வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

இரண்டு குறுங்கதைகள்

காதல்மேஜை.

முள்கரண்டி ஒன்று வெள்ளியால் ஆன ஸ்பூன் ஒன்றை நீண்ட நாட்களாக காதலித்து கொண்டிருந்தது. இருவரும் மிக நெருக்கமாக ஒரே மேஜையில் இருந்தபோதும் ஒருவரோடு மற்றவர் பேசிக் கொள்ளவோ, அணைத்துக் கொள்ளவோ விரும்பவில்லை.


பிரிக்க முடியாதபடி தங்கள் இருவருக்கும் ஒரு பிணைப்பு உள்ளது என்றது முள்கரண்டி. ஸ்பூனோ அதை பெரிதாக கண்டு கொள்ளவேயில்லை.
மாறாக ஸ்பூன் சொன்னது ``முள்கரண்டிகள் அருவருப்பானவை. அவை எதையும் லாவகமாக கையாளுவதேயில்லை. குத்தி கிழிப்பது தான் அதன் சுபாவம்`` என்றது.


முள்கரண்டி தீராத காதலுடன் சொன்னது ``தேனில் கிடந்து ஸ்பூன்களின் குரலும் கூட இனிப்பான இருக்கிறது. அதற்காகவே காதலிக்க விரும்புகிறேன்``.


அதை கண்டு கொள்ளாத ஸ்பூன் வெல்வெட் துணியில் புரண்ட படியே சொன்னது``முள்கரண்டிகள் நிம்மதியற்றவை. அவை மூன்று நாக்குகள் கொண்டிருக்கின்றன. நடந்ததையும் நடப்பதையும் நடக்க போவதையும் ஒன்றாக குழப்பிக் கொள்ள கூடியவை ``என்றது.


அப்போதும் காதல் அடங்காத முள்கரண்டி சொன்னது ``ஸ்பூன்கள் கச்சிதமானவை. அளவுக்கு மீறி எதையும் அவை ஏற்றுக் கொள்வதேயில்லை. என்ன நளினம். என்ன ஒய்யாரம். இதற்காகவே காதலிக்க விரும்புகிறேன் ``என்றது.


ஸ்பூன் அசட்டையுடன் சொன்னது ``முள் கரண்டிகள் ஒரு போதும் சூப்பின் சுவையை அறிய முடியாது. உப்பும் சக்கரையையும் ஒரு போதும் தீண்டமுடியாது. ஐஸ்கிரீமின் குளிர்ச்சியை ஒரு போதும் உணரவே முடியாது. பாவம் அர்த்தமற்ற வாழ்க்கை. ``


அதை கேட்டு சற்றே எரிச்சலுற்ற முள்கரண்டி சொன்னது ``ஸ்பூன்கள் வெட்கமற்று மனிதர்களின் நாக்கை முத்தமிடுகின்றன. தடவி கொடுக்கின்றன. நான் ஒரு போதும் அப்படி இருப்பதேயில்லை. ``

கோபத்துடன் இரண்டும் முகத்தை திருப்பிக் கொண்டன.


வீட்டின் உரிமையாளன் உணவு மேஜைக்கு வந்து சேர்ந்தான். சூடான சூப்பிற்குள் ஸ்பூனை தூக்கிபோட்டான். முள்கரண்டியை ஆவி பறக்கும் இறைச்சியின் நடுவில் குத்தினான். இரண்டும் மௌனமாகின. பசி தீருமட்டும் சாப்பிட்டுவிட்டு எச்சில்பட்ட ஸ்பூனையும் முள்கரண்டி இரண்டும் ஒன்றாக தட்டில் போட்டு எழுந்து சென்றான்.


சுத்தம் செய்யப்படுவதற்காக இரண்டும் ஒரே தண்ணீர் வாளிக்குள் போடப்பட்டன. மிகுந்த ஆவேசத்துடன் ஸ்பூனை கட்டி தழுவியபடியே முள்கரண்டி சொன்னது.

``அன்பே இந்த நிமிசத்திற்காக தான் காத்துக் கொண்டிருந்தேன்``.


ஸ்பூனும் முள்கரண்டியும் மாறி மாறி காதலுடன் முத்தமிட்டு கொண்டன.


***


சித்திரமீன்.

ஆறு வயதிருக்கும் அந்த சிறுவன் தனியே உட்கார்ந்து தனக்குதானே பேசியபடியே கலர் பென்சிலால் படம் வரைந்து கொண்டிருந்தான்.


``ஒரு வீட்டை வரையும் போது யாருமே அங்கே இருக்கிற மீன் தொட்டியை கவனிச்சி வரையுறதேயில்லை. ``


``மீன் தொட்டியை வரையுறது ரொம்ப கஷ்டம். ``


``உலகத்திலயே தண்ணியை வரையுறது தான் ரொம்ப ரொம்ப கஷ்டம். எப்படி வரைஞ்சாலும் அது தண்ணி மாதிரியே இருக்காது. ``


``அந்த தண்ணிக்குள்ளே நீந்திக்கிட்டிருக்கிற மீனை வரையுறது முடியவே முடியாது. அந்த மீன் ஒரு இடத்தில நிக்கவே மாட்டேங்குது. எப்பாவது நின்னா அசைஞ்சிகிட்டே நிக்குது. பிறகு மீனு நினைச்சி நினைச்சி ஒடிக்கிட்டு இருக்கு. ``


``படத்தில வரைஞ்ச மீனு அசையுறதேயில்லை. அதை அசைக்கிறதுக்காக நான் தான் பேப்பரை ஆட்ட வேண்டியிருக்குது. அப்போ கூட மீன் முன்னாடி போறதேயில்லை. ``


``படத்தில் வரைஞ்ச மீன் ஏன் நீந்தமாட்டேங்குதுனு தெரியுமா அதுக்கு ஒரு மேஜிக் பிரஷ் இருக்கு. அதை வச்சி வரையணும். அப்போ அந்த மீனு நீந்தும். ``


``மீனை வரையும் போது அதோட கண்ணை வரையுறது லேசில்லை. கண்ணுக்குள்ளே என்னமோ இருக்கு. அது சுத்திகிட்டே இருக்கு. அது நம்மளை பாத்துகிட்டே இருக்கு. சிரிக்குது. மீனுக்கு நிறைய ட்ரீம்ஸ் வரும். அந்த ட்ரிம்ல அது பஸ்மேல நீந்திகிட்டு போகும். ப்ளைட் மாதிரி ஆகாசத்தில நீந்திகிட்டு இருக்கும். ``


``எனக்கு வீட்டை வரையுறது பிடிக்காது. ``

``அதுல கடல் இருக்காது``


``மரம் இருக்காது``

``பூ இருக்காது``


``அணில் இருக்காது.``


``மேகம் இருக்காது``


``சூரியன் இருக்காது. ``


``ஒரு பறவை கூட இருக்காது``


``ஒண்ணுமே இருக்காது. ``


``எனக்கு எங்க வீட்டை தவிர வேற ஒண்ணுமே வரைய தெரியாது. ``


``ஆனா வீட்டை வரையும் போது யாருமே மீன் தொட்டியை வரையுறதேயில்லை. ``


தனியே உட்கார்ந்து சிறுவன் தனக்குதானே பேசியபடியே படம் வரைந்து முடித்திருந்தான்.

***
இவை புதிதாக வெளியாகி உள்ள எனது 50குறுங்கதைகளின் தொகுப்பான நகுலன் வீட்டில் யாருமில்லை புத்தகத்திலிருந்து இரண்டு குறுங்கதைகள்.

No comments:

Post a Comment