வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

ஆரோக்யம் மற்றும் உடலின்மீது எண்ணத்தின் தாக்கம்.

உடலானது, மூளையின் வேலைக்காரன். மனம் இட்ட கட்டளைகளை அது நிறைவேற்றும். மனதிற்கு கீழ்ப்படியும்.

மனம், போகிற போக்கில் சிலவற்றை எண்ணினாலும், அல்லது வலுக்கட்டாயமாக சில எண்ணங்களை வளர்த்துக்கொண்டாலும், உடல், மனதிற்கு கீழ்ப்படியும்.

சட்ட விரோத எண்ணங்களை மனம் எண்ணும்போது, உடல், மிகவிரைவில் அழுகி, நோயில் மூழ்கிவிடும்.

மனதின் மகிழ்ச்சியான, அழகிய எண்ணங்களின் கட்டளைகளை கேட்கும்போது, இளமையான, அழகிய ஆடைகளை உடல் உடுத்திக்கொண்டு, ஆரோக்யமும், பொலிவும் பெறும்!

நோயும், ஆரோக்யமும், சூழ்நிலைகளைப் போலவே தங்கள் வேர்களை எண்ணத்தில் ஊன்றியுள்ளன. நோயுற்ற எண்ணங்கள், நோயுள்ள உடலாக தங்களை வெளிப்படுத்துகின்றன.

பய எண்ணங்கள், ஒரு துப்பாக்கி ரவையின் வேகத்தில், ஒரு மனிதனை நிச்சயமாகக் கொல்லும்.

ஆயிரக்கணக்கான மக்கள் வெகு நிச்சயமாக பய எண்ணங்களால் தினந்தோறும் சாகிறார்கள்!

நோய் வந்துவிடுமோ என்று அஞ்சுபவர்களுக்கே நோய் வந்து சேர்கிறது!

பயம் கலந்த பரபரப்பு, உடலை நம்பிக்கை இழக்கச் செய்து நோய் உள்நுழைய கதவுகளை திறந்து வைக்கிறது.

சுத்தமற்ற எண்ணங்கள், அவை செயலாக உடனடியாக வெளிப்படாவிடினும், நரம்பு மண்டலத்தை வலுவிழக்கச் செய்கின்றன.

வலிமையான, தூய்மையான, மகிழ்ச்சியான எண்ணங்கள், தேஜஸ் பொருந்திய, வலுவான உடலாக வளர்ச்சி அடைகின்றன.

நம் உடல் என்பது, பிளாஸ்டிக் பொருட்களைப்போலவே மிக மென்மையான மாறுதலடையும் தன்மையுடையது.

உடல், தான் சிலிர்ப்படையும் எண்ணங்களால் உடனே ஈர்க்கப்படுகிறது.

எனவே, எண்ணப் பழக்கங்கள், அவை நல்லவையோ, கெட்டவையோ, தம் சொந்த தாக்கங்களை உடலின்மீது ஏற்படுத்துகின்றன.

சுத்தமற்ற தொடர் எண்ணங்களை ஒருவன் பழகி வரும்வரை, அவன் உடலில் ஓடும் ரத்தத்தில் அசுத்தமும், விஷத்தன்மையும் குறையாது.

சுத்த இருதயத்திலிருந்து சுத்த வாழ்க்கையும் பரிசுத்த உடலும் பிறக்கின்றன.

கொடும் எண்ணங்கள் கொண்ட மனதிலிருந்து, கொடிய வாழ்க்கையும், ஊழல் நிறைந்த உடலும் பிறக்கின்றன.

செயல், வாழ்வு, மற்றும் உன்னத அவதாரத் தன்மை இவையனைத்தும், எண்ணம் எனும் ஊற்றிலிருந்தே உருக்கொள்கிறது.

ஊற்று பரிசுத்தமானால், மற்றதெல்லாம் பளிங்குபோல் பிரகாசிக்கும்!

ஒருவன் தன் நிலை மாறவேண்டும் என்று விரும்பினாலும், எண்ணங்களை மாற்றிக்கொள்ளாமல் உணவுப் பழக்கத்தைமட்டும் மாற்றினால் பயனில்லை.

நாம் நம் எண்ணங்களை தூயதாக மாற்றிக்கொள்வோமேயானால், சுத்தமற்ற உணவு வகைகளை நம் உடல் விரும்பாது!

தூய எண்ணங்கள், தூய பழக்கங்களை உருவாக்குகின்றன. தூய உடல்நிலை பெறாதவன், துறவியாக முடியாது.

தன் எண்ணங்களை தூய்மையாகவும் வலிமையாகவும் வைத்திருப்பவன், கிருமிகளின் விஷத்தன்மைபற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

உன் உடலை கட்டுடலாய், நோயற்றதாய் வைக்க விரும்புகிறாயா? உன் எண்ணங்களை எச்சரிக்கையுடன் காத்துக்கொள்!

உன் உடலை புதுமைப்படுத்த விரும்புகிறாயா? முதலில் உன் மனதை அழகுபடுத்து!

கேடுகெட்ட, பொறாமை மிகுந்த, ஏமாற்றம் நிறைந்த எண்ணங்கள், உடலிலிருக்கும் ஆரோக்யத்தையும், கம்பீரத்தையும் நிச்சயமாக திருடிச் சென்றுவிடுகின்றன.

தொங்கிப்போன வருத்தமான முகம், ஏதேச்சையான ஒன்றல்ல. அது வருத்தமான தொடர் எண்ணங்களால் ஏற்பட்ட ஒன்றாகும்.

சுருக்கங்கள் முகத்தில் தானாக விழுந்துவிடுவதில்லை. சோக எண்ணங்களாலேயே அவை தோன்றுகின்றன.

தொண்ணூற்றைந்து வயதானாலும் ஒரு சிறுமியின் முகபாவத்தைப் பெற்றிருக்கும் பெண்மணியை நாம் சந்தித்திருக்கிறோம்.

நடுத்தர வயதைக்கூட இன்னமும் எட்டிப் பிடிக்காத நபரின் முகம் அஷ்ட கோணலாக சுருக்கம் விழுந்து காணப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

முதலாவது, இனிமையான ஒளிவீசும் எண்ணங்களின் வெளிப்பாடு!

இரண்டாவது, பயனற்ற திருப்தியற்ற எண்ணங்களின் விளைவு.

சுத்தமான காற்றையும் சூரிய ஒளியையும் தங்கு தடையின்றி அறைக்குள் அனுமதித்தாலொழிய அறை, இனிமையான சூழ்நிலையை அடையாதல்லவா?

அதைப்போலவே, வலுவான உடல், ஒளி வீசும் முகம், மகிழ்ச்சியான நடை ஆகியவற்றைப் பெற வேண்டின், மனதிற்குள் கோலாகலமான நல்ல எண்ணங்களை தங்கு தடையின்றி நுழையவிடவெண்டும் என்பது தெளிவு.

வயதானவர்களின் முகங்களில் பரிதாபத்தின் சுருக்கங்களை நாம் பார்த்திருக்கிறோம். வலிமையான சுத்தமான எண்ணங்கள் தந்த சுருக்கங்களையும் பார்க்கிறோம்.

யார்தான் அவற்றை இனம் பிரித்து பார்க்காமல் போகக்கூடும்?

No comments:

Post a Comment