வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

ஹரித்துவாரில் பெய்யும் மழை


என் இருபத்தி நான்காவது வயதில் ஹரித்துவாரில் இறங்கி நடக்க துவங்கிய போது மழை பெய்து கொண்டிருந்தது. சில வாரங்களுக்கு முன்பு தான் மழைக்காலம் துவங்கியிருந்தது. எனது பயண வழியெங்கும் மழையின் தடங்கள். ஈரமேறிய கற்கள், மரங்கள், ரயில்நிலையங்கள், சிமெண்ட் பெஞ்சுகளை கடந்தே ஹரித்துவாருக்கு வந்திருந்தேன்.


மழைக்காலத்தில் பயணம் செய்வது அலாதியானது. பழகிப்பிரிந்த நண்பருடன் மீண்டும் சேர்ந்து பயணம் செய்வது போன்றது. அடர்த்தியான மழை. ஷ்ராவன மாதத்து மழை எளிதில் அடங்காது என்பார்கள். அன்றாடம் கங்கையை பார்த்து களிக்கும் சூரியனை அன்றைய பகலில் காணவில்லை. மேகங்கள் இருண்டு அடர்ந்திருந்தன. வானிலிருந்து கங்கை பூமிக்கு இறங்கியது போன்ற அதே வேகம் தான் மழையிலும்.

யாரும் மழையை பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. சுழித்தோடும் கங்கையில் குளிப்பதற்காக படித்துறையெங்கும் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். நீருக்குள் நின்றபடியே ஒரு குடும்பம் ஆகாசத்தை நோக்கி கைதூக்கி மழையை வணங்கி கொண்டது. அவர்கள் நெற்றியில் பட்டு ஆசிர்வதித்தது மழை.

இது கோடையில் பார்த்த கங்கையில்லை . கோடைகாலத்து கங்கை ஒடுங்கியது. உரித்து கிடக்கும் பாம்புசட்டை போன்றது. ஆனால் மழைக்காலத்தின் கங்கை ஆவேசமிக்கது. துடிக்கும் ஆயிரம் நாவுகள் கொண்டது. கற்களை கூட கரைத்து கொண்டு போய்விடும் என்பது போன்ற வேகம். ஒநாயின் சீற்றம் போல உக்கிரம்.

கங்கையை கண்ணிலிருந்து மறைத்துவிட பார்ப்பது போல மழை வேகமெடுத்தது. ஆற்றின் தடுப்பு பாலத்திலிருந்து ஒரு சிறுவன் உற்சாகமாக குதித்து நீரில் மறைந்தான். படித்துறையெங்கும் ஈரம் வழியும் மனிதர்கள். பொதுவாக மழையை கண்டதும் உயரும் குடைகளை அங்கே காணமுடியவில்லை. ஒரு வயதானவர் மழைக்கு தன்னை ஒப்பு கொடுத்து கொண்டவரை போல கல்லில் அமர்ந்தபடியே ஆற்றை பார்த்து கொண்டிருந்தார்.

அவரது உதடுகளில் மழை பட்டு எதையோ பேசுவது போல கரைந்து ஒடியது. அவரிடம் மௌனம். மகாமௌனம். மழை கரைக்கமுடியாத மௌனம் உறைந்து போயிருந்தது. பலநூறு சூரிய உதயங்களை, மழையை கண்டு பழகிய முதிய கண்கள் அவை. முன்பு இல்லாத சந்தோஷத்தை முதன்முறையாக காண்பது போல அந்த கண்களில் உற்சாகம் பெருகி வழிகிறது. அவர் முன்பாக மழை தத்திக் கொண்டிருந்தது.

தன் உடலில் பட்டு ஒடிவிடுவதை தவிர மழையால் வேறு ஒன்றும் செய்யமுடியாது என்பதை போல அவர் அமர்ந்திருந்தார். இந்த தோல்வியை தாங்க முடியாமல் தானோ என்னவோ மழை காற்றையும் துணைக்கு அழைத்து கொண்டது. ஒங்காரமான வேகம். அவரிடம் அசைவேயில்லை. பசுமாடு ஒன்று மழைக்குள்ளாகவே நடந்து வந்தது. மழை அதையும் விடவில்லை. சற்று எரிச்சலானது போல பசு அதன் வாலால் மழையை விசிறி அடித்து துரத்தியது. மழை துளிகள் பசுவோடு விளையாடுவது போல பாவனை காட்டி துரத்தின.

பசு வேகம் கொள்ளவில்லை. அது திரும்பி மழையை பார்த்தது. பின்பு அதை சட்டை செய்யாமல் மழைக்குள்ளாகவே நடந்து யாரோ தூக்கி எறிந்து போன பூமாலை ஒன்றை முகர்ந்து பார்த்து தலை அசைத்தது. அதன் நாக்கு நெற்றியிலிருது மூக்கு நோக்கி வழியும் மழையை தடவி ருசித்தது. பின்பு நாவால் மழையை தொட்டுவிட முயல்வதை போல சுழற்றியது. மழை பசுவின் மீது போக்குகாட்டி பெய்தது. யாரோ மாட்டை விரட்டினார்கள்.

மழையை வேடிக்கை பார்ப்பவர்கள் இங்கே குறைவு. கங்கையில் பெய்யும் மழையை களிப்போடு பார்த்துகொண்டேயிருந்தேன். ஒரு துளிக்கும் இன்னொரு துளிக்கும் எவ்வளவு இடைவெளியிருக்கும். மழையில் எது முதல் துளி. மழை ஏன் துளியாக பெய்கிறது என்று எண்ணங்கள் தானே உருவாகி மறைந்தன. ஆற்றில் மிதந்துசெல்லும் ஆரத்திபூக்கிண்ணம் மீது மழை பெய்து அதை கவிழ்த்தது. பூக்கள் நீரில் மிதக்கின்றன. ஒவ்வொரு பூவின் மீதும் ஒரு துளி மழை உட்கார்ந்திருக்கிறது.

மழை பெய்கிறது என்பது எவ்வளவு சிறிய வார்த்தை இது. ஒவ்வொரு முறை இதன் போதாமையை முழுமையாக உணர்கிறேன்.

மழைக்காலத்தில் கங்கையை பார்ப்பது பேரனுபவம். ஆற்றை மழைக்காலத்தில் தான் பார்க்க வேண்டும். அப்போது தான் அதன் விஸ்வரூபத்தை அறிய முடியும். மனிதர்களுடனான தனது ஸ்நேகத்தை முறித்து கொண்டுவிட்டது போல ஆறு சீறுகிறது. மனிதர்கள் அதை சமாதானப்படுத்துவது போல வணங்குகிறார்கள். பூக்களால் ஆராதனை செய்கிறார்கள். வணங்கி பாடுகிறார்கள்.
ஆறு சிறகுகள் கொண்டது என்பதை மழைக்காலமே நமக்கு உணர்த்துகிறது. மிதமிஞ்சிய வேகத்தில் ஆறு பறப்பதை மழை நாளில் மட்டுமே காணமுடியும். மனிதர்கள் உருவாக்கிய அத்தனை தடைகளையும் ஆறு மழைக்காலத்தில் தாண்டிச் செல்கிறது. மனிதர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள். தானே அடங்கும்வரை விட்டுப்பிடிக்கிறார்கள்.

ஜல்லிகட்டில் சீறிவரும் காளையிடம் தென்படும் அதே ஆவேசம். அடங்கமுடியாத திமிர். ஆனால் மனிதர்கள் தந்திரம் அறிந்தவர்கள். அவர்கள் ஆற்றை எங்கே தடுக்கவேண்டும். எப்படி ஒடுக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள். ஆறு மழைக்காலத்தில் பகலிரவாக பேசி ஒய்கிறது. கூச்சலிடுகிறது. வெறியேறிய மனிதனை போல கடந்தகாலத்தின் அத்தனை கசடுகளையும் அள்ளி வீசி போகிறது.

ஒரு சிறுவன் ஒடும் ஆற்றில் சிறிய வெண்கல குவளையில் தண்ணீர் அள்ளுகிறான். அவன் கங்கையை சுமக்க ஆசைப்படுகிறான். தன் கூடவே ஊருக்கு கொண்டு போய்விட எத்தனிக்கிறான். அவன் கைக்குள் ஒடுங்கிய ஆறு அவனோடு சேர்ந்து பயணித்து அவன் ஊரை தேடி போகிறது. குவளையில் அள்ளிய தண்ணீரில் வேகமில்லை. உதிர்ந்த இலை போல அது தன் இயல்பை மாற்றிக் கொண்டுவிட்டது.

வெண்கல குவளையில் ஒடுங்கிய ஆறு எவ்வளவு நாட்கள் அந்த சிறுவன் வீட்டில் தங்கியிருக்க கூடும் என்று தெரியவில்லை. மரணத்தருவாயில் உள்ள யாரோ ஒரு முதியவனின் கடைசி சொட்டு தாகத்தினை போக்குவதற்காக அது காத்திருக்ககூடும். உதிர்ந்த பூக்கள் மரத்தை மறந்துவிடுவதை போல வெண்கல கிண்ணியில் அள்ளிய நீரும் தன் பூர்வத்தை மறந்துவிடுமா ? அது தான் கங்கை என்று கிராமத்து சிறுவன் எவனோ கண்டால் அதற்கு வெட்கமாக இராதா? ஒடாத கங்கையை காண்பது எவ்வளவு வேடிக்கையானது. அது சித்திரத்தில் தென்படும் ஆற்றை போன்றது தானே.

மழையை பார்த்தபடியே இருக்கிறேன். ஆற்றில் குளிக்கும் உடல்கள் வசீகரமாக இருக்கின்றன. ஆடைகள் நழுவிய உடல்கள் ஏன் இத்தனை வசீகரம் கொள்கின்றன. தண்ணீரை தவிர வேறு எங்கும் உடல்கள் இத்தனை வனப்பு கொள்வதேயில்லை. தண்ணீருக்குள் இறங்கியதும் உடல் உருமாறத்துவங்கிவிடுகிறது. ஆரஞ்சு பழத்தின் தோல் உரிந்து போவது போல நமக்குள் இருந்து ஏதோ ஒன்று ஆற்றில் உரிந்து போய்விடுகிறது. ஒரு இளம்பெண் கங்கையில் நனைந்த புடவையுடன் இறங்கி குளித்து கரையேறி நடந்தாள். அந்த உடல் துடுப்பை போல விசையேறியிருந்தது. கண்கள் விரிந்து மலர்ந்திருக்கின்றன. அடர்ந்த கூந்தல். நீண்ட விரல்கள். உதட்டில் அடங்க மறுக்கும் சிரிப்பு. அவளது நடையில் மழையை தான் மதிக்க போவதில்லை என்று உறுதி தெரிகிறது.

படியோரம் அமர்ந்து ஒரு நாவிதர் ஆற்றை பார்த்து கொண்டிருந்தார். பழகிய ஆறு. என்றாலும் மழையில் புதிதாகவே இருக்கிறது. அவரது காலடியில் எவரது தலையில் இருந்தோ நீக்கபட்ட ரோமங்கள் நனைந்து ஒட்டியிருந்தன. உதிர்ந்த ரோமங்களை கொண்டு எவரது தலையில் அது இருந்தது என்று அறியமுடியுமா என்ன?

பகல் பொழுது தான் என்றாலும் மாலை நேரத்தை போல வெயில் மூடிக் கொண்டிருக்கிறது. மங்கிய வெளிச்சம். மழை உலகின் இயல்பை பெரிதாக மாற்றிவிடுகிறது. அதிலும் இதுபோன்ற ஆற்றுபகுதிகளை உடனே உருமாற்றிவிடுகிறது.

பிளாஸ்டிக் பொருள்களை விற்பவன் தலையில் துணியை போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அவனது கண்கள் மழையை திட்டுகின்றன. அவனது பீடி கூட நனைந்து போயிருக்கிறது.

ஹரித்துவார் மிக பழமையான நகரம். கங்கை இமயமலையில் இருந்து தரையிறங்கும் இடமது. பகிரதன் கங்கையை அங்கே வணங்கியதாக சொல்கிறது புராணம். படித்துறைகளில் இரும்பு சங்கிலிகள் தொங்குகின்றன. அதை கையில் பிடித்து கொண்டு தான் நீரில் இறங்க வேண்டும். அப்படியும் ஆற்றின் வேகம் இழுத்து கொண்டுபோய்விடும். மழையில் அந்த இரும்பு சங்கிலிகள் இளகிப்போயிருப்பது போன்று தெரிகிறது.

முன்னொரு காலத்தில் இந்த இடம் பெரும்வனமாக இருந்திருக்கிறது. அந்த வனத்தில் ஆற்றின் கரையில் மான்கள் துள்ளியலைந்திருக்கின்றன. யாரோ ஒரு முனி தவக்கோலத்தில் அமர்ந்திருக்ககூடும். மிருங்கங்கள் நிலாவெளிச்சத்தில் நடந்து அலைந்திருக்கும். மீன்கள் துள்ளி காட்டை வேடிக்கை பார்த்திருக்கும். அன்றிருந்த அதே சூரியன். அதே ஆகாசம். அதே நிலவு. அதே பூமி. மனிதர்கள் மாறிக் கொண்டேயிருக்கிறார்கள். ஹரித்துவார் அதை ஏதோவொரு வகையில் நினைவு படுத்துகிறது. குறிப்பாக மழைக்கு பிந்திய ஊரின் நிறமும் வீதிகளின் இயல்பும் நூற்றாண்டுகளை கடந்து பின்னால் போய்விட்டது போன்றேயிருக்கிறது.

இறந்தவர்களுக்கான நீத்தார்நினைவு சடங்குகள் மழையிலும் நடக்கின்றன. நினைவுகளை கரைத்து விட முடியுமா என்ன? எண்ணிக்கையற்ற மனிதர்களின் நினைவுகள் கங்கையோடு சேர்ந்து கரைந்திருக்கின்றன. இதே கங்கையின் முன்பாக யுவான் சுவாங் நின்றிருந்ததை பற்றி குறிப்புகள் எழுதியிருக்கிறான். அவன் கண்ட கங்கை என்பதன் சிறு சுவடு கூட இன்றில்லை.

இந்திய இலக்கியங்கள் கங்கையை கொண்டாடுகின்றன. மகாபாரத்தில் குருஷேத்ர யுத்தத்தின் முடிவில் இறந்து போன சொந்த பந்தங்களை மீண்டும் ஒரு முறை பார்க்க முடியாதா என்று கௌரவர்களும் பாண்டவர்களும் இரண்டு பக்கம் உள்ள வீரர்களின் பெண்டுபிள்ளைகளும் அழுது மாய்கிறார்கள். அவர்களை சமாதானம் செய்வதற்காக கிருஷ்ணன் ஒரு இரவை உருவாக்குகிறான்.

அந்தஇரவில் இதே கங்கையில் இருந்து போரில் இறந்து போன அத்தனை பேரும் எழுந்து வருகிறார்கள். இனி பார்க்கவே முடியாதோ என்று கலங்கி போன குடும்பம் கதறி அழுகிறது. தத்தமது மனைவி பிள்ளைகளை இறந்தவர்கள் கட்டிக் கொள்கிறார்கள்.. பிரிவின் வலி தாங்காமல் அவர்களிடம் பெண்கள் ஏதேதோ பேசுகிறார்கள். ஆனால் இறந்து மறு உயிர்ப்பு பெற்றவர்களால் பேசமுடியாது. கட்டிக் கொள்ளவும் கண்ணீர்விடவும் மட்டுமே முடியும். சாவின் துக்கம் பெருகிய பெண்கள் ஆற்றிலிருந்து எழுந்துவரும் கணவனை சகோதரனை கட்டிக் கொண்டு அழுது மாய்கிறார்கள்.

ஆற்றின் கரையெங்கும் துயரம் பீறிடுகிறது. விடியும் வரை இந்த மறுசந்திப்பு நடைபெறுகிறது. விடிவதற்கு முன்பாக இறந்தவர்கள் மறுபடியும் ஆற்றிற்குள் போய்விடுகிறார்கள். அந்த வெறுமை ஆற்றின் மீது நிரம்புகிறது. தங்களை மீறி ஆண்களும் பெண்களும் ஆற்றில் விழுந்து தங்கள் துயரத்தை கலக்கிறார்கள். மஹாபிரஸ்தானிகம் என்னும் பர்வத்தில் இந்த சம்பவம் விவரிக்கபடுகிறது.
யோசிக்கையில் இது எவ்வளவு பெரிய விந்தை. எவ்வளவு பெரிய ஆறுதல். கங்கையின் முன்னால் எல்லா விந்தைகளும் எளிய இயல்பே என்று தோன்றுகிறது. மகாபாரதத்தை கங்கையே வழிநடத்துகிறது. கங்கையின் மகன் தானே பீஷ்மர்

மழை அடங்கவில்லை. மகுடிக்கு கட்டுபட்ட பாம்பை போல ஆட்கள் மழையில் மயங்கி நின்றபடியே இருக்கிறார்கள். சாலையோர கடைகளில் கூட இரைச்சல் இல்லை. சைக்கிள் ரிக்ஷா ஒன்று மழைக்குள்ளாக வருகிறது. பருத்த உடல் கொண்ட ஒரு ஆள் இறங்கி ஆற்றை நோக்கி நடந்து போகிறார். மழை அவரை கேலி செய்வது போல முதுகில் அடிக்கிறது. அவர் கண்டு கொள்ளாமல் நடந்து போகிறார்.

ஹரித்துவாரின் மழை பின்மதியம் வரை பெய்தே அடங்கியது. மழைக்கு பிந்திய ஆற்றின் நிறமும் வேகமும் மாறியிருந்தன. கங்கா ஆரத்தி நிகழ்விற்காக அகல்விளக்குகள் ஏற்றப்படுகின்றன. ஆற்றை வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கில் காத்திருக்கிறார்கள். மாலை மெல்ல அடங்குகிறது. மழையின் விம்மல் எங்கோ கேட்டபடியே இருக்கிறது. ஆற்றின் மீது விளக்கு வெளிச்சம் ஊர்ந்து போகிறது. ஆறு கரையடங்காமல் திமிறிக் கொண்டிருக்கிறது. சேர்ந்திசை போல குரல்கள் பாடுகின்றன. கங்கை பாதி இருளும் பாதி ஒளியுமாக மின்னுகிறது. இருட்டிற்குள்ளாகவும் சிலர் ஆற்றில் இறங்கி குளித்தபடியே இருக்கிறார்கள்.

திரும்பவும் இரவில் மழை வரும் என்றார்கள். அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மழையின் கைகள் துடைத்த வீதிகள் மறுபடி கசடுகளும் குப்பைகளும் நிறைந்து போயிருந்தன. ஊர் மாறாத இயல்புக்கு வந்திருந்தது. கிழக்கில் எங்கோ மின்னல்வெட்டியது. காற்றில் மழையின் ஈரம். அடுத்த மழை எப்போது துவங்கும் என்ற யோசனையுடன் நடந்து செல்ல ஆரம்பித்தேன்.

நனைந்த பஞ்சை போல மனமெங்கும் கங்கை நிரம்பிட துவண்டுபோயிருந்தேன்.. ஆற்றை கூடவே சுமந்து கொண்டுசெல்வது உள்ளுற மிக சந்தோஷமாக இருந்தது.

**

No comments:

Post a Comment