வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

சொல்லதிகாரம் -வைரமுத்து

‘கொல்’ ‘கொள்ளையடி’
சரித்திரம் அதிகம் கேட்ட வார்த்தைகள்

”தழுவு” ”முத்தமிடு”
கட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

”ஆராரோ” ”சனியனே”
தொட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

”உனக்கெப்போது கல்யாணம்?”
விலைமகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

”உருப்போடு” – உருப்படமாட்டாய்”
வகுப்பறைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

”இன்னொரு ஜென்மம்
என்றொன்றிருந்தால்”
பூங்காக்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

”கடைசியாய் எல்லாரும்
முகம்பார்த்துக் கொள்ளுங்கள்”
மயானங்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

”சவால் விடுகிறேன் – சபதம் செய்கிறேன்’
மேடைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

‘பாலாறு – தேனாறு’
பொதுஜனம் அதிகம் கேட்ட வார்த்தைகள்

”மறக்காமல் கடிதம் போடு”
ரயிலடிகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

”அய்யா குளிக்கிறார்”
தொலைபேசி அதிகம் கேட்ட வார்த்தைகள்

‘அப்பா கோபமாயிருக்கிறார்’
குழந்தைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

‘தயவுசெய்து’ – ‘மன்னியுங்கள்’
ஐரோப்பா அதிகம் கேட்ட வார்த்தைகள்

”நேற்றே வந்திருக்கக் கூடாதா”
கடன் கேட்போன் அதிகம் கேட்ட வார்த்தைகள்

‘இனிமேல் ஆண்டவன் விட்ட வழி’
மருத்துவமனைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்


போதுமடா சாமி!
போதும்! போதும்!

ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்
சாயம் போயின வார்த்தையின் நிறங்கள்

இனி ஒவ்வொரு சொல்லையும்
ஒட்டடை தட்டுவோம்

இனிமேல் வார்த்தைகளை
இடம் மாற்றிப் போடுவோம்

அத்தனை சொல்லிலும்
ஆக்சிஜன் ஏற்றுவோம்

வார்த்தை மாறினால்
வாழ்க்கை மாறும்


முதலில்
வாழ்க்கையிலிருந்து
வார்த்தையை மீட்போம்
பின்னர்
அர்த்தத்திலிருந்து
வார்த்தையை மீட்போம்

வாழ்வின் நீள அகலம் கருதி
வார்த்தைகளிலும் நாம்
மழித்தல் நீட்டல் செய்வோம்

மரித்தான் என்ற சொல்லை யெறிந்து
வாழ்வை வென்றான் என்று புகல்வோம்

தோல்வி என்னும் சொல்லைத் தொலைத்து
விலகி நிற்கும் வெற்றியென்றுரைப்போம்

எதிரி என்ற வார்த்தை எதற்கு?
தூரத்து நண்பன் சொல்லித் திளைப்போம்

சதிபதி இருவர் சண்டைகள் இட்டால்
முரட்டு அன்பென்று மொழிந்து பார்ப்போம்

இலைகள் கழிந்த கிளைகள் கண்டால்
அடுத்த வசந்த ஆரம்பம் என்போம்

நொந்த தேகம் நோயில் விழுந்தால்
உடம்பே கொள்ளும் ஓய்வென்றுரைப்போம்

வெள்ளைச் சட்டையில் மைத்துளிபட்டால்
மையைச் சுற்றிலும் வெண்மையென்போம்

நிலவைத் தொலைத்த வானம் என்பதை
விண்மீன் முளைத்த விண்வெளி என்போம்

எதிர்மறை வார்த்தைகள்
உதிர்ந்து போகட்டும்

உடன்பாட்டு மொழிகள்
உயிர் கொண்டெழட்டும்

பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்
புதிய நிலத்தில் பதியன்போடுவோம்

புளித்த வார்த்தைகள் மாறும்போது
சலித்த வாழ்க்கையும்
சட்டென்று மாறும்

No comments:

Post a Comment