காதர் இப்ராஹீம், மலேசிய மண்ணின் செல்வாக்குமிக்க சுயமுன்னேற்றச் சிந்தனையாளர், தமிழக இளைஞர்கள் மத்தியில் தன் அழுத்தமான சுய ஆளுமைப் பயிற்சிகளால் புகழ்பெற்று வருபவர். பல்வேறு துறைகள் குறித்த அறிவும், வாழ்க்கை குறித்த தெளிவும் இவரது பலங்கள். சமீபத்தில் தமிழகம் வந்தபோது நமது நம்பிக்கை இதழ் ஆசிரியர் குழுவுடன் இவர் செலவிட்ட பொழுதுகளின் பதிவுகள்… உங்களுக்காக!

மனம் சார்ந்த துறைகளில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

என் தந்தையார் திரு. ரசாதுகான் இதற்கான விதையை விதைத்தவர் எனலாம். சிறுவனாய் இருக்கும்போதே என்னிடம் அவர் மனம் குறித்துப் பேசுவார். மனதுக்கு எல்லை இல்லை, மனதில் நல்ல காட்சிகளை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் அவர் அறிவுறுத்துவர். எட்டாம் வகுப்பு படிக்கிறபோதே, அயல் நாட்டில் படிப்பதாகவும், பெரிய ஸ்டேடியத்தில் உரை நிகழ்த்துவதாகவும், காபாவில் பிரார்த்தனை செய்வதாகவும் மனதில் காட்சிகளை உருவாக்கச் சொல்வார்.

அதேபோல, என் பள்ளி ஆசிரியர் திரு. ஆசீர்வாதம், அனைத்து மதங்களையும் ஒப்பிட்டு நல்ல கருத்துக்களைக் கூறுவார். அவருடைய தூண்டுதலால் நல்ல புத்தகங்களைப் படித்தேன். அவரும் மனம் குறித்து நிறையப் பேசுவார்.

இரண்டு கைகளையும் சற்றுத் தள்ளி வைக்கச் சொல்லி, அவற்றுக்கு மத்தியில் காந்த அலை உருவாவது பற்றியெல்லாம் விளக்குவார். என் தந்தை விதை விதைத்தார் என்றால் ஆசிரியர் ஆசீர்வாதம் விதைக்கு உரமிட்டார் என்று சொல்லலாம்.

மேல் நிலைப்பள்ளி படிப்பு முடித்தபிறகு பிரெய்ன் என்ஜினியரிங் என்ற அரிய துறையில் சேர்ந்து படித்தேன். பிறகு மைக்ரோ எலட்க்ரானிக்ஸ் பற்றிப் படித்தேன். காந்த அலை பற்றி என் துறைக்கு அது மிகவும் உதவியாக அமைந்தது.

அதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகக் கூற முடியுமா?

எல்லாமே அணுக்களால் ஆனவைதான். ஒன்றின் பலமும் பலவீனமும் அதிலுள்ள காந்த அலைகளைப் பொறுத்துதான். ஒரு கண்ணாடிக் குவளை இருக்கிறது. அதனருகே கூடுதல் வோல்டேஜில் இசைக்கருவி இசைக்கப்பட்டால் அது உடைகிறது. ஏனென்றால் அதில் காந்த அலை குறைவாக உள்ளது. இது மூளைக்கும் பொருந்தும். இது குறித்த ஆழமான அறிவுதான் இந்தக் கல்வி.

மூளை எப்படி காந்த அலைகளைப் பெறுகிறது. அது எப்படி பிரபஞ்சத்தோடு தொடர்புடையதாகிறது என்பதை எல்லாம் அறிந்தால் வாழ்க்கையின் அற்புதம் விளங்கும்.

ஓர் உதாரணம் சொல்லுங்களேன்?

இயல்பில் காந்த அலை பரிசுத்தமானது. அதுவே மனித விருப்பங்களையும் இலட்சியங்களையும் தீவிரமாக்குகிறது. சிலரைப் பார்த்ததும் உங்களுக்குப் பிடித்துப் போகிறது என்றால் உங்களிடையிலான காந்த அலைகள் அழுத்தமாக இருப்பதாக அர்த்தம்.

அதேபோல சிலரிடத்தில் தீவிரமான தியானம், மனப் பயிற்சிகள் காரணமாக இத்தகைய அலைகள் அழுத்தமாக இருக்கும். அவர்களைப் பார்க்கும்போதும், பழகும்போதும், நமக்கு நன்மைகள் நிகழ்கின்றன.

அவர் என்னைத் தொட்டார், கால் வலி குணமானது என்றெல்லாம் சொல்கிறோமே, அதற்கு இதுதான் காரணம். இதைத்தான் நம்முடைய பெரியவர்கள் “நல்லாரைக் காண்பதுவும் நன்று” என்று சொன்னார்கள்.

அத்தகைய மனிதர்களையும் இடங்களையும் தேடிப் போக வேண்டுமா?

நிச்சயமாக. கோவில், சர்ச், பள்ளிவாசல் போன்ற இடங்களில் புனித அமைதி இருக்கிறது. அந்த இடத்தின் அலைகள் உங்களை மாற்றும். அத்தகைய மாற்றங்கள் ஆற்றல் தரும். சில விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, வட துருவம்தான் காந்த அலை என்பது ஏற்கெனவே தீர்மானமாகிவிட்ட விஷயம். தீர்மானிக்கப்பட்டவற்றோடு தொடர்புபடுத்திக் கொள்வதே வாழ்க்கை.

எல்லாருக்கும் எல்லா வாய்ப்புகளும், உதவிகளும் உருவாக்கப்பட்டுவிட்டன. ஆனால், அந்த உதவி கிடைக்காமல் சிலர் தடுமாறுகிறார்கள். ஏனென்றால், அந்த உதவியோடு தங்களுக்குத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளாததுதான் காரணம்.

உங்கள் பயிற்சிகளின் முக்கிய அம்சமாக எதனைக் கருதுகிறீர்கள்?

எதையும் முழுமையாகப் பார்க்க வேண்டும். ஒரு பயிற்சியாளருக்கு வாழ்வியல் குறித்து முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். மருத்துவம், மனோதத்துவம், முன்னேற்றச் சிந்தனைகள், ஆன்மீகம் ஆகியவற்றின் முறையான புரிதலும், சரியான கலவையும் மிக முக்கியம். கிழக்கிந்திய ஞானம் என்பது உள்ளுணர்வின் அற்புதமான வெளிப்பாடு. ஆனால், அது மட்டுமே வெற்றி தராது. மேற்கத்திய அணுகு முறைப்படியான ஆராய்ச்சிக்களும் அதற்கு முக்கியம்.

இந்தப் பயிற்சிகள் வழியே மனிதன் என்ன பயனைப் பெறுகிறான்?

முதலில் உலகம் பற்றிய புரிதல் உங்களுக்கு ஏற்படுகிறது. உலகம் என்றால், நாம், ஊர், வீடு, அலுவலகம், இருக்கும் இடம், எல்லாவற்றையும் பற்றிய புரிதல்தான். அடுத்து, உங்களை நீங்களே புரிந்துகொள்வது. உடல்-மனம்-பிரபஞ்சம் இந்த மூன்றுக்குமான தொடர்பு. எல்லாம், எல்லாவற்றுடனும் தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறது. Everything is Connected with Everything என்பதைப் புரிந்து கொள்வது முக்கியம்.

ஒரு விஷயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது எப்படி?

எந்தவொரு விஷயத்திலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். எதுவும் தானாக நடக்காது. ஒன்றை உருவாக்குவதும் அதை மற்றவர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதும் மிகவும் முக்கியம். மலேசியப் பிரதமர் மகாதீர், மலேசியாவை உலகப் பொருளாதாரத்திற்கு இன்றியமையாத இடமாக்கினார். அதனை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் அக்கறை காட்டிப் பயணமாகிறார். அதுபற்றிச் சொல்லும்போதே “நான் சுற்றுலாப் பயணியாகப் போகவில்லை. விற்பனையாளராகப் போகிறேன்” என்றார் அவர். இந்த அணுகுமுறை தேவை.

சுயநலம் நிறைந்த உலகத்தில் எப்படி வாழ்வது என்று பலரும் சலித்துக் கொள்கிறார்களே?

உலகத்திற்கு சுயநலம் உள்ளது என்பது உண்மைதான். நான் உட்பட எல்லோருக்கும் சுயநலம் உள்ளது. சுயநலம் இருப்பதால்தான் நான் பயிற்சி வகுப்பு நடத்துகிறேன். உங்களுக்கு சுயநலம் இருப்பதால்தான் நீங்கள் இதழ் நடத்துகிறீர்கள். கடவுளுக்குக்கூட சுயநலம் இருப்பதால்தான் அவரை அறிய வேண்டும் என்கிற எண்ணத்தைப் படைத்தார்.

நம் சுயநலத்தில் பிறரை வாழ வைக்கிற அம்சங்கள் இருந்தால் அது நல்லது. பிறரை அழித்து நாம் வாழவேண்டும் என்றால் அந்த சுயநலம் தவறு.

உங்களையும் உயர்த்திப் பிறரையும் உயர்த்துவது சுயநலம் கலந்த பொதுநலம். எனவே, சுயநலம் செயல்பட வைக்கும். பொதுநலம் வாழ வைக்கும்.

எல்லாவற்றிலுமே அதன் அளவுதான் முக்கியம். பணம் தேவையா இல்லையா என்பதில் கூட இப்படி அளவு தெரியாமல் குழப்பிக் கொள்கிறார்கள். பணம்தான் தேவை என்பது தவறு. பணமே தேவையில்லை என்பதும் தவறு. பணமும் தேவை என்பதுதான் உண்மை.

விமர்சனங்களுக்கு வாழ்க்கையில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரலாம்?

பொதுவாக, நாம் செய்யும் தவறுகள் நமக்கு விளங்காது. ஒன்றைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் மூளை அதைப் பழக்கமாகப் பார்க்குமே தவிர தவறு என்று அடையாளப் படுத்திக் கொள்ளாது. ஆனால், அது தவறு என்று பிறருக்குத் தெரியும். எனவே, எதிர்ப்புகள், எதிரிலிருந்து வரும் பூக்கள் என்பதே என் கருத்து.

விமர்சனங்கள் எல்லாமே அவதூறுகள் அல்ல. அதனால் நாம் காயப்பட்டுவிடாமல் அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று கவனமாகப் பார்க்க வேண்டும். ஒரே நேரத்தில் சிலர் உங்களை மகான் என்பார்கள். சிலர் உங்களை மிருகம் என்பார்கள். எனவே, அவற்றில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று பாருங்கள். தேவையான திருத்தங்களை செய்து கொள்ளுங்கள். உண்மையில்லாத விமர்சனங்களை விட்டுவிடுங்கள்.

உங்கள் பயிற்சிக்கு வருபவர்களுக்கும் சரி, உங்கள் புத்தகங் களைப் படிப்பவர்களுக்கும் சரி, உங்கள் பொன்மொழிகள் மிகவும் பிடிக்குமாமே?

ஆமாம். என்னுடைய பொன்மொழிகள் சில எனக்கு மிகவும் பிடிக்கும்.

“மனதை நீங்கள் ஆளுங்கள்
மனம் உலகை ஆளும்”

“புண்பட்டால்தான் பண்பட முடியும்”

“எதையும் இழக்காமல் எதையும் அடைய முடியாது”

“நிறைவாகும் வரை மறைவாக இரு”

“வார்த்தைகளில் வாழாதீர்கள்; அர்த்தத்தில் வாழுங்கள்”

“பிறரை வெறுக்கக் காரணம்,
அவர்களைப் புரிந்து கொள்ளாததுதான்.
அவர்களைப் புரிந்து கொள்ளாததற்குக் காரணம்,
வெறுப்பதுதான்”.

“உன் கடமையை சரியாகச் செய்தால்
ஆண்டவன் அவன் கடமையை சரியாகச் செய்து விடுவான்”

“இறைவனைக் கடனாளியாக்கி விடுங்கள். உங்களால் முடியாத நேரத்தில் அவன் தன் கடனைத் தீர்ப்பான்”