வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

த.அகிலன் in கவிதைகள்

கவிதைகள்

பிரியம்/03

• நிலவின்

ரகசிய முகமும்
ராட்சச முகமும்
கடந்து
ஒளியின் ஓராயிரம்
மின்னல்களின் மடியில்
தவழ்ந்து கெண்டிருக்கிறது
எனது தேவதையின்
முதல் புன்னகையின் தரிசனம்.
• மீண்டும் முளைக்காத
முளைக்கவும் முடியாத
வண்ணத்துப் பூச்சிகள்
மின்னலென மறைந்த கணத்தின்
நினைவுகள்
எனைக் கிளர்த்திக் கிளர்த்தி
போதையூட்டுகின்றன.
• நான்
நுழைந்து கொண்ட பின்பு
தாமாகப் பூட்டிக்கொண்டு
எங்கோ ஒளிந்துகொண்டு விட்டன
சொற்களாளான இவ்வறையின் கதவுகள்.
• ஒரு
பனித்துளியிடம்
புகுந்துகொண்ட
என் உலகம்
தன்
சூரியனைத் தொலைத்துவிட்டுச்
சுற்றிக்கொண்டிருக்கிறது
வெறும் இருள் குகையாய்.

பழகிய நிலவும் பழைய கிழவியும்

அவளது
ஊரின் புழுதிச் சாலையையும்
பழகிய நிலவையும்
பிரியமுடியாக் கிழவியின்
புலம்பலினை ஆற்றமுடியா
அலையின் வார்த்தைகள்
மண்டியிட்டு வீழ்கின்றன.
அவள் காலடியில்.
இந்தக் கடலுக்கு
அப்பால்தான்
நம் ஊரிருக்கிறதா?
மறுபடி மறுபடி
கேட்டுக்கொண்டிருக்கின்றன
குழந்தைகள்.
தன்
முதுமைச் சுருக்கங்களில்
படியும் மெல்லிய
பிரகாசத்துடன்
தலையசைத்த படியிருக்கிறாள்
கிழவி… ஆமென்று.
இந்த நிலவா?
அங்கேயுமிருந்தது?
மறுபடியும் கிழவியின்
நினைவுகளைக் கலைத்த
குழந்தைகள் கேட்டன.
ம் அதேதான்.
வழியவிட்ட பெருமூச்சிற்கிடையில்
இதேதான் அங்கேயுமிருந்ததாய்
கிழவி சொன்னாள்.
அப்ப…..!
நிலவும் அகதியாய்
எம்முடன் வந்ததா?
விடைதரமுடியாக்
கேள்வியைத் தூக்கிக் கொண்டு
குழந்தைகள் ஓடின….

No comments:

Post a Comment