சுப்ரீம் கோர்ட் செய்த நல்ல காரியம் ! துக்ளக் தலையங்கம்
சுப்ரீம் கோர்ட் மீண்டும் ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறது. தமிழக அரசு (ஆளும் கட்சி?) நடத்தப் போவதாக, அறிவித்திருந்த "பந்த்', சுப்ரீம் கோர்ட் உத்திரவின் காரணமாகத் தடைப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. தொடுத்துள்ள வழக்கின் இறுதி முடிவைப் பொறுத்து, இந்த "பந்தாளர்கள்' மீண்டும் ஏதாவது வறட்டுத் தனத்தில் இறங்குவார்களோ, என்னவோ! சுப்ரீம் கோர்ட் தடை உண்டாக்கியிருக்கிற ஆத்திரத்தைத் தணித்துக்கொள்ள, தி.மு.க.கூட்டணியினர் உண்ணாவிரதம் என்கிற பெயரில், நன்றாக "காலை டிஃபன்' உண்டு, பின்னர் சில மணி நேரம், வயிற்றுக்கு ரெஸ்ட் கொடுக்க எடுத்துள்ள முடிவு, ஒரு நல்ல தமாஷ்!
சுப்ரீம் கோர்ட்டின் இடைக்காலத் தடை வியப்புக்குரியது அல்ல; ஏனென்றால், பொதுவாகவே "பந்த்'கள் நடப்பதைப் பற்றியும், ஆளும் கட்சிகளோ, அரசுகளோ இப்படி பந்த்கள் நடத்துவது பற்றியும், நீதிமன்றங்கள் ஏற்கெனவே கடும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றன.
இப்போதோ, எந்தக் கட்சியும் "சேது ஸமுத்திரத் திட்டம் வேண்டாம்' என்று கூறவில்லை; ராமர் பாலத்தை இடித்து, இத்திட்டத்தை நிறைவேற்றாமல், மாற்று வழிகளில் ஒன்றை பயன்படுத்தி, இது முடிக்கப்பட வேண்டும் – என்றுதான் பா.ஜ.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் கூறுகின்றன. ஆக, திட்டமே எதிர்க்கப்படுகிறது
– என்பது உண்மை அல்ல. மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டில், "ராமர் பாலத்தை இடிக்காமல், மாற்று வழிகளில் ஒன்றின் மூலமாக இத்திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி ஆராய்கிறோம்' என்று வாக்குறுதி அளித்து, அதற்காக மூன்று மாத கால அவகாசத்தையும் பெற்றிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டும், "ராமர் பாலம்' இடிக்கப்படுவதற்குத்தான் தடை விதித்திருக்கிறதே தவிர, திட்டத்தின் பணிகள் நடப்பதற்கு எந்தத் தடையையும் பிறப்பிக்கவில்லை. ஆக, ஸேது ஸமுத்திரத் திட்டத்திற்கு எதிர்ப்பு இல்லாத போதே, அதற்கு எதிர்ப்பு இருப்பது போல ஒரு பாவனை செய்து கொண்டு, அரசு பந்த் நடத்த முனைந்தது. அதாவது, தேவையே இல்லாமல், காரணமே இல்லாமல், ஒரு அரசியல் ஸ்டண்ட் அடிப்பதற்காக, மக்களை ஹிம்ஸிக்க அரசும், ஆளும் கட்சியும் முடிவு செய்திருந்தன.
மத்திய அரசில் பதவிகளை வகித்துக்கொண்டே, மத்திய அரசை வற்புறுத்த ஒரு பந்த்! இத்தனைக்கும், "இந்த மத்திய அரசு, கலைஞரின் வழிகாட்டுதல்படி நடக்கிற அரசு'
– என்கிற பிரகடனம் வேறு செய்கிறார்கள். அப்படிப்பட்ட மத்திய அரசு, இந்த விஷயத்தில் தன் பேச்சைக் கேட்டு, உடனடியாக ராமர் பாலத்தை இடிக்காததால், கலைஞருக்கு வருகிற கோபத்தை, மத்திய அரசின் மீது காட்ட முடியவில்லை; மற்ற கட்சிகளின் மீது காட்டினாலும் அவர்கள் பதிலுக்கு பதில் பேசுகிறார்கள்; பார்த்தார் கலைஞர். தனது கோபத்தை மக்கள் மீது காட்டத் தீர்மானித்தார். "ராமர் பாலத்தை இடித்து சேது பாலத் திட்டம்' என்ற பெயரில், தாங்கள் விரித்த கடைக்குக் கொள்வாரில்லை – என்ற நிலை தோன்றி விடுமோ என்ற கவலையில், எல்லா கடைகளையும் ஒருநாள் அடைத்து திருப்தி காண நினைத்தது தி.மு.க.. அதுதான் இந்த கடை அடைப்பு முயற்சி.
இப்போதோ, இந்த தடை உத்திரவு வந்து விட்டது; அதுவும் அ.தி.மு.க. போட்ட வழக்கில்! இதனால் முதல்வருக்கு வரக்கூடிய ஆத்திரம் பெரிதாக இருக்கும். அதை யார் மீது காட்டப் போகிறாரோ, என்ன நடக்கப் போகிறதோ! அட, ராமா!
வேதமேதை புதுவிளக்கம் ராமரே தன்னை கடவுள் என்றதில்லை..! - ஜூவி கட்டுரை
சேது சமுத்திரத் திட்டம் பற்றிய விவாதங்கள் இன்று இந்தியா முழுதும் பற்றியெறிந்து கொண்டிருக்கும் நிலையில், வேதமேதை அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரிடம், ராமர் பாலம் பற்றிய சர்ச்சைகளுக்கு விளக்கம் கேட்டோம்.
101 வயதைத் தொட்ட நிலையிலும் நிமிர்ந்து உட்கார்ந்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் தாத்தாச்சாரியார்-
‘‘ராமர் பாலம் விஷயத்தை ஒரு பிரச்னையாக ஆக்கியது, நமது அரசியல்வாதிகள்தான். உண்மையில் ராமர் பாலம் என்ற பதமே தவறு. அதனை ‘ராமர் அணை’ என்று வேண்டுமானால் கூறலாம். ஏனென்றால், அந்த மணல் திட்டுகள் பால வடிவில் இல்லை. அதை வேத மந்திரங்களை சொல்லி கட்டியிருந்தால் அதற்கு ‘லோகாகிதம்’ உண்டு. அதாவது அழியாத்தன்மை உண்டு. ஆனால், ராமாயண காலத்துக்குப் பிறகு ராமர் அணை பற்றிய பிரஸ்தாபம் எதுவும் இல்லை. ராமாயணம் த்ரேதா யுகத்தில் நடந்த கதை. நாம் இப்போது கலியுகத்தில் இருக்கிறோம். இடையே பல்லாயிரம் ஆண்டுகள் ஓடிப்போய்விட்டன. அது உண்மையான பாலமாக இருந்திருந்தால், ராமாயண காலத்துக்குப் பிறகு மக்கள் அதைப் பயன்படுத்தியிருக்க வேண் டுமே... எனவே, இப்போது ‘பாலம்... பாலம்...’ என்று பிதற்றுவதில் அர்த்தமில்லை.
ராமர் அணை என்று சொன்னேன் அல்லவா? இப்போது பலரும் அதை சேது என்கிறார்கள். சேது என்றால் என்ன? சாம வேதத்தில் ‘சேது முஸ்த்ர துஸ்தாராம்... தானேத அதானாம் குரோதேன அக் ரோதம் சத்யேன அந்ருதம்...’ என ஒரு சொற்றொடர் வருகிறது. அதாவது, ‘துன்பங்களை நீ கடந்து செல்ல வேண்டுமானால் தானத்தைப் பெருக்கு. கோபத்தை ஒழி. உண்மையைப் பேசு’ இங்கே சேது என்ற பதத்துக்கு கடந்து செல்லுதல் என பொருள்.
இந்த வகையில் ராமர் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்ற நிகழ்வுதான்
சேது. இது ஒரு வினைச்சொல்... பெயர்ச்சொல் அல்ல. அவ்வாறு கடப்பதற்காகக் கடல் பரப்பின் இடையே மணல் மற்றும் கற்களைப் போட்டு அணை போன்ற தடுப்புகளை ஏற்படுத்தி, அதில் ஒவ்வொரு தடுப்பாக வானர சேனை தாண்டித் தாண்டி இலங்கைக்குச் சென்றதாக வால்மீகி ராமாயணத்தில் சொல்லியிருப்பதைத்தான் ‘சேதுபாலம்’ என கட்டி எழுப்பிவிட்டார்கள் சிலர்.
ராமர் தெய்வமா இல்லையா என்ற கேள்வியும் இப்போது சூடாக எழுந்துள்ளது.
இதற்கு நாம் ஏன் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டும்? ராமரே சொல்லிவிட்டார். ராவண வதம் முடிந்த பிறகு தேவர்கள் எல்லாம் ராமரை ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள். அப்போது அவர்களிடம் ராமர் சொல்கிறார். ‘ஆத்மானாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்...’ அதாவது ‘நான் தெய்வமெல்லாம் கிடையாது. நான் தசரதன் என்னும் அப்பாவுக்குப் பிறந்த மனிதன்தான். என்னைப் போற்றாதீர்கள்’ என ராமர் தன் வாயால் சொல்வதாக வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது.
இன்னும் கொஞ்சம் உள்ளேபோய்ப் பார்த்தால்... ராமர் இன்னொரு நாட்டுக்குப் போவதற்காகத்தான் அந்தத் திட்டுகளைக் கட்டினார் அல்லவா? அப்படியென்றால், இப்போது நமது கப்பல்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருவதற்காகத்தானே அவற்றை அப்புறப்படுத்த வேண்டியிருக்கிறது? இந்த நோக்கமும் ராமரின் நோக்கமும் ஒன்றுதான். ராமர் அக்கரை போவதற்குதானே கட்டினார். வணங்குவதற்காகவா கட்டினார்?
இன்னொரு செய்தி... போர் முடிந்து ராமர் திரும்பு கையில், அவர் கட்டிய அணையைப் பயன்படுத்தவில்லை. அவற்றை அழித்துவிட்டதாகவும் வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. தனது தனுசுவால் (வில்லால்) ராமர் அழித்த அணைப்பகுதிதான் தனுஷ்கோடி என அழைக்கப்படுவதாகவும் குறிப்பு உண்டு. திரும்பும்போது விபீஷணனுடன் புஷ்பக விமானத்தில் திரும்பினாராம். ஒருவேளை, ராமர் இலங்கை போவதற்கு ஏதாவது விமானம் கிடைத்திருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காது. எனவே ராமரே அழிக்க முடிவு பண்ணியதை நாம் வீண் நம்பிக்கையால் போற்றி நமது தேசத்தின் பொருளாதாரத்தை அழிக்கவேண்டுமா?’’ என்று தெளிவாக விளக்கங்களை அடுக்கினார் தாத்தாச் சாரியார்
வால்மீகி ராமாயணம் கூறுவது என்ன ? – சோ
"ஜூனியர் விகடன்' பத்திரிகை 30.9.2007 தேதியிட்ட இதழில், ராமாயணம் பற்றி அக்னிஹோத்ரம் ஸ்ரீராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் கூறியுள்ள, சில கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
ஸ்ரீ தாத்தாச்சாரியார், வயதில் மட்டுமல்ல, அறிவிலும் மிகப் பெரியவர்; ஸம்ஸ்க்ருத புலமை மிகுந்தவர்; வேதங்களை அறிந்தவர்; ஹிந்து மத சித்தாந்தங்களை நன்கு கற்றவர். இந்தத் தகுதிகள் எதுவுமில்லாத நான், அவருடன் மாறுபடுகிற கருத்துக்களைச் சொல்வது என்பது – நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாததாகவும் இருக்கிறது. அவர் கூறியுள்ளவையும், அவற்றுக்கு என் மறுப்பும் இங்கே இடம்பெற்றுள்ளன.
ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...போர் முடிந்து ராமர் திரும்புகையில், அவர் கட்டிய அணையைப் பயன்படுத்தவில்லை. அவற்றை அழித்து விட்டதாகவும், வால்மீகி ராமாயணத்தில் வருகிறது...
மறுப்பு : வால்மீகி ராமாயணத்தில் எந்த ஒரு இடத்திலும், ராமர் தான் கட்டிய அணையை தானே அழித்துவிட்டதாகக் கூறப்படவில்லை. மாறாக,
இலங்கையிலிருந்து விபீஷணன் அளித்த புஷ்பக விமானத்தில் திரும்புகையில், வானில் பறந்தவாறே, பூமியில் தாங்கள் வசித்த பஞ்சவடி, பரத்வாஜரை சந்தித்த இடம்... போன்ற பலவற்றை ராமர் ஸீதைக்குச் சுட்டிக்காட்டுகிறார். அப்போது, தான் (வானரர்கள் உதவியுடன்) கட்டிய அணையைச் சுட்டிக்காட்டி, "அதோ! அதுதான் நான் கட்டிய அணை! உனக்காக, ஸமுத்திரத்தின் மீது நான் நிர்மாணித்தது இது' – என்று கூறுகிறார்.
அதாவது, ராமர் அயோத்தி திரும்பிய போதும், அந்த அணை அப்படியேதான்
இருந்தது. அவராலோ, வேறு யாராலோ அழிக்கப்படவில்லை.
அதுமட்டுமல்ல. "இந்த மாபெரும் கடலின் கரையில்தான், அணை கட்டுவதற்கு முன் மஹாதேவன் எனக்கு அருள்புரிந்தான். இது "ஸேதுபந்தம்' என்று பெயர் பெற்று,
மூவுலகிலும் வணங்கப்படும். இந்த இடம் புனிதமானதாகவும், பாவங்களை அழிக்க வல்லதாகவும் கருதப்படும்' – என்று ராமர், ஸீதையிடம் சொன்னார்.
ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ..."ராமர் பாலம்' என்று சொல்வதே தவறு. "ராமர் அணை' என்று வேண்டுமானால் சொல்லலாம்... "சேது' என்ற சொல்லுக்கு "கடந்து செல்வது' என்று பொருள். ராமர் கடலைக் கடந்து சென்ற நிகழ்வுக்குப் பெயர்தான் சேது. இது ஒரு வினைச்சொல். பெயர்ச்சொல் அல்ல...
மறுப்பு : ஸம்ஸ்க்ருத அகராதிகளில் "ஸேது' ஒரு பெயர்ச்சொல்லாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது; அவ்வாறே அதற்குப் பொருளும் கூறப்பட்டிருக்கிறது.
"ஸேது' என்பதற்கு "அணை' என்ற பொருள்; மற்றும் "பாலம்' என்கிற பொருள்; மேலும் சில அர்த்தங்கள் – அகராதிகளில் கூறப்பட்டுள்ளன. ஆனால் "கடப்பது' என்ற அர்த்தம் கூறப்படவில்லை.
தவிர, வால்மீகி ராமாயணத்தில் "ஸேது:' (ஸேதுஹு என்று படிக்க வேண்டும்) என்று வருகிறது. வினைச்சொல் "ஸேது:' என்று வராது. ஆகையால் "ஸேது' ஒரு பெயர்ச்சொல்லே. (ஸாம வேதத்தில், அது எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை சரிபார்த்துக் கூற என்னால் முடியவில்லை.)
ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...மணல் மற்றும் கற்களைப் போட்டு, அணை போன்ற தடுப்புகளை ஏற்படுத்தி, அதில் ஒவ்வொரு தரப்பாக வானர சேனை தாண்டித் தாண்டி இலங்கைக்குச் சென்றதாக, வால்மீகி ராமாயணத்தில் சொல்லியிருப்பதைத்தான்
"சேது பாலம்' என கதைகட்டி எழுப்பிவிட்டார்கள் சிலர்....
மறுப்பு : வால்மீகி ராமாயணத்தில் "தடுப்புகள்' ஏற்படுத்தப்பட்டன என்றோ, அவற்றை வானர சேனை தாண்டித் தாண்டி சென்றன என்றோ கூறப்படவில்லை.
அணை – பாலம் கட்டப்பட்டதையும், கடலை, வானர சேனை கடந்ததையும் வால்மீகி ராமாயணம் இவ்வாறு வர்ணிக்கிறது :
"பல்லாயிரக்கணக்கான வானரர்கள், பாறைகளைப் பெயர்த்து, மரங்களைப் பிடுங்கி, கடற்கரைக்கு கொண்டு வந்தனர். (மரங்களின் பெயர்களும் தரப்பட்டிருக்கின்றன). பெரிய பாறைகள் கொண்டு வரப்பட்டன... பாறைகளை சமுத்திரத்தில் போட்டு, (அவை நேராக இருக்க) கயிறுகள் பயன்படுத்தப்பட்டன... (ஒவ்வொரு தினமும் எவ்வளவு தூரம் பாலம் கட்டப்பட்டது என்பது விளக்கப்படுகிறது)... இவ்வாறு, வானத்தில் தெரிகின்ற நக்ஷத்திர மண்டலம் போல், அந்த சமுத்திரத்தின் நடுவே
காட்சியளித்த, அந்த உன்னதமான பாலத்தை (அணையை), நளன் கட்டினான். வானத்திலிருந்து சித்தர்களும், ரிஷிகளும் இந்த அதிசயத்தைப் பார்வையிட்டனர். பத்து யோஜனை அகலமும், நூறு யோஜனை நீளமும் உடைய அந்தப் பாலத்தைக் கண்டு தேவர்களும், கந்தர்வர்களும் பிரமித்தனர். நன்கு கட்டப்பட்ட, மிகச் சிறப்பான, ஸ்திரமான அந்த அணை, வகிடு எடுக்கப்பட்ட ஒரு பெண்மணியின் கேசம் போல காட்சியளித்தது...!
இவ்வாறு, வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிற அணையை, அல்லது பாலத்தை
– "மண்ணையும் கல்லையும் போட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது' என்று கூறுவது வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பானது.
வால்மீகி ராமாயணத்தில் மேலும் "...ஸுக்ரீவனுடன், ராமர் வானர ஸேனைக்கு தலைமை வகித்து முன் சென்றார் (ஹனுமார் அவரைத் தாங்கிச் செல்ல வேண்டுமென்று ஸுக்ரீவன் கேட்டுக் கொண்டான்) சில வானரர்கள், பாலத்தின் நடுவில் நடந்தனர்;
சிலர் பாலத்தின் இருபுறங்களில் நடந்தனர்; சிலர் தண்ணீரிலியே கூட நீந்தினர்... கடலின் மறு கரையிலிருந்து, நளன் கட்டிய பாலத்தின் மூலம் இலங்கையை அடைந்த வானர ஸேனைகள் அங்கே முகாமிட ஸுக்ரீவன் ஆணையிட்டான்...'
இவ்வாறு வால்மீகி கூறியுள்ளபோது, ஏதோ மணல் "திட்டுகளை தாண்டித் தாண்டி' மறு கரை அடையப்பட்டது என்று சொல்வதும், வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பானதே.
ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...ராமர் தெய்வமா இல்லையா என்ற கேள்வியும் இப்போது சூடாக எழுந்துள்ளது. ராமரே சொல்லிவிட்டார். ராவண வதம் முடிந்த பிறகு தேவர்கள் எல்லாம் ராமரை ஸ்தோத்திரம் பண்ணுகிறார்கள். அப்போது அவர்களிடம் ராமர் சொல்கிறார் : "ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசராத்மஜம்' – அதாவது "நான் தெய்வமெல்லாம் கிடையாது. நான் தசரதன் என்னும் அப்பாவுக்குப் பிறந்த மனிதன்தான். என்னைப் போற்றாதீர்கள்' என ராமர் தன் உரையில் சொல்வதாக, வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது....
மறுப்பு : இந்த மேற்கோள் அரைகுறையாகவும், தவறாகவும் இருக்கிறது. ஸீதை அக்னி பிரவேசம் செய்கிறபோது, தேவர்கள் ராமர் முன்தோன்றி, "தெய்வங்களில் முதன்மை படைத்தவன் நீ, என்பதை நீ உணராமற் போவது எப்படி? படைப்பின் தொடக்கத்திலும், இடையிலும், முடிவிலும், இருக்கிறவனல்லவா நீ? மனிதன் போல நடந்துகொண்டு ஸீதையை அலட்சியம் செய்கிறாயே?' என்று கேட்கின்றனர்.
அதற்கு ராமர் கூறுகிற பதிலில் பாதியை மேற்கோள் காட்டி, அர்த்தம் கூறுகையில், கொஞ்சம் தானாக சேர்த்துக் கூறியிருக்கிறார் பெரியவர். அந்த ஸ்லோகம் இவ்வாறு அமைந்திருக்கிறது:
ஆத்மானம் மானுஷம் மன்யே
ராமம் தசரதாத்மஜம்/
ஸோஹம் யஸ்ச யாதஸ்ச
பகவாம்ஸ்தத் ப்ரவீதுமே//
இதன் பொருள் : தசரதனின் மகன், ராமன் என்கிற மனிதன், என்றே என்னை நான் கருதுகிறேன். மேன்மை வாய்ந்த பகவான் (பிரம்மதேவன்) நான் யார், எங்கிருந்து
வந்தவன் என்பதைக் கூறுவாராக'...
அதாவது, "என்னைப் போற்றாதீர்கள்' என்றும் ராமர் கூறவில்லை; "நான் தெய்வமெல்லாம் கிடையாது' என்றும் கூறவில்லை. "நான் யார் என்பதை பிரம்மதேவன் விளக்குவாராக' – என்றுதான் சொல்கிறார். அப்போது பிரம்மதேவன், பலவித போற்றுதல்களைக் கூறுகிறார். "நீயே நாராயணன். நீயே கார்த்திகேயன். அறிவு, பலம், பொறுமை, அனைத்தும் நீயே. எல்லாவற்றின் தொடக்கமும் நீயே. முடிவும் நீயே. நீயே விஷ்ணு. நீ, மஹாவிஷ்ணு; ஸீதை, மஹா லக்ஷ்மி...' பிரம்மதேவன் கூறுகிற துதி நீண்டது; அது புகழ்பெற்ற துதி.
இவ்வாறு பிரம்மதேவன் கூறுவதை ராமர் மறுத்து, "என்னைப் போற்றாதீர்கள்' என்று கூறவில்லை. அப்படிச் சொல்வது வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பானது. இந்த துதிக்குப் பின்னால்தான், ஸீதையை ஏந்தி அக்னிதேவன் தோன்றினான்.
இதைத் தவிர, விஷ்ணுவே, ராமராக அவதரித்தார் என்பதும், வால்மீகி ராமாயணத்திலேயே மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க ராமர் தெய்வமல்ல என்பது, வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பான கருத்து.
ராமாவதாரம், மனித அவதாரம். மனிதனாகவே வாழ்ந்து, தனது அவதார காலத்தை முடிப்பதே விஷ்ணுவின் நோக்கம். அதனால்தான், ராமர் "நானே தெய்வம்' என்று கூறிக்கொள்ளவில்லை.
ஒரு அரசியல் கட்சியின் தலைவர், "நான் ஒரு சாதாரண தொண்டன்' என்று சொல்லிக் கொண்டாலும், அவரை தொண்டனாக நடத்தாமல், தலைவனாகவே நடத்துகிற "பண்பு' உள்ள தேசத்தில் – "ராமர் தன்னை தெய்வம் என்று சொல்லிக் கொள்ளவில்லையே?' என்ற கேள்வி, அநாவசியமானது.
ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...ராமர் அக்கரை போவதற்காகத்தானே கட்டினார்.
வணங்குவதற்காகவா கட்டினார்?....
மறுப்பு : இப்படி எல்லா நம்பிக்கைகளைப் பற்றியும் கேள்வி கேட்கலாம். அது ஒன்றும் பெரிய காரியமல்ல. "சாவதற்காகத்தானே ஏசுவை சிலுவையில்
அரைந்தார்கள். சிலுவையைக் கும்பிடுவதற்காகவா?' என்று கேட்கலாம். ஏசு பிரானின் தெய்வீகத் தன்மையை ஏற்காதவர்கள், இப்படிப் பேசலாம்.
"நபிகள் தலையில் முடி வைத்துக் கொண்டது, வழக்கப்படியானதுதானே?
வணங்குவதற்காகவா முடி வைத்துக் கொண்டார்?' என்றும் கேட்கலாம்
– இறைத்தூதரான நபிகள் நாயகம் பற்றி அலட்சியமாகப் பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்!
ராமர் கடலைக் கடப்பதற்கு சமுத்திரத்தில் பாலம் அமைத்த அரிய சாதனையை, தேவர்களே புகழ்ந்ததாக வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது. அந்த உணர்வை வணங்குவதற்கு மேல், பக்தியுடையவர்கள் செய்யக் கூடியது என்ன?
ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...(ஸ்ரீராமர்) திரும்புகிறபோது, விபீஷணனுடன் புஷ்பக விமானத்தில் திரும்பினாராம். ஒருவேளை ராமர் இலங்கைக்குப் போவதற்கும், ஏதாவது விமானம் இருந்திருந்தால், இந்தப் பிரச்சனையே வந்திருக்காது....
மறுப்பு : ஏன்? ராவணன் ஸீதையை அபகரித்துச் செல்லாமல் இருந்திருந்தாலும்,
இந்தப் பாலம் பற்றிய பிரச்சனையே வந்திருக்காதே? அதைக் குறிப்பிட்டால், ராவணனின் தீய குணத்தை நியாயப்படுத்துவது போல இருக்கும் என்று அதுவிடப்பட்டு, அதற்குப் பதிலாக "ராமருக்கு இலங்கை செல்ல விமானம்
இருந்திருந்தால்...' என்பது மட்டும் குறிப்பிடப்படுகிறதா?
"ராமரே அழிக்க முடிவு பண்ணியதை, நாம் வீண் நம்பிக்கையில் போற்றி...' என்றும் அக்னிஹோத்ரம் தாத்தாச்சார்யர், தனது கருத்துக்களின் முடிவாகக் கூறியிருக்கிறார்.
நாமும் முடிவாகச் சொல்கிறோம் – ராமர், ஸேதுவை – அணையை – பாலத்தை
– அழிக்க நினைக்கவும் இல்லை, முடிவுசெய்யவும் இல்லை, முனையவும் இல்லை. அதற்கு மாறாக ஸீதையிடம் அந்த பாலத்தைக் காட்டி, அதன்மூலம் ஸமுத்திரத்தைக் கடந்ததையும் கூறி மகிழ்கிறார். அந்த இடத்தில் சமுத்திரக் கரையையும் கூட, புனிதமானது என்றும், பாவங்களை அழிக்க வல்லதாகவும் திகழும் என்றும் ராமர் கூறுகிறார். இது வால்மீகி ராமாயணத்திலேயே கூறப்பட்டிருப்பது.
ஆக, ராமர் பற்றி ஸ்ரீ தாத்தாச்சார்யர் கூறியுள்ளவை, வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பான கருத்துக்களே ஒழிய, அதை ஒட்டிய கருத்துக்கள் அல்ல.
ஆத்மானாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்...’ அதாவது ‘நான் தெய்வமெல்லாம் கிடையாது. நான் தசரதன் என்னும் அப்பாவுக்குப் பிறந்த மனிதன்தான்.
ReplyDelete---------------------------
ஒரு மாஹா பெரியவர் நான் பெரியவன் இல்லை நான் அனைவரை விடவும் சிறுவன் என்று கூறினால் அவரின் தன்னதாக்கத்தை காட்டுகிறது . நான் பெரியவர் என்னை வழிபடுங்கள் என்று கூறினால் ஆணவத்தை காட்டுகிறது
‘
மேலிருக்கும் வரிகள்
ஸ்ரீ ராமரின் தன்னடக்க குணத்தை காட்டுகிறது . ஆத்மானாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்
இதில் எங்கேயா இருக்கிறது என்னை போற்றாதீர்கள் என்று !!!
போற்றாதீர்கள் என்றெல்லாம் சொல்லவில்லை . புரிகிறதா ராமா ராமா என்று சொல்லினாலே ஆஞ்சநேயர் கூத்தாடுவார் . இதற்கு மேலா உங்களுக்கு ராமர் சாதாரண மனிதர்தான் திருமாலின் ஒரு அவதாரம் என்று தெரியவில்லை .
ஓகே !!!!!!!!
நன்றி
ஊனில் மேய ஆவி நீ; உறக்கமோடு உணர்ச்சி நீ;
ReplyDeleteஆனில் மேய ஐந்தும் நீ; அவற்றுள் நின்ர தூய்மை நீ;
வானினோடு மண்ணும் நீ; வளங் கடற் பயனும் நீ;
யானும் நீ; அது அன்றி எம்பிரானும் நீ; இராமனே!