அச்சத்தில் இருப்பவர்களில் தொடங்கி உலை கொதிக்கும் நேரத்தில் அரிசிக்கு வழி தேடுபவர்கள்வரை பலதரப்பினருக்கும் ஏதோ ஒரு மனச்சோர்வு ஏற்படத்தான் செய்கிறது. தனிமை – தோல்வி பற்றிய அச்சம் – தோற்ற வலியின் மிச்சம் – இழப்புகள் – ஏமாற்றம்… என்று எத்தனையோ புறக்காரணங்களைப் பட்டியலிடலாம்.

ஆனால், மனச்சோர்வின் மூல காரணத்தைக் கண்டறிந்தவர்கள், அதனை வேரோடு பிடுங்கி வீசிவிட்டு, உற்சாகத்தின் ஊற்றுக் கண்களாய் உலா வருகிறார்கள்.

சிகிச்சை பெறும் அளவு தீவிரமான நிலையில் சில மனநோய் அறிகுறிகள் ஏற்படுவது வேறு விஷயம். பலரும் மனச்சோர்வுக்கும் மனநோய்க்கும் வேறுபாடு தெரியாமல் பயந்துவிடுகிறார்கள்.

அன்றாட வாழ்க்கையில் – அலுவல்களுக்கு நடுவில் – விரும்பத்தகாத சில விஷயங்கள் நடந்தால் சட்டென்று நம்மை சுற்றிக் கொள்கிற மனச்சோர்வுதான் நம் செயலாற்றலைப் பாதிக்கிறது. உண்மையில், கொஞ்சம் புரிதலும் கூர்மையான உணர்தலும் இருந்தால் மனச் சோர்விலிருந்து மிக எளிதாக விடுபடலாம்.

வாகனமொன்றில் புறப்படுகிறீர்கள். எரிபொருள் நிரப்பிக்கொண்டு கிளம்புகிறீர்கள். பத்தே நிமிடங்களில் எரிபொருள் தீர்ந்துவிடுகிறது. மறுபடியும் நிரப்புகிறீர்கள். பத்து நிமிடங்களில் மீண்டும் வாகனம் நின்று விடுகிறது. வாகனத்துக்குள் மாயப்பிசாசு மறைந்திருந்து எரிபொருள் பருகுகிறது என்றா நினைக்கிறீர்கள்?

எரிபொருள் நிரப்பும் கொள்கலனில் ஓட்டை விழுந்திருக்கிறது. தாரைதாரையாய் ஊற்றுகிற எரிபொருள் தரையோடு போய்விடுகிறது. அதை கவனிக்காத வரையில் பயணம் தொடரமுடியாது.

மனிதன் தன் உடலில் – உணர்வுகளில் – சேமித்து வைத்திருக்கும் சக்தியை விரயம் செய்கிற ஓட்டைதான் மனச்சோர்வு. உங்கள் உயிராற்றல் – உங்கள் சக்தி நிலை எங்கோ எப்படியோ வீணாகிறபோதுதான் சோர்வு பிறக்கிறது. அந்த ஓட்டைகளை அடைக்கிற உத்தி என்னவென்று நம் புத்திக்குப் புலப்பட்டால் போதும். மனச்சோர்விலிருந்து நிரந்தர விடுதலை நிச்சயம் சாத்தியம்!

உண்மையில், ஒவ்வொரு விநாடியும் நாம் கொடுக்கல் வாங்கலை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறோம். நம் ஒவ்வோர் அசைவிலும் சக்தியின் வரவோ செலவோ நடக்கிறது.

நம்பிக்கை, நல்ல வார்த்தைகள், நட்பு, நேசம், இலட்சியம் போன்ற அம்சங்களில் ஈடுபடும்போது சக்தியை வரவு வைக்கிறோம்.

எதிர்பார்ப்பு, ஏக்கம், இழப்பில் ஏற்படும் அதிர்ச்சி, கோபம், வாக்குவாதம், பொறாமை போன்ற உணர்வுகளுக்கு ஆட்படும்போது சக்தி நம் கையைமீறி நம்மைவிட்டுப் போகிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வரும்போது சக்தி காட்டு வெள்ளம் போல் வருகிறது. போகும்போதும் அதே வேகத்தில் காட்டு வெள்ளம்போல் காணாமல் போகிறது.

மனிதனின் சக்தி மிக அதிகமாக விரயமாகி மனச்சோர்வுக்கு வழி வகுப்பது கோபத்தில்தான். பலரும் கோபமே படக்கூடாது என்றெல்லாம் சொல்கிறார்கள் அப்படி இருப்பது சாத்தியமா? கோபம் என்கிற உணர்வு, உணவில் உப்பைப் போல் ஒரு துளி தேவை. கோபப்படாத போது ஒரு சில காரியங்கள் நடப்பதில்லை. சில தவறுகளை சிலர் உணரச் செய்ய வேறுவழியில்லை.

ஆனால் ஒன்றை சீரமைக்கவோ சுட்டிக்காட்டவோ கோபம் என்பதொரு கருவி மட்டும்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. பலரும் கோபத்தின் கைகளில் தங்களையே ஒரு கருவியாய் ஒப்படைத்து விடுகிறார்கள். அப்போதுதான் சக்தி வற்றிப்போய், சகலர் மீதும் நம்பிக்கையற்று, எல்லோருமே தமக்கெதிராய் இருப்பது போன்ற உணர்வில் சோர்வுக்கு ஆளாகிறார்கள்.

கோபத்தை, வேண்டிய சதவிகிதத்தில் மட்டும் பயன்படுத்துங்கள். கோபத்தின் கைகளில் ஆட்பட்டு விடாதீர்கள். கோபம் எப்படி வேலை செய்கிறது என்பதை சில ஆராய்ச்சிகள் சொல்லக் கேட்கையில் ஆச்சரியமாய் இருக்கிறது.

நீங்கள் ஒருவர்மேல் கோபம்கொண்டு, அவரைத் திட்டவேண்டும் என்றுகூட இல்லை. எங்கோ தொலைதூரத்தில் இருக்கிறார், அவரைப்பற்றி நினைக்கிறபோது உங்கள் மனதில் கோபம் உருவாகிறது என்றாலே, உங்கள் சக்தி அங்கே விரயமாகத் தொடங்குகிறது. அந்தக் கசப்பான நினைவுகள் கசக்கிப் பிழிவதில் சொட்டுச் சொட்டாய் உங்கள் சக்தி வற்றுகிறது. உங்கள் கோபத்திற்குரியவர் அங்கே தன்னுடைய வேலையை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பார். இந்தக் கோபம் அவசியம்தானா என்று கோபப்படாமல் சொல்லுங்கள்.

மனச்சோர்வின் மற்றொரு மூலம், இழப்பில் ஏற்படும் அதிர்ச்சியும், வருத்தமும். இழக்கக்கூடாத ஒரு தனிமனிதரையோ – பொருளையோ – வணிக வாய்ப்பையோ இழந்து விடும் நிலை உருவாவதாக வைத்துக் கொள்வோம்.

அதில் வருகிற வலியை – வருத்தத்தை – வேதனையை உள்வாங்குங்கள். அதை அனுபவியுங்கள். அந்த வலி வளரும்போதே “அடுத்தது என்ன” என்பதை நோக்கி உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.

இந்த இழப்பை எப்படி ஈடுகட்டுவது என்று யோசியுங்கள். யோசிப்பதோடு நிறுத்தாமல் உடனே அதை நோக்கி ஓரடியாவது எடுத்து வையுங்கள். இதற்கு, ரஏஅப சஉலப – அபபஐபமஈஉ என்று பெயர்.

நம் கட்டுப்பாட்டைக் கடந்து ஒன்று நிகழ்ந்துவிட்டதே என்ற அதிர்ச்சியிலேயே அமர்ந்துவிட்டால் அது பெரும் சோர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்ச்சியின் எதிர்விளைவாக சூழ்நிலையை இனியாவது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என்கிற முயற்சியே நம்மை இழப்பிலிருந்து மீட்டெடுக்கும்.

எல்லா மனிதனுக்குள்ளேயும் வாழ்வின் ஏதாவதொரு வலிமிகுந்த நேரத்தில் அடுத்தவர்களின் அனுதாபம் அவசியம் என்கிற தேடல் இருக்கிறது. மனச்சோர்வில் மற்றவர்களின் ஆறுதலை எதிர்பார்த்து, அந்த ஆறுதல் கிடைக்கா விட்டால் அதுவே மனச்சோர்வை அதிகரிக்கும் விஷயமாகிவிடும்.

“தாயும் பிள்ளையும் ஆனால் கூட வாயும் வயிறும் வேறு வேறுதான்” என்றொரு பழமொழி உண்டு. தன்கையை ஊன்றித் தானே எழுவதுதான் பலம்.

நாம் கொள்கிற கவலைகள் – மனச்சோர்வு ஆகியவற்றுக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒருமுகம் – உண்மையான காரணம். மறுமுகம் – ஆறுதல் தேடுகிற இயல்பு.

இந்த இரண்டாவது முகம் எப்படி உருவானது என்பதே நுட்பமான ஓர் உண்மை. குழந்தை ஓர் ஓவியத்தை வரைந்துகொண்டு வந்து அம்மாவிடம் காட்டுகிறது. “சரி சரி”. நல்லாதான் இருக்கு! போய்ப்படி” என்று சமைத்துக்கொண்டே சொல்லிவிடுகிறார் அம்மா.

அலுவலக வேலையிலோ தொலைக் காட்சியிலோ மூழ்கிவிடுகிற அப்பாவும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு பேருக்குப் பாராட்டுகிறார். அந்த வார்த்தைகளும் அரவணைப்பும் குழந்தைக்குப் போதவில்லை.

அறைக்குள் போய் ஓவியத்தை வெறுப்போடு வீசுகிறது. மேசையில் இருந்த கண்ணாடி சீசா சரிந்து கீழே விழுந்து “சிலீர்” என்ற சப்தத்துடன் நொறுங்குகிறது.

அடுத்த விநாடியே அம்மாவும் அப்பாவும் அறைக்குள் வந்துவிடுகிறார்கள். பத்துப்பதினைந்து நிமிடங்கள் இடைவிடாமல் திட்டுகிறார்கள். ஓவியத்தைப் பாராட்ட நேரமில்லாத இருவருக்கும் உடைந்த கண்ணாடிக்காகத் திட்டுவதற்கு நிறைய ….. நிறைய …..நேரமிருக்கிறது!

குழந்தையின் மனதில், தான் திட்டப்படுகிறோம் என்பதை விடவும் பெற்றோரின் கவனத்தை ஈர்த்துவிட்டோம் என்கிற திருப்தி நிலவுகிறது. தவறு செய்கிறபோது கவனத்தை ஈர்க்க முடியுமென்று தெரிந்து கொள்கிறது.

உற்சாகமாக ஓடிவிளையாடும்போது ஊக்கம் தராத பெற்றோர்கள் உடம்பு சரியில்லை என்று படுத்துவிட்டால் பக்கத்திலிருந்து பார்த்துக் கொள்கிறார்கள் என்ற எண்ணம் குழந்தைக்கு ஏற்பட்டால் தன்னையும் அறியாமல் அடிக்கடி நோய் வாய்ப்படுகிறது.

பல குழந்தைகளுக்கு, பெரியவர்களாக வளர்ந்த பிறகும், இதே மனநிலை தொடர்கிறது. குழந்தையாய் இருந்தபோது கிடைத்த கவனிப்பு வளர்ந்த பிறகு கிடைக்காத வருத்தத்தில் மனச்சோர்வு ஏற்படுகிறது.

இந்த மனநிலை மாறும் தனக்குள்ளேயே ஊக்கம் தேடும் தெளிவும் ஊக்கமும் பிறந்ததாலேயே மனச்சோர்வு தோன்ற வாய்ப்பில்லை.

மனச்சோர்வு என்பது உணர்வுரீதியாய் ஏற்படுகிற பின்னடைவு, அதனை நேர்மறை உணர்வுகளால் சீரமைத்து அறிவுரீதியாய் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து போகவேண்டும்.

நம்மீது நமக்கே வருத்தமோ நம்பிக்கையின்மையோ ஏற்படுகிறதா? அப்போதுதான் நமக்கு நாமே இன்னும் ஆதரவாய், நமக்கு நாமே இன்னும் நெருக்கமாய் இருக்க வேண்டும்.

மனச்சோர்வுக்கு ஆட்படும் நேரங்களில் பலர் நிறைய சாப்பிடுவார்கள். ஏற்பட்ட வெற்றிடத்தை இட்டு நிரப்பவேண்டும் என்கிற உந்துதலில் அப்படித் தோன்றும். நிறைய சாப்பிடுவது என்று தோன்றுகிற மனநிலையைக் விட சற்று கூர்ந்து கவனித்து சரியாகக் கையாண்டால் வியப்பளிக்கும் விதமாய் மாற்றங்களைப் பார்க்கலாம்.

பழங்கள் – தானிய வகைகள், உலர் பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவது – பழச்சாறு, இளநீர் பருகுவது – மனச்சோர்வு நேரத்தில் ஏதேனும் ஓர் இனிப்பை சாப்பிடுவது என்பதெல்லாம் சக்தி தருகிற உணவு ரகங்கள் மூலம் நமக்குப் புத்துணர்வு தந்து கொள்கிற முறை.

மனச்சோர்வுக்கு உடனடிக் காரணமாய் நாம் சில சம்பவங்களை சொல்கிறோம். அந்த சம்பவங்களுக்காக சங்கடப்பட்டுக் கொண்டிருக்காமல் மனதில் தடுமாற்றத்தை மடை மாற்றம் செய்து, சக்தியை சேமித்துக் கொள்ளுங்கள். இந்தப் பழக்கம் ஒரு பயிற்சியாக வளர வளர மனச்சோர்விலிருந்து விடுதலை பெறலாம்……. நிரந்தரமாக!