கவிதைகள்
மனிதனைத் தின்னும் பல்லிகள்
எந்தப் பூனையும்
என் ஜன்னலில் நின்று
அவசரமாய்க்
குதித்திறங்குவதில்லை
ஆளரவத்திற்கு
சூரியன்
ஒரு பொறாமை கொண்ட
அயல் வீட்டுக்காரனைப்போல்
எட்டிப்பார்க்கிறது
ஜன்னல் வழி
உடனும்
அவசரமாய் வெளியேறி விடுகிறது
குப்பையைப்போல்
தன் தகிப்பை
உள்ளே வீசி எறிந்துவிட்டு
பல்லிகள்
பெருகிவிட்ட இவ்வறையில்
மனிதனைத் தின்னும்
பல்லிகள் குறித்த
கனவின் பீதி நிறைய
பாதியில் திடுக்குற்று
விழிக்கிறேன்..
பல்லிகள்
விழித்திருக்கின்றன
என் தூக்கத்தைக்
காத்துக்கொண்டு.
புன்னகையின் ஒளியரும்புகள்..
உன்
புன்னகையின்
ஒளியரும்புகள்
மறையத் தொடங்கிவிட்டன
பின்னலின்
உட்குழிவுகளில்
உதிர்ந்து தேங்கிவிட்ட
ஒற்றையிதழைப் போல்
சிக்கிக் கொண்டிருக்கிறது
என் பிரியம்
நான்
வேண்டிக்கொள்கிறேன்
பின்னலைத் தளர்த்துகையில்
எப்போதும் போல
அவற்றைப் பத்திரப்படுத்தாதே.
அது இப்போது
அன்பின் வாசனையையும்
உயிரையும்
இழந்துவிட்டது
என்பதனை அறி.
No comments:
Post a Comment