ஒரு விளக்கம்
28.9.2007 தேதியிட்ட "முரசொலி'யில், கலைஞர் இவ்வாறு ஒரு குறிப்பு
எழுதியிருக்கிறார்.
"மது' என்றால் கள்ளோ சாராயமோ அல்ல "தேன்' என்று பொருள்படும் என்கிறார் நண்பர் "சோ'. அப்படியானால், "மதுவிலக்கு சட்டம் என்பதற்கு "தேன்' விலக்கு சட்டம் என்று பொருளா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.
சீதையைப் பிரிந்த வேதனையில் இராமன் "தேன்' அருந்துவதை நிறுத்தி விட்டான் என்று "வால்மீகி' எழுதியிருப்பதாக இவர்கள் சொல்கிறார்களா?
ஸம்ஸ்க்ருதத்தில் "மது' என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. (தமிழிலும்தான்) "மது உண்ணும் வண்டு' என்கிறோமே, அதுதான் ஸம்ஸ்க்ருத மது; அதாவது மலர்களிலிருந்து பெறப்படுவது; தேன். இதைத் தவிர மதுவிற்கு பால் என்றும் அர்த்தம் உண்டு; சுவையுள்ள, தித்திப்பு ருசியுள்ள பழ ரஸங்களும் "மது' என்று குறிப்பிடப்படுகின்றன. "மது பானம்' என்பதற்கு ஸம்ஸ்க்ருத அகராதி "சுவையுள்ள பழ ரஸங்கள்' என்று பொருள் கூறுகிறது. (இது சென்ற இதழ் தலையங்கத்திலேயே விளக்கப்பட்டிருக்கிறது).
ஸீதையைப் பிரிந்ததிலிருந்து ராமர் மதுவையும் விலக்கிவிட்டார் என்றால், தேனை விலக்கினார் என்றோ, பாலை விலக்கினார் என்றோ, சுவையுள்ள பழரஸங்களை விலக்கினார் என்றோதான் அர்த்தம்; அல்லது இவை எல்லாமே மது என்பதால், இவை எல்லாவற்றையும் விலக்கிவிட்டார் என்றும் பொருள் கொள்ள முடியும்.
"மது விலக்கு சட்டம்' என்பது ஸம்ஸ்க்ருதம் அல்ல. ஆகையால் அதற்கு "தேன் விலக்கு சட்டம்' என்பது பொருளுமல்ல.
இந்த மாதிரி "தேன் விலக்கு' என்று முதல்வர் கூறுவது, பா.ம.க.விற்கு "கீ' கொடுப்பது போல ஆகிவிடும். "நாட்டில் தேன் சாப்பிட்டு நிறைய பேர் சர்க்கரை வியாதியை கடுமையாக்கிக் கொள்கிறார்கள். அதனால் "தேன் விலக்கு சட்டம்' வர வேண்டும் என்று டாக்டர் அன்புமணி கூறி, டாக்டர் ராமதாஸ் அதை ஒரு போராட்டமாக மாற்ற முனைந்துவிட்டால்...? எதற்காக கலைஞருக்கு இந்த அநாவசிய வம்பு? இவர் தமிழ்ச் சொல்லிற்கு, ஸம்ஸ்க்ருத அர்த்தம் கொடுக்கப் போக, ராமதாஸ் கூட்டணிக்குப் புதிய அர்த்தம் கொடுக்க ஆரம்பித்துவிடுவார். தேவைதானா?
கலைஞர் கூறியுள்ளபடி, என்னுடைய கருத்தை விளக்கமாகவே கூறிவிட்டேன்.
No comments:
Post a Comment