வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

அகிலன் கவிதை

கவிதைகள்

பிரியம் /02


வரைபடங்களிளில்லாத
உலகிற்கு அழைத்துப் போகும்
உனது காலடிகளோடு
வருவதற்குத்
திராணியற்றுத் தொய்கிறது
உடல்.
காலடிகளைத் தவறவிடாத
தனிப் படபடப்புடன்
பின் தொடர்கிறது மனம்.
கடல்
ஒரு விரோதியைப் போல்
உனது காலடிகளைத் திருடிக்கொண்டிருக்கிறது
எனக்கு முன்பே.

துப்பாக்கிகளும் சில தேவதைக்கதைகளும்/01

துப்பாக்கியின் கண்கள்
வாசிக்கத் தொடங்கிய பிறகு
சொற்கள்
ஒளிக்கத் தொடங்கிவிட்டன/சபிக்கப்பட்டு விட்டன
பீரங்கியின் வாய்களால்
அச்சமூட்டப்பட்ட
சொற்கள் கொண்டு
செய்யப்படுகிறது
ஒரு நாள்….
முடமான சொற்கள் கொண்டு
கவிதைகள்
செய்வது எங்ஙனம்?
கால்களற்ற சொற்களைக்
காணச் சகியாதொருவன்
துப்பாக்கிகளறியாதொருகணத்தில்
மொழியைப் புணர்ந்து
புதிதாய்
கால்முளைத்த சொற்களைப்
பிரசவிக்கலானான்…
பின்
ஓர் இரவில்…
துப்பாக்கியின் கண்கள்
அவன் முதுகினில்
நிழலெனப் படிந்து
அவன் குரலுருவிப்
பின்
ஒரு பறவையைப்போல
விரைந்து மறைந்ததாய்..
அவன் குழந்தைகள் சொல்லின.

No comments:

Post a Comment