீட்டின்
மேஜையில் வயலின் இருந்தது
படுக்கை வசத்தில்.
எத்தனை பேருக்கு வயலினையும் வில்லையும்
தொடுகிற தூரத்தில் பார்க்க வாய்த்தது.
வயலினின் நிறமோ அற்புதம்.
இசை புழங்கிய வழவழப்பு
எல்லா இடத்திலும்.
தப்பித்தவறி வந்து
ஊர்ந்து கொண்டிருக்கிறது
வயலின் நரம்புகளில்
மேல்நோக்கி ஒரு சிற்றெறும்பு.
வாய் குவித்து ஊதத் தயக்கம்.
விரலால் அப்புறப்படுத்தவும்.
என் செயல்கள் உண்டாக்கக்கூடிய
இசைக் கேடுகளை விட
எறும்பு ஊர்வது ஒரு ராகத்தின்
மேல் தானே.
**************************************
இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்.

*************************************

1 comment:

  1. வரிகள் அனைத்தும் அருமை

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete