கனவெனப் படுவது
மனதின் நீட்சி
அது
ஆழியளக்கும் நாழி
பொய்யில் பூத்த நிஜம்
அன்றி
நிஜத்தில் மலரும் பொய்
என் கனவுகள்
வினோதமானவை
கோளங்களற்ற பெருவெளியில்
உட்கார இடம்தேடுமொரு
பட்டாம்பூச்சியும்
வீழ ஒரு தளமின்றிப்
பயணித்துக் கொண்டேயிருக்கும்
அனாதை மழைத்துளியும்
வாரம் ஒருமுறை வந்துபோகும்
என் கனவில்
ஆயிரம்மைல் நீளத்தில்
உலகராணுவ ஊர்வலம்
அது
அலையற்ற ஒரு கடலில் முடிகிறது
ஒவ்வொரு வீரனும்
கைக்கொண்ட ஆயுதம்
கடலில் எறிகிறான்
எறிந்த ஆயுதம்
விழுந்த இடத்தில்
ஆளுக்கொரு கலப்பை
ஆளுக்கொரு ரோஜாப்பூ
மிதந்து மிதந்து மேலேறி வருகிறது
ஒருமுறை கண்டும்
மறவாத கனவிது
மேகத்தில் ரத்தம்
பூக்களில் மாமிசம்
கத்தியில் கண்ணீர்
வழிந்தன கனவில்
கண்கசக்கி விழிக்குமுன்
ஜாதிக்கலவரம்
கொம்பு முளைத்த
புலியன்று துரத்தும்
ஆற்றில் விழுந்து
சேற்றில் புதைவேன்
கிட்ட இருக்கும் மரத்தின் வேர்
என்ன முயன்றும் எட்டவே எட்டாது
எழுந்து… எழுந்து… அழுந்தி… அழுந்தி…
பரீட்சை மாதம் அதுவென்பதை
எங்ஙன்ம் அறியுமோ என் கனவு?
போக்குவரத்துக்கிடமின்றிச்
சாலைகள் எல்லாம்
தானிய மூட்டைகள்
மூட்டைகளுக்கடியில்
நசுங்கிச் செத்த பிச்சைக்காரர்கள்
பொருளாதாரமும்
புரியும் என் கனவுக்கு
மேலே
மேலே
மேலே
மேலே
பறக்கிறேன்
எங்கிருந்தோ ஓர் அம்புவந்து
இறக்கை உடைத்து இரைப்பை கிழிக்கக்
கீழே
கீழே
கீழே
கீழே
விழுகிறேன்
ஒரு கையில் வாளும்
ஒரு கையில் வீணையும் கொண்ட
பெண்ணொருத்தி
என்னைத் தன் மடியில் ஏந்திக்கொள்கிறாள்
அடிக்கடி தோன்றும்
அதிகாலைக் கனவிது
அவள்
முகம்பார்க்குமுன் முடிந்துபோகிறது
வெயிலஞ்சும் பாலைவனம்
வெறுங்காலொடொரு சிறுமி
அவளுக்கு மட்டும்
குடைபிடிக்கும் ஒரு மேகம்
அவள் நடந்தால் நகரும்
நின்றால் நிற்கும்
இன்றவள்
எங்குற்றாளோ?
என்னவானாளோ?
இன்று
இருந்தால் அவளுக்கு
இருபத்தொரு வயதிருக்கும்
ஷேக்ஸ்பியர் வீடு…
பிரம்பு வாத்தியார்…
பிரபாகரன் தொப்பி…
கம்பங்கொல்லைக் குருவி…
கலைஞர் கண்ணாடி…
ராத்திரிவானவில்…
அராபத்தின் குழந்தை…
டயானாவின் முழங்கால்…
கொடைக்கானல் மேகம்…
வீட்டில் வெட்டிய ஆட்டின் தலை…
இப்படி…
அறுந்தறுந்துவரும் கனவுகள் ஆயிரம்
கடந்த சில காலமாய்
இப்படியோர் கனவு
இமயமலை – பனிப்பாளம்
தலை இல்லாத ஒற்றை மனிதன்
ஏந்தி நடக்கிறான் தேசியக்கொடியை
அடிவாரத்தில்
கோடி ஜனங்கள் கைதட்டுகிறார்கள்
நிர்வாணம் மறைத்த கையை எடுத்து
என்ன கனவிது?
வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?
No comments:
Post a Comment