வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

உற்சாக கதைகள்

நியாய வட்டி வாங்கி வந்தார் ஒரு கந்துவட்டி மனிதர்.

தவணை தேடி வந்துவிட்டால் சரியாக வீட்டுக்கு முன்னால் ஆஜராகிவிடுவார்.

*டேய்! என்னடா, இந்த மாத வட்டியும் தவணையும் என்ன ஆச்சு?* என்பார்.

*ஐயா, ஒரு மாசம் டைம் குடுங்கையா. எப்படியாவது, ஏந்தலையை அடமானம் வெச்சாவது கொடுத்திடறேன்* என்று கெஞ்சுவார்கள்.

*அதெல்லாம் முடியாது. ஒரு மாசம் கழிச்சு அடமானம் வெக்கப்போற தலை, இப்ப ஒங்கிட்டத்தானே இருக்கு? அதை இன்னைக்கே அடமானம் வெக்க வேண்டியதுதானே? ஒனக்கு நாலு நாள் டைம் குடுக்கறேன். அவ்வளவுதான்*

சொன்னது போலவே நாலாம் நாள் வந்து கேட்பார். பணமில்லையென்றால் வீட்டிலுள்ள சட்டி பானையை எல்லாம் எடுத்து இரக்கமில்லாமல் ஏலம் விட்டுவிடுவார்.

நாலு நாள் தவணைக்காரர் என்று பேரே வாங்கியிருந்தார்.

ஒருநாள் திடீரென்று மாரடைப்பு வந்து அவர் இறந்துவிட்டார். மேலுலகம் சென்று சேர்ந்த அவர், ஒரு பெரிய கியூ நிற்பதைப் பார்த்து, அதில் போய் நின்று கொண்டார். முன்னால் இருந்த பையனைப் பார்த்துக் கேட்டார்.

*ஐயா, எதற்காக இந்த கியூ?*

*இதுவா? மேலுலகம் வர்ரவங்களுடைய பயோ டேட்டாவைப் பார்த்து இங்கிருந்து சொர்கத்துக்கோ இல்லை நரகத்துக்கோ பிரிச்சு விடுவாங்க*

மெதுவாக நகர்ந்த அந்த கியூவில் அந்த அநியாய வட்டிக்காரர் டென்ஷனுடன் நின்று கொண்டிருந்தார்.

அவர்முறை வந்தது.

வேர்த்த உடலுடன், நடுங்கும் கைகளுடன் தன் பயோடேட்டாவை அதிகாரியின் கையில் கொடுத்தார் அவர்.

அதிகாரி படித்து முடிக்கும்வரை பயம் கலந்த ஆவலுடன் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பொறுமையாய்ப் படித்துவிட்டு நிமிர்ந்த அதிகாரி சொன்னார்.

*உங்களை சொர்கத்துக்கு அனுப்புகிறேன்*

மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போன வட்டிக்காரர் வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

*ஒரு நிமிஷம்*

நின்றார்.

திரும்பினார்.

*நீங்க தாராளமாக சொர்கத்துக்குப் போய் தங்கலாம். ஆனால் நாலு நாள் மட்டும்தான்*



எப்படி ஜெயிக்க முடியும்?

சொர்க வாசலும், நரகத்தின் வாசலும் பக்கம் பக்கமாகத்தான் இருக்கும்.

சொர்கத்தின் கேட்டை புனித பீட்டரும், நரகத்தின் கேட்டை சாத்தானும் காவல் காத்து வந்தனர்.

பீட்டரின் தலையில் ஒளிவட்டமும், சாத்தானுக்கு பச்சை வாலும் இருக்கும்.

ஏதேச்சையாக இருவர் கண்களும் சந்தித்துக்கொண்டால், சாத்தான் உறுமுவான். பீட்டர் புன்னகைப்பார்.

சாத்தான் சாபம் கொடுப்பான். திட்டுவான். பதிலுக்கு பீட்டர் அவனை வாழ்த்துவார்.

ஒருநாள் சாத்தான், புனித பீட்டரைப் பார்த்து கத்தினான். *யோவ்! மோதிப் பாக்கலாமா?* என்று முஷ்டியை உயர்த்திக் காட்டினான்.

வழக்கம்போல் பீட்டர் புன்னகை புரிந்தார்.

*யோவ், என்னைய்யா சிரிக்கறே? மோதிப் பாத்துறலாமா? சொர்கத்துக்கும், நரகத்துக்கும் மேட்ச் வெச்சுக்கலாமா?*

உடனே ஆச்சர்யத்துடன் பீட்டர் கேட்டார், *என்ன மேட்ச்?*

*அப்படி வா வழிக்கு. நாளைக்கு காலை ஒன்பது மணிக்கு, சொர்கத்துக்கும் நரகத்துக்கும் ஒன்டே கிரிக்கெட் மேட்ச். பாத்துறலாம் ஒரு கை*

பீட்டர் அதனை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. மறுநாள் வழக்கம்போல் கேட்டில் நின்றிருந்த புனித பீட்டருக்கு ஷாக்!

கிரிகெட் பேட், லெக் பேடு, ஸ்டம்ப்ஸ், பெயில்ஸ், க்ளவுஸ், கார்க் பால் எல்லாம் எடுத்துக்கொண்டு, ஒரு டீமையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டான் சாத்தான்!

சாத்தானை தனியே அழைத்து தோளில் அக்கறையுடன் கை போட்டு பீட்டர் சொன்னார்.

*நண்பனே, என்ன தைரியத்தில் எங்களுடன் கிரிக்கெட் மேட்ச் ஆட வந்தாய்? உலகத்தில் இதுவரை இறந்துபோன எல்லா நாட்டுச் சிறந்த வீரர்களும் என்னிடம் இருப்பது உனக்குத் தெரியாதா? நீ எப்படி ஜெயிக்க முடியும்?*

பீட்டரின் கையைத் தட்டிவிட்டு சாத்தான் சிரித்தான்.

*என்னோட தைரியத்துக்கு என்னைய்யா கொறைச்சல்? நான் எப்டிய்யா தோப்பேன்? ஒலகத்துல இதுவரைக்கும் செத்துப்போன எல்லா நாட்டு அம்பயர்களும் என்கிட்ட இருக்கறது ஒனக்குத் தெரியாதா?*


நாம எப்படி அரைசதம் அடிக்கலாம், பிறகு செஞ்சுரி அடிக்கலாம், நம் நாடு எப்படி ஜெயிக்கும் இதையே நினைக்கற பெஸ்ட் பிளேயர்ஸ் ஜெயிச்சுக் காட்றாங்க.

யார் க்ளெய்ம் பண்றது சரி, யார் அவுட், தேர்ட் அம்பயரைக் கேக்கலாமா அப்படின்னு பாக்கறவங்க எல்லார்கிட்டயும் கெட்ட பேர் வாங்கறாங்க.

தீர்வு இருந்தா அது சொர்கம்

ருவன் பண்ணாத அட்டூழியங்கள் எல்லாம் பண்ணிட்டு கடைசியில் எல்லோரையும் போல செத்துப் போயிட்டான்.

மேல் லோகத்துக்குப் போன அவனோட பயோடேட்டாவைப் பார்த்துட்டு, *மனுஷனே, நம்பவெச்சு கழுத்தறுக்கறது, பைனான்ஸ் கம்பெனியை கடேசி நேரத்தில் மூடிட்டு ஓடறது, பங்கு மார்க்கெட் ஊழல், மொத்தத்துல பிராடு டாட்காம் ஒண்ணு நீ ஆரம்பிக்காததுதான் பாக்கி. உனக்கு அதிக பட்ச தண்டனையாக, உன்னை நரகத்துக்கு அனுப்புகிறோம்* என்று அங்கிருந்தவங்க சொல்லிட்டாங்க.

அவன் கதறி அழுதான்.

*என்னோட தண்டனையை குறைக்கக்கூடாதா? என்மேல் இரக்கமே இல்லையா?* அப்படீன்னு கெஞ்சினான்.

*சரி, உனக்குப் பிடிச்ச பொழுதுபோக்கு ஒண்ணே ஒண்ணை நீ செலெக்ட் பண்ணலாம். அதை விளையாட உன்னை அனுமதிக்கச் சொல்றோம்* என்று சிபாரிசு கடிதம் எழுதிக் கொடுத்தார்கள்.

அவனும் நரகத்துக்குப் போனான்.

சுற்றிப் பார்த்தான்.

வித்தியாசமா எதுவுமில்லைன்னாலும், ஒரே சோம்பேறிக் கூட்டமா இருந்தது. எல்லோரும் போர் அடிச்சுப்போய் உட்கார்ந்திருந்தாங்க. ஒரு சிப்பந்தியைப் பார்த்துக் கேட்டான்.

*ஐயா, இவங்கெல்லாம்கூட என்னை மாதிரியே பிராடு கேசுங்களா?*

*ஆமாம்*

*இவங்களுக்கு என்ன தண்டனை?*

*போர் அடிக்க வைப்போம். அப்புறம் ஏதாவது இன்ட்ரஸ்டிங்கா தர்றமாதிரி பாவ்லா பண்ணி திரும்பவும் போர் அடிக்க வைப்போம். நரக வேதனையா இருக்கும்*

*அதெல்லாம் எங்கிட்ட நடக்காது. இங்க பாருங்க, சிபாரிசு கடிதம்*

*சரி, உனக்குப் பிடிச்ச விளையாட்டு எது?*

*குறுக்கெழுத்துப் போட்டி*

*அப்படியா? அந்த பீரோவைத் திறந்தீங்கன்னா, அது பூராவும் குறுக்கெழுத்துப் போட்டி புத்தகங்கள்தான். சுமார் நூறு வருஷத்துக்கு போரே அடிக்காது.*

*ஹையா* என்று பீரோவைத் திறந்து பார்த்து, புதியவன் டான்ஸ் ஆடினான்.

*ஐயா, ஒரு பென்சில் குடுத்தீங்கன்னா போட ஆரம்பிச்சுடுவேன்*

*பென்சிலா? அதெல்லம் தர மாட்டோம். போட்டி இருக்கும். ஆனா பென்சில் இருக்காது. இதுதாண்டா நரகம்* என்று சொல்லிவிட்டு, சிப்பந்தி நடையைக் கட்டினார்.

அதிசயம் நடந்தது!

ருவர் ஒரு முரட்டு டாபர்மேன் நாயை வளர்த்து வந்தார். மட்டன், பீஃப் என்று நேரத்திற்கு வைக்கும் வேலைக்காரனையே அது நெருங்க விடாது. மற்றவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அவிழ்த்து விட்டால் கால் கிலோ கறியை எடுத்துவிடும்.

அந்த நாய்க்கு ஒரு நாள் சிறிது உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. வெட்னரி டாக்டர் வந்து தூரத்தில் நின்று பார்த்துவிட்டு ஒரு மருந்து எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். மருந்து வாங்கி வந்துவிட்டார்கள். ஆனால் அதை எப்படி கொடுப்பது? உணவு கொடுப்பவனையே அது பக்கத்தில் சேர்க்காது.

வேலைக்காரன், வீட்டு ஓனரைப் பார்த்துக் கேட்டான். *ஐயா, இந்த பாட்டில் மருந்தை தினமும் ஒரு ஸ்பூன் நம்ம நாய்க்குக் கொடுக்கணுங்க. உங்களுக்கு நம்ம நாயைப் பத்தித் தெரியும். இப்ப என்னங்க பண்றது?*

*நம்ம வீட்டு சமையல்காரன், தோட்டக்காரன், வாட்ச்மேன் எல்லாரையும் கூப்பிடு. ஆளுக்கொரு காலைப் பிடிக்கச் சொல்லு. இந்த வாக்கிங் ஸ்டிக்கால வாயைத் திறந்து மருந்தை ஊத்திரு* என்றார்.

தினமும் அப்படியே செய்தார்கள். அந்த முரட்டு டாபர்மேன் நாய் அந்த ஒரு ஸ்பூன் மருந்தைக் குடிப்பதற்குள் ஒரு ரகளையே பண்ணிவிடும். சில நாட்கள் கழித்து காலை வேளையில் போர்டிகோவில் அமர்ந்து தன் நாய்க்கு மருந்து ஊட்டப்படும் *அளகை* அந்த வீட்டுக்காரர் ரசித்துக்கொண்டிருந்தார்.

நான்கு பேர் கெட்டியாய்ப் பிடித்திருந்தாலும், அந்த முரட்டு நாய் உதறியதில் நான்கு பேரும் மூலைக்கொருவராய் ஓடிவிட்டார்கள். அந்த களேவரத்தில் மருந்து பாட்டில் கீழே விழுந்து உடைந்துவிட்டது.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது!

அந்த நாய் சிமென்ட்டு தரையில் சிந்திய அரைபாட்டில் மருந்தையும் நக்கிக் குடித்துவிட்டது!

பார்த்துக்கொண்டிருந்த வீட்டுக்காரர், வேலைக்காரனைப் பார்த்து கத்தினார்.

*நாமதான்யா நாய்க்கு மருந்து பிடிக்கலைன்னு நினைச்சிட்டோம்! அதை நாம குடுத்த முறைதான் அதுக்குப் பிடிக்கலை* என்றார்.

முன்னேற்றத்துக்காக

ரு கிராமத்துல மூணு அண்ணன் தம்பிங்க.

அவங்களுக்குள்ள எப்பவும் சண்டை போட்டுக்குவாங்க. அவங்க அப்பா ஒரே ஒரு வீடுதான் கட்டி வெச்சுருந்தாரு. மூணு குடும்பமும் அந்த ஒரே ஒரு வீட்டுலதான் வாசம்.

ஒரு நாள் மூத்த அண்ணன் ரொம்பக்கோவமா ஊரைக் கூட்டி பஞ்சாயத்து வெச்சுட்டாரு. பெரியவங்க ஒக்காந்து விசாரிச்சாங்க.

*என்னோட முதல் தம்பி வீட்டுக்குள்ளயே பத்து எருமை மாட்டை கட்டி வெச்சு பால் வியாபாரம் பண்றான்* என்றார், மூத்த அண்ணன்.

*அடடா, வீட்டுக்குள்ளயேவா? மனுஷன் எப்படிப்பா குடியிருக்கறது? சரி இளைய தம்பி எப்படி?*

*அவன் இருவத்தஞ்சு ஆடுகளை வீட்டுக்குள்ளயே பட்டி போட்டு வளக்கறான்* என்றார் கோபத்துடன்.

*சரி, இதெல்லாம் எந்த வகையில ஒனக்குத் தொந்தரவா இருக்குது?*

*இவனுங்க ரெண்டு பேரும் வீட்டுக்குள்ளயே வளக்குற ஆடு மாடுங்க போடற சாணியும், அதுங்களுக்கு வெக்கற தீவனமும், கழனித்தண்ணியும் நாத்தம் குடலைப் புடுங்குது* என்றார் சோகத்துடன்.

*சரிப்பா. வீடு மூணு பேத்துக்கும்தான் சொந்தம். ஒண்ணு செய்யேன். ஒங்க வீட்டுலதான் பெரிய பெரிய ஜன்னல் இருக்கே? அதையெல்லாம் தொறந்து விட்டுடு. நாத்தமெல்லாம் போயிடும்*

மூத்த அண்ணன் அலறிவிட்டார்.

*யோவ், என்னய்யா சொல்றீங்க? ஜன்னலையெல்லாம் தொறந்துவிட்டுட்டா, நான் வளக்கற நூறு புறாக்களும் பறந்து போயிடுமேய்யா?*


ங்கைஸு! ஒன்னோட நேரம், உழைப்பு, திறமை, எனர்ஜி, முதலீடு எல்லாத்தையும் ஒன்னோட சொந்த முன்னேற்றத்துக்காக, தினம் தினம், எவ்வளவு அதிகம் அதிகமா பயன்படுத்தணும்னா, மத்தவங்க செய்யற தவறுகள் உன் கவனத்துக்கே வரக்கூடாது.

அதையெல்லாம் கவனிக்க ஒனக்கு டைமே இருக்கக்கூடாது. கருமமே கண்ணாயிருக்கணும்.


சரியா பிராக்டிஸ் பண்ணு

கால்பந்தாட்ட மைதானத்தில் ஒரே உற்சாகம்!

இரு அணிகளும் தலா இரண்டு கோல் போட்டு சமநிலையிலிருந்ததால், பரபரப்பு!

ஒரு அணியின் தலைவன், அதாவது கேப்டன் சதீஷ், ரொம்ப பதட்டக்காரன். பந்தை அருமையாய் கட் செய்து பெனால்டி ஏரியாவுக்குள் நுழைந்து கோலியை ஏமாற்றி தட்டி விட்டான்.

பந்து நேராகச் சென்று... அடடா! கோல்போஸ்டில் பட்டு ரிட்டர்ன் ஆகிவிட்டது.

சதீஷ் உடனே மண்டி போட்டு, *அடக் கடவுளே! மிஸ் ஆயிடுச்சே?* என்று உரக்கக் கத்தினான். இப்படியே பல தடவை மிஸ் ஆகி, ஒவ்வொரு முறையும் *அடக் கடவுளே! மிஸ் ஆயிடுச்சே?* என்று கத்திக்கொண்டிருந்தான்.

மேலிருந்து மேட்ச் பார்த்துக்கொண்டிருந்த கடவுளுக்குக் கோபம்.

*இவன் சரியா பிராக்டிஸ் பண்ணாம, என் பேரைச் சொல்றானே? இன்னொரு முறை சொன்னா, அவன் தலைமேல ஒரு குண்டைப் போடறேன்* என்று சொன்னதோடு நிற்காமல், அமெரிக்க கப்பல் படைத் தளத்திலிருந்து யு எஸ் எஸ் ஓஸ்லோ என்ற நீர்மூழ்கிக் கப்பலை ஆக்டிவேட் செய்து அரபிக்கடலில் கொண்டுவந்து நிறுத்தி, அதன் மாலுமிகளுடன் இப்படிப் பேசினார்.

*கேப்டன், சாதாரண குண்டு ரெடியா?*

*ரெடி*

*சரி, கட்டளையிட்டால் எத்தனை நிமிடத்தில் போய் விழும்?*

*நான்கு நிமிடங்கள். நீங்கள் விரும்பினால் 196 அணுகுண்டுகளை வெவ்வேறு ஊர்களின் மீது நான்கு நிமிடங்களில் போட முடியும்*

*வேண்டாம். ஒரேயொரு சாதா குண்டு போதும். சரி, குறி தவறும் வாய்ப்பு?*

*சான்ஸே இல்லை. *சர்க்குலர் எரர் பாஸிபிள்* ரெண்டே மீட்டர்*

*சந்தோஷம். கன்ட்ரோலை எனக்கு மாற்று. இன்னொரு தடவை என் பேரைச் சொன்னா நானே அவன்மேல் குண்டு போடுவேன்*

பூமியில் இன்னொரு கோல் மிஸ்ஸாகிவிட்டது.

சதீஷ் கத்தினான்.

*அடக்கடவுளே! கோல் மிஸ் ஆயிடுச்சே?*

கடவுள் கோபத்தில் பட்டனை அமுக்கிவிட்டார்!

சாதாவகை குண்டு, லேசாக டிராஜக்டரி மாறிப்போய், வங்காள விரிகுடா கடலில் போய் விழுந்தது.

*அடக்கடவுளே! மிஸ் ஆயிடுச்சே?* என்று கடவுள் கத்தினார்!

கரடி வேட்டை

டிகர் சல்மான்கானிடம் ஆங்கைஸ்னெட் கொஞ்ச நாள் வேலை செய்துகொண்டிருந்தான். ஆனால் சனிக்கிழமை இரவு மட்டும் ரெண்டு பேரும் எலியும் பூனையும்தான்.

ரெண்டு பேரும் ஆளுக்கொரு துப்பாக்கிய எடுத்துக்கிட்டு காட்டுக்குள்ள வேட்டைக்குப் போயிருவாங்க.

வேட்டைன்னு வந்துட்டா, காட்டுக்குக் கிளம்பிட்டா, முதலாளி தொழிலாளிங்கறதை மீறி ரெண்டு பேருக்கும் நடுவே போட்டி வந்துடும்.

சல்மான் எப்பவும் இடதுபக்கம் காட்டுக்குள்ள போவாரு. ஆங்கைஸ் வலது பக்கம் போவான்.

இடது பக்கம் காட்டுக்குள்ள போன சல்மான், ஒவ்வொருமுறையும் ஒரு கரடித் தோலோட, வெற்றியோட வெளிய வருவாரு! வலதுபக்கம் போன ஆங்கைஸ், வெறுங்கையோட தோத்துப்போய் திரும்பி வருவான்.

ஒரு தடவை, சல்மானைப் பாத்து கூச்சத்தோட கேட்டான்.

*மொதலாளி, வாரா வாரம் ரெண்டு பேரும்தான் வேட்டைக்குப் போறோம். ஒங்களுக்கு எப்பவும் ஒரு கரடி கெடைக்குது. ஆனா எனக்கு? அதனால கரடி வேட்டையில இருக்கற சூட்சுமத்த எனக்கும் சொல்லிக்கொடுங்க* என்றான் ஆங்கைஸ்.

*ஆங்கைஸு, அது ரொம்ப சிம்பிள். நீ கரடியை தேடிகிட்டு காட்டுக்குள்ள போறே. ஆனா நான் குகையை தேடிக்கிட்டுப் போவேன். கரடி போயிக்கிட்டே இருக்கும். ஆனா குகை எங்கயும் போகாது*

*சரி, அப்பறம்?*

*குகையைக் கண்டுபிடிச்சதும், குகை வாசல்ல நின்னு விசிலடிப்பேன். உடனே கரடி வெளியே வரும். நெஞ்சைப் பாத்து சுட்டுடுவேன்*

*அப்பறம்?*

*அப்புறமென்ன? தோலைக்கீறி கேர்கேசைத் தூக்கிப் போட்டுட்டு, புசுபுசுன்னு தோலை மட்டும் எடுத்துப் போர்த்திகிட்டு வந்துடுவேன்*

*மொதலளி, இன்னைக்கு நானும் இந்த டெக்னிக்கை யூஸ் பண்றேன்* என்றான் ஆங்கைஸ்.

திங்கக்கிழமை காலையில ஆபீசுக்கு வந்து உக்காந்த சல்மான்கான் கேட்டாரு, * எங்கய்யா ஆங்கைஸு?*

*அவுரு ஆஸ்பத்திரியில இருக்கார் ஸார்*

காரை எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு வந்த சல்மான், வார்டுக்குள் நுழைந்ததும் அதிர்ந்துவிட்டார்.

*ஹேய், என்னய்யா இது, ஈஜிப்ஷியன் மம்மி மாதிரி ஒடம்பு பூரா பேண்டேஜ்? என்ன ஆச்சு? என்ன பண்ணே? குகையைத் தேடிக் கண்டுபிடிச்சியா?*

*தேடினேன். கெடச்சது*

*அப்பறம்?*

*குகை முன்னாடி நின்னு விசில் அடிச்சேன்*

*என்ன வந்தது?*

*ட்ருவேண்ட்ரம் எக்ஸ்பிரஸ் ட்ரெயின் வந்தது*


ஸ்பத்திரியில படுத்திருக்கும்போதுதான் ஆங்கைஸுக்கு ஒண்ணு புரிஞ்சது.

என்ன பண்ணணுங்கறதைவிட முக்கியமானது, அதை எங்க நின்னு பண்ணணுங்கறது!

கிளிக்கு இருக்கும் தைரியம்

ந்த இளைஞன் கொஞ்சம் பதட்டத்துடன் இருந்தான். இருக்காதா பின்னே?

முதன்முதலாக விமானப் பயணம், சஞ்சிகைகள், தனித்தனியே டெலிவிஷன், பிடித்த உணவுகள், பாதுகாப்பு பெல்ட், தேவதை போல் ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் பிரமிப்பாக இருந்தது.

விமானம் கிளம்பப் போகும் நேரம். யாரோ வி. ஐ. பி வருவதாக திடீரென்று பரபரப்பு!

அரண்மனைக் காவலர்கள் போல் உடையணிந்த இருவர், ஒரு தங்கக் கூண்டை இளைஞனின் பக்கத்தில் வைத்தனர். கூண்டைத் திறந்துவிட்டனர்.

உள்ளிருந்து கம்பீரமாக ஒரு கிளி வெளியே வந்து பந்தாவாக பக்கத்து சீட்டில் அமர்ந்துகொண்டு, *சரி, நீங்க போலாம். சும்மா ஊரைச் சுத்தாம அரண்மனைக்குப் போங்க* என்றது அந்தக் கிளி!

இளைஞனுக்கு ஒரே ஆச்சர்யம்!

நார்மல் ஆல்ட்டியூடில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அந்த இளைஞன், *ஹ...உம்...மிஸ், எக்ஸ்யூஸ் மீ, பிளாக் காஃபி ஒரு கப் கிடைக்குமா?* என்று தயங்கித் தயங்கிக் கேட்டான்.

*இதோ* என்று போன பணிப் பெண் வரவேயில்லை.

*ஏய், யாரங்கே, இன்னும் ஒரே நிமிடத்தில் ஒரு மிளகாய்ப் பழமும், கிரேப் ஜூஸும், என் முன்னே வராவிட்டால், இந்த விமானக் கம்பெனியின் மீது கேஸ் போட்டுவிடுவேன்* என்று அந்தக் கிளி கத்தியதுதான் தெரியும், ஒரே நிமிடத்தில் கிளி கேட்டது வந்துவிட்டது.

இளைஞனுக்கோ பசி!

*ஹலோ, தயவு செய்து ஒரு ஸாண்ட்விச் மற்றும் நூடுல்ஸ் எனக்கு வேண்டுமே?* என்று திரும்பவும் பணிப்பெண்ணை அழைத்துக் கேட்டான். போனவள் வரவேயில்லை.

*ஏய், எனக்குப் பசிக்குது. பழங்கள் வேணும். ரெண்டு நிமிஷத்துல வரலேன்னா, உன்னை வேலையை விட்டுத் தூக்கிடுவேன்* என்று கத்தியது கிளி. ரெண்டாவது நிமிடம், பழங்கள் உள்ளேன் ஐயா என்றன!

பார்த்தான் அந்த இளைஞன். சரி, நாமோ புதுசு. விமானத்தில் மிரட்டிக் கேட்டால்தான் எதுவும் கிடைக்கும் போலிருக்கிறது. ஒரு கிளிக்கு இருக்கும் தைரியம் கூடவா நமக்கு இல்லாமல் போய்விட்டது?

எழுந்து நின்று கத்தினான்.

*ஏய், ஏர் ஹோஸ்டஸ்! மூணு நிமிஷம் டைம் தர்ரேன். நான் முன்னாடி கேட்டதெல்லாம் வர்லேன்னா, கேஸ் போட்டு எல்லாரையும் உள்ள தள்ளிடுவேன், ஜாக்கிரதை* என்று சொல்லிவிட்டு, கிளியை பெருமையாகப் பார்த்துவிட்டு உட்கார்ந்தான்.

அடுத்த நிமிடமே ஏர் ஹோஸ்டஸ், கோ பைலட்டைக் கூட்டி வந்து விட்டாள்.

பைலட் கேட்டார்.

*யார் உன்னை மிரட்டியது?*

*இந்த ரெண்டு பேரும்தான்*

பைலட், அந்த இளைஞனுடைய சட்டையைக் கொத்தாகப் பிடித்தார். மற்றொரு கையில் அந்தக் கிளியைப் பிடித்தார்.

தரதரவென்று பாராஷூட் எக்ஸிட்டிற்கு இழுத்துச் சென்றார்.

இருவரையும் வெளியே தள்ளிவிட்டார்!

இரண்டு பேரும் ஒன்றாகக் கீழே வந்து கொண்டிருந்தார்கள்.

கிளி, இளைஞனை பெருமிதத்துடன் பார்த்தது!

*சபாஷ் தம்பி! எனக்கு உன்னைப் பாத்தா ஆச்சர்யமா இருக்கு. உனக்கோ பறக்கத் தெரியாது. இருந்தாலும் தைரியமா எதிர்த்துப் பேசினியே?* என்று சொல்லிவிட்டு...



பறந்து போய் விட்டது!!

கோதாவுல எறங்கிடு!

ரு விவசாயி, புத்தி யுக்தி சக்தியோடு ஒழைச்சு தன் சிறு வயலை, பெரிய விவசாய பூமி ஆக்குனாரு. உழைப்பு, சுத்தம் இது மேலயெல்லாம் அவருக்கிருந்த நம்பிக்கை அதீதமானது.

பலவகை பழமரங்கள் அடங்கிய பெரிய தோப்பும் அவருக்கு இருந்தது. தன் வீடு, தோப்பு, வயல்கள் எல்லாத்தையும் தன் மகன்கிட்ட ஒப்படைச்சுடணும், அதை மேலும் செம்மைப்படுத்த மகனுக்கு ஏற்ற மருமகள் வேணும்னு யோசனை செஞ்சாரு.

மகனுக்கு பெண் பார்க்க ஆரம்பிச்சாரு. பெரிய நிலச்சுவாந்தாரருங்கறதால பணக்காரர்கள் எல்லாம், என் பொண்ணைத் தர்றேன்னு போட்டி போட்டாங்க. விவசாயியும் பெண்ணைத் தனியாக் கூப்பிட்டு, *ஏம்மா, உனக்குப் பண்ணை வேலையெல்லாம், அதாவது மாட்டைப் பாத்துக்கறது, பழங்கள் சேகரிக்கறது, களை பிடுங்குறது, மேலும் இது போல வேலை செய்யறவங்களுக்கு வேலை சொல்றது, இதெல்லாம் தெரியுமா?* என்றார்.

*என்னாது? பண்ணை வேலையா? என் அப்பா என்னைப் பூவைப் போல வளர்த்தார் தெரியுமா?* என்றாள் அந்தப் பெண்.

சோர்ந்து போய் திரும்பி வந்த பண்ணையார், குணமுள்ள, எடுத்துக்கட்டி கோதாவில் இறங்கி வேலை செய்யுற மருமகளை எப்படிக் கண்டுபிடிக்கறதுன்னு யோசிச்சாரு.

றுநாள் ஒரு டிராக்டர் நெறைய மாம்பழம் மற்றும் கொய்யாப் பழங்களை ஏத்திக்கிட்டு பக்கத்து ஊர்ச் சந்தைக்குப் போனாரு. வண்டி நின்றவுடன் விவசாயி சைகை செஞ்சாரு. ஒடனே வேலைக்காரன் ஒரக்கக் கத்தினான்.

*எல்லோரும் ஓடியாங்க. எங்க முதலளி குப்பையிலேர்ந்து உரம் தயாரிக்கற தொழிற்சாலை ஆரம்பிக்கறதால, அவங்கவுங்களால முடிஞ்ச குப்பையை அள்ளிக்கிட்டு வந்து குடுத்துட்டு மாம்பழத்தையும், கொய்யாப் பழத்தையும் வாங்கிகிட்டு போலாம்* ன்னு கத்தினான்.

*என்னது? குப்பையைக் குடுத்தா பழமா?* ன்னு ஆளாளுக்குப் பறந்துகிட்டுப் போய் கூடை கூடையா குப்பையைக் கொண்டுவந்து குவிச்சிட்டு, டஜன் டஜனா பழங்களை அள்ளிக்கிட்டுப் போனாங்க! கொஞ்ச நேரத்துல பழங்கள் எல்லாம் தீர்ந்துடுச்சு. டிராக்டர் புறப்பட்டது.

ஒரு இளந்தாரிப் பொண்ணு மூச்சிறைக்க ஓடி வந்துச்சு!

*ஐயா, இந்தாங்க குப்பை! பழம் குடுங்க*

*என்னம்மா இது? பழமெல்லாம் தீர்ந்தபிறகு கொஞ்சூண்டு குப்பையைக் கொண்டு வந்திருக்கே?*

*ஐயா, ஊருக்குள்ள எல்லாரும் பழம் திங்கறாங்க. என் வீட்டுல குப்பையே இல்லே. இந்தக் கொஞ்சூண்டு குப்பையைக்கூட பக்கத்து வீட்டுல கடனா வாங்கிட்டு வந்தேன். ரெண்டு பழமாச்சும் குடுங்கய்யா* என்றாள்.

*ரெண்டென்ன மருமகளே! பழத் தோப்பே உனக்குத்தான்!* என்று டிராக்டரில் ஏற்றிக் கொண்டார் அந்த விவசாயி.

வெற்றிச் சூழ்நிலை

ரு ஒட்டகமும் அதன் குட்டியும் இப்படி பேசிக்கொண்டிருந்தன.

*அம்மா, எல்லா மிருகங்களுக்கும் கண் இரப்பை அழகா இருக்கே, நமக்கு மட்டும் ஏம்மா இப்படி அசிங்கமா தொங்குது?*

*அதுவா? நாம பாலைவனத்துல போகும்போது மணல்காத்து அடிச்சு நம் கண்ணுல மண் விழக்கூடாது இல்லையா? அதுக்காக*

*சரி. எல்லா மிருகத்துக்கும் கால் குளம்புகள் சின்னதா, அழகா இருக்கே, நமக்கு மட்டும் ஏம்மா அகலமா, நடுவுல ஒரு ஜாயிண்ட்டோட இருக்கு?*

*அது ஏன்னா பாலைவனத்து மணல்ல நாம நடக்கறப்ப கால் புதைஞ்சிடாம இருக்கறதுக்குத்தான்*

*ஓஹோ! ஆனா நமக்குமட்டும் வயித்துல ரூம் கட்டி குடம் குடமா தண்ணி குடிக்கறோமே ஏம்மா?*

*அது ஏன்னா, பாலைவனத்துல எப்பவாவது கிடைக்கற தண்ணிய ஸ்டோர் பண்ணி வெச்சுக்கத்தான்*

*அதெல்லாம் சரிம்மா, பாலைவனத்தை சமாளிக்கற இவ்ளோ டிசைன்களோட நம்மை ஆண்டவன் படைச்சிருக்காரே, நாம இந்த வண்டலூர் பூங்காவுல, கூண்டுக்குள்ள உக்காந்துகிட்டு, என்னம்மா பண்ணிகிட்டிருக்கோம்?*

*நெசந்தான் ராசா! கடவுள் அல்லது இயற்கை, நம்ம எல்லோரையும் ஜெயிக்கறதுக்கு உண்டான எல்லா டிசைனோடயும்தான் படைச்சிருக்கு. வெற்றிச் சூழ்நிலையை மட்டும் நாமதான், நாமளேதான் முடிவு செய்யணும். உருவாக்கணும். கூண்டுக்கு வெளியேர்ந்து நம்மளை வேடிக்கை பாக்கறாங்களே இந்தக் குட்டிப் பசங்க, அவங்களுக்கும் இது பொருந்தும்*

உங்க வெற்றி மேடை

ரு அருமையான பள்ளியில் ஆசிரியை குழந்தைகளுக்கு அழகழகான பாடல்களை போதித்துக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனி நாற்காலி. குழந்தைகள் அனைவரும் நின்றபடியே கைகளையும் கால்களையும் அசைத்து மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று பள்ளியில் தோட்ட வேலை செய்பவன் வகுப்பறைக்குள் ஓடி வந்தான்!

*டீச்சர்! ஆபத்து! தோட்டத்தில் ஒரு நல்ல பாம்பைப் பார்த்தோம். அதை அடிப்பதற்காக துரத்தியபோது தப்பித்து வராண்டாவிற்கு வந்துவிட்டது. அது இந்த கிளாஸ் ரூமிற்குள் நுழைவதை என் ரெண்டு கண்ணாலும் பார்த்தேன்* என்றான்.

*யோவ்! என்னய்யா சொல்றே?*

*என்னத்தைச் சொல்றது? ஆறடி நீளமுள்ள நல்ல பாம்பு இந்த ரூமுக்குள்ள இப்ப இருக்கு. எப்படியாவது குழந்தைகளை காப்பாத்துங்க* என்று பாம்பை தேட ஆரம்பித்துவிட்டான்.

டீச்சர் ரொம்ப சுறுசுறுப்பு! யூகேஜி செல்லக் குழந்தைகளைப் பார்த்துக் கத்தினார்.

*எல்லோரும் அவங்கவுங்க சேர் மேல ஏறி நில்லுங்க! கமான் குவிக்! பிளாஸ்டிக் சேர் மேல ஏறிக்கிட்டீங்கன்னா, பாம்பால மேல வர முடியாது. ஊம்! சீக்கிரம்*

உடனே குழந்தைகள் அனைவரும் அவரவர் பிளாஸ்டிக் சேர்களின் மீது ஏறி நின்று கொண்டார்கள். டீச்சர் நிம்மதிப் பெருமூச்சு விட்டு திரும்பினால்.... ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இன்னமும் தரைலேயே நின்று அழுது கொண்டிருந்தது.

*ஏய் சுஜாதா! டீச்சர் சொன்ன பேச்சைக் கேக்கணும். கமான்! ஏறு சேர்மேல!*

*முடியாது டீச்சர்!*

*ஏம்மா முடியாது?*

*என் சேர் மேலதான் நீங்க நின்னுகிட்டிருக்கீங்களே!* என்றாள் சிறுமி சுஜாதா.

ங்க வெற்றி மேடைமேல ஆர்வக்கோளாரினால் உங்களைச் சேர்ந்தவங்களே சில சமயம் ஏறி நின்னுருக்காங்கதானே?

அதை இப்ப இருக்கற பெற்றோர் தவிற்கலாமே? அவனோட, அவளோட சேரை விட்டு மொதல்ல இறங்குங்க!

எங்க கல்வி நிறுவனத்துல, அவனோட அப்ளிகேஷனைக் கூட அவனையே நிரப்ப எந்த பெற்றோர் விடறாங்க?


ஆந்தைக்கு நன்றி!

ரிட்டையரான ஒருவர் காலையில் வாக்கிங் போய்க்கொண்டிருந்தார். ஒரு குறுகலான வளைவில் திரும்பியபோது எதிரே பார்த்து அதிர்ந்துவிட்டார்!

காலில் சக்கரம் அணிந்து ஒரு இளைஞன் படு வேகமாக வந்து கொண்டிருந்தான். சட்டென்று நகர்ந்து வழிவிட்ட அந்தப் பெரியவர், *ராஸ்கல்! இப்படியா எதிரே யாராவது வராங்களா இல்லையான்னுகூடப் பாக்காம வேகமா வர்றது? வாடா இங்கே!* என்றார்.

அந்த ஸ்கேட்டிங் இளைஞன் ஸ்டைலாக ஒரு வட்டமடித்து பக்கத்தில் வந்தான். அப்போதுதான் அந்தப் பெரியவர் அவன் தோளில் ஒரு பெரிய ஆந்தை அமர்ந்திருப்பதைப் பார்த்தார்.

*எ...என்னப்பா இது?*

*இது காட்டு ஆந்தை. தவறிப்போய் ஊருக்குள்ள வந்து பகல்ல நாய்கிட்ட மாட்டிக்கிச்சு. ஒரு ரெக்கை போயிருச்சு. நல்ல வேளை நான் காப்பாத்தி மருந்து போட்டேன். ஆனா இதுக்கு பறக்கணும்னு ரொம்ப ஆசை. ஒரு பக்க ரெக்கை இல்லாம எப்படிப் பறக்கும்? அதனால, தெனோம் காலைலயும் சாயங்காலமும் இதை தோள்ள வெச்சுகிட்டு வேகமா ஸ்கேட்டிங் பண்ணுவேன். அதுக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா?*

*தம்பி! நீ இந்த ஆந்தைக்கு செய்யற உதவி மகத்தானதுப்பா. அடுத்த ஜென்மத்துல இந்த ஆந்தை கட்டாயம் இதுக்கு நன்றிக்கடனை உனக்குச் செய்யும்* என்று நெகிழ்ந்துபோய் சொன்னார்.

*ஹ......! நன்றிக்கடனா? அடுத்த ஜென்மத்துலயா? நான் ஆறு மாசத்துக்கு முன்னாடி 90 கிலோ வெயிட் இருந்தேன். ரத்தக் கொதிப்பு வேற. இப்போ 70 கிலோதான் இருக்கேன். ஜிம்முக்குப் போற வேலை மிச்சம். நாந்தான் சார் ஆந்தைக்கு நன்றி சொல்லணும்* என்று சொல்லிவிட்டு, வழுக்கிக்கொண்டே வேகமாகப் போய்விட்டான்.

நாம பிறருக்கு செய்யற உதவியினால நமக்குத்தான் அதிக நன்மை. அடுத்தவங்க கஷ்டத்தை அவங்க ஷூவில நின்னு, அவங்க கண்ணாடி வழியாப் பாத்து உதவி பண்ணாத்தான் நம்மளோட ஸெல்ப் எஸ்டீமை நாம உயர்த்திக்க முடியும்.


காசு கிழங்குச் செடி

கிராமத்தில் முதியவர் ஒருவர் இருந்தார். அவரோட பையன்க பொண்ணுங்க எல்லாம் டவுண்ல குடும்பத்தோட இருந்தாங்க.

கோடை விடுமுறையில் பேரன் பேத்தி பட்டாளம் தாத்தா வீட்டுக்கு வந்துடும். ஒரே ஜாலிதான்.

அந்த வருஷமும் சுமார் பத்து குழந்தைங்க கிராமத்து வீட்டுல டேரா போட்டாங்க. அத்தனை குழந்தைகளும் விளையாட வீட்டுக்கு முன்னால இடமில்லை. பார்த்தார் தாத்தா.

*என் செல்லக் கட்டிங்களா! வீட்டுக்குப் பின்னாடி ஒரு மைதானமே இருக்கு. அங்கு இருக்கிற பார்த்தீனியம் கள்ளிச் செடிங்களை எல்லாம் பிடுங்கி சுத்தப்படுத்திட்டு அங்க விளையாடுங்க* என்றார்.

*போ தாத்தா. அவ்ளோ செடியையும் பிடுங்கினா கை வலிக்கும்* என்று வீட்டுக்குள்ளேயே கேரம் போர்ட், செஸ் என்று கும்மாளம் போட்டார்கள்.

இரவு படுக்கும்போது தாத்தா யோசித்தார். நைசாக எழுந்து டார்ச்லைட், இரும்புக் கம்பி, சில்லறைக் காசுகள் சகிதம் புழக்கடைக்குப் போனார். பத்தடிக்கு ஒரு செடி வீதம் பிடுங்கி, அதோட வேர்ல ஒரு காசை கட்டி வெச்சுட்டார். மறு நாள் காலை எழுந்தவுடனே,

*பசங்களா! சந்தைக்குப் போகலியா?*

*காசு வேணுமே?*

*பிள்ளைங்களா! நம்ம தோட்டத்துல காசு கிழங்கு செடி நிறைய இருக்கு. அதைப் பிடுங்கி அவங்கவுங்களுக்குக் கிடைக்கற காசை எடுத்துக்கிட்டுப் போய் சந்தைல செலவு பண்ணுங்க*

*அது என்ன தாத்தா காசு கிழங்குச் செடி?*

*போய்த் தேடிப் பாருங்க*

அம்பது செடி பிடுங்கினால் ஒரு செடியில் ஒரு ரூபாய் இருந்தது. கேட்க வேண்டுமா? அரை மணி நேரத்தில் மைதானமே காலி! எனக்கு ஆறு ரூபா, எனக்கு எட்டு ரூபா என்று ஒரே அமளி, கொண்டாட்டம்!

ன்று இரவு பிள்ளைகள் தூங்கிவிட்டனர். தாத்தா ஆதூரத்தோடு தன் செல்லப் பேத்தியின் கையை எடுத்துப் பார்த்தார். கீறலும் காய்ப்பும் கட்டிப் போய், லேசாக வீங்கியிருந்தது.

தாத்தாவுக்குக் கண் கலங்கிவிட்டது.

*ஏன் தாத்தா அழுவரே?*

*கண்ணு, நம்ம வேலையை நாமளே செய்யணும், மகாத்மா காந்தி சொன்ன *ரொட்டிக்கான உடலுழைப்பு*ங்கறது டவுண்ல இருக்கற என் தங்கங்களுக்கும் புரியணும்கறத்துக்காகதான் கூலிக்காரங்களை விடாம இப்படி உங்களை ஏமாத்தினேன். அது சரிம்மா. கை வலிச்சாலும் எப்படிம்மா தொடர்ந்து பிடுங்கினே?*

*தாத்தா, ஒரு ரூபா கெடச்சதும், காசு கெடைக்கப்போற சந்தோஷத்துல, வலியே தெரியலை! அதாவது, கெயின் கெடைக்கப்போற மகிழ்ச்சியில பெயின் தெரியலை! இதெல்லாம் உனக்குப் புரியாது, நீ போய்த் தூங்கு தாத்தா*


ஜெயிச்சுக் காட்டுங்க.

ன் பங்களாவோட புல்தரையை ஒரு பணக்காரர் புல் வெட்ற மெஷினை வெச்சு சமப்படுத்திக்கிட்டு இருந்தாரு. வீட்டுக்குள்ள அவர் மகன் சிப்ஸ் கொறிச்சுக்கிட்டு டிவி பார்த்துக்கிட்டு இருந்தான்.

திடீர்னு புல் தரையிலேயிருந்து *கீச் கீச்* ன்னு சத்தம்! உத்துப் பார்த்தா ஒரு அழகான குருவிக்குஞ்சு, கலர் கலரா இறகு பாதி முளைச்சும் முளைக்காம தத்தித்தத்திக்கிட்டு இருந்தது.

அதை அன்போட எடுத்து, ஒரு க்ரோட்டன்ஸ் புதர்மேல விட்டுவிட்டு திரும்பவும் புல்வெட்ட ஆரம்பிச்சாரு. கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் *கீச், கீச்* சத்தம். புல் தரையில இன்னொரு குருவிக்குஞ்சு! மேலே பாத்தாரு.

என்ன ஆச்சர்யம்! மூன்றாவது குருவிக்குஞ்சு கூட்டின் ஓரத்தில் தடுமாறிகிட்டு இருந்தது! தாய்க் குருவி அதைத் தன் காலால் நெட்டித் தள்ளியது. மூன்றாவது குருவிக்குஞ்சும் பரிதாபமாகக் கீழே வந்து விழுந்தது.

அந்தப் பணக்காரர் கிழே இருந்த ஜீவனைப் பார்த்தார். மேலே கூட்டில் இருந்த தாய்ப்பறவையைப் பார்த்தார். க்ரோட்டன்ஸ் செடியின் மீது இருந்து பறப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த முதல் ஜீவனையும் பார்த்தார்.

வேகமாக நடந்தார். வீட்டின் முன்னால் நின்று இரண்டு கைகளையும் இடுப்பின்மீது வைத்துக்கொண்டு கத்தினார்.

*டேய், ஆங்கைஸு! இங்கப் பாருடா!*

*டாடி, மேட்ச் பாக்கறப்ப டிஸ்டர்ப் பண்ணாதீங்க. என்ன? புதுசா கத்த ஆரம்பிச்சிருக்கீங்க?*

*டேய், மரியாதையா டிவியை ஆஃப் பண்ணிட்டு ஒரு வேலைக்குப் போடா* என்றார் உறுதியுடன்.

றவைகளோட வாழ்க்கையில, மைக்ரேஷன், எரானா டிஸ்பிளேமென்ட்ஸ் இது மாதிரி, *பூட்டிங் தி பேபி பேர்ட்*, அதாவது பாதி ரெக்கை மொளச்சவுடனே கூட்டிலிருந்து தொரத்தி, வாழ்க்கைக்கு தயார் பண்ணறதும் இயற்கையின் நியதி.

கூட்டைவிட்டு, ஸாரி, வீட்டைவிட்டு ஒங்களைத் தொரத்தறவங்களை கையெடுத்துக் கும்பிடுங்க. அது இயற்கையின் நியதி. தத்தக்கான்னு ரெக்கை அடிச்சு, கையை ஊனிக் கரணம் போட்டு ஜெயிச்சுக் காட்டுங்க.

ஜெயிக்கறதுக்கு என்ன பண்ணணும்?

ரு தடவை சாத்தான் இந்த உலகத்தை சுத்திப் பார்த்துட்டு அவனோட நாட்டுக்குத் திரும்பிப் போனான். சாத்தானோட வொர்க்கிங் கமிட்டி, அதாவது செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது. மிகுந்த கோபத்தோடும், மன வேதனையோடும் சாத்தான் எழுந்து பேசினான்.

*நானும் இங்கு குழுமியிருக்கும் என் தளபதிகளும், பூமியில் வாழும் அனைத்து மனிதர்களையும் கெட்டவர்களாக்க அரும்பாடுபட்டு வருகிறோம். இருப்பினும் பூமியில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் இன்னமும் நல்லவர்களாக வாழ்ந்து வருவதை என்னால் சகிக்க முடியவில்லை. இதைப்பற்றி நீங்கள் கருத்து கூறலாம்* என்று சொல்லி உட்கார்ந்தான்.

தளபதிகளுள் ஒருவன் எழுந்து வந்தான்.

*சாத்தானே! கவலையை விடுங்கள். என் பெயர் ஆசை. நான் ஒரு வீட்டில் நுழைந்தால் அதில் உள்ள எல்லோரும் ஏதாவது பொருளின்மீது ஆசைப்படுவார்கள். கிடைக்கவில்லையென்றால் திருடுவார்கள். வன்முறையில் ஈடுபடுவார்கள். இந்த ஆசை என்ற கெட்ட பழக்கத்தைக் கொண்டு மனிதகுலம் முழுவதையும் நான் கெடுத்து குட்டிச் சுவராக்குகிறேன்* என்றான்.

அனைவரும் கரகோஷம் செய்தார்கள்.

*மகிழ்சி ஆசையே! ஆனால்... என்னதான் ஆசை காட்டினாலும் அதற்கு மயங்காத சில மனிதர்கள் இருப்பார்களே? மனித குலத்தை முற்றிலுமாக, சப்ஜாடாக ஒழிக்கும் ஒரு கெட்ட பழக்கத்தை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்* என்றான் சாத்தான்.

அடுத்த கெட்ட பழக்கம் எழுந்து வந்தது.

*சாத்தானே! என் பெயர் பொறாமை. நான் ஒரு வீட்டில் நுழைந்துவிட்டேனென்றால் யார் யாரைப் பார்த்து பொறாமைப்படுவது என்ற விவஸ்த்தையே இல்லாமல் போய்விடும். தாத்தா பேத்தியைப் பார்த்து பொறாமைப்படுவார். ஒரே ரகளை ஆகிவிடும். என்ன சொல்கிறீர்கள்?* என்றான் பொறாமை.

பலமாகக் கைத்தட்டல் பெற்றாலும், சாத்தான் *நல்லது, நீ பெரும்பாலான மக்களை ஸ்பாயில் செய்வாய். ஆனால், மக்களை முழுமையாக கெடுக்கக்கூடிய ஒரு கெட்ட பழக்கம் இருந்தால் நல்லது* என்றான்.

இப்படியே காமம், அறியாமை, சோம்பேறித்தனம், கோபம் போன்ற சுமார் ஐம்பது கெட்டப் பழக்கங்கள் வந்து பேசினாலும், சாத்தானுக்கு திருப்தியில்லை. மனித குலத்தை பூண்டோடு ஒழித்துக்கட்டக்கூடிய ஒரு கெட்டப் பழக்கத்தை அவன் விரும்பினான்.

கடைசியாக ஒருவன் எழுந்து வந்தான். *ஐயா, என்னை பூமிக்கு அனுப்புங்கள். மனித குலத்தை முற்றிலுமாக ஒழித்துவிடுகிறேன்* என்றான்.

*நீ போய் என்ன செய்வாய்?*

*ஒரு வீட்டில் ஒரு பையன் படித்துக் கொண்டிருந்தால், அவனிடம் போய், என்னென்ன செய்தால் அவன் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று சொல்வேன். அதாவது பள்ளி முடித்ததும் கல்லூரி, பிறகு வேலை, சொந்தத் தொழில் என்று முன்னேறுவதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்று சொல்வேன்*

*பாவி, இதையெல்லாம் நீ சொன்னால் அவன் உருப்பட்டுவிடுவானே?* உறுமினான் சாத்தான்.

*ஆமாம். அப்படித்தான் அறிவுரை சொல்வேன். சொல்வதோடு நிற்கமாட்டேன். *டு டூ லிஸ்ட்* ஒன்று போட்டு, அவன் முன்னேற்றத்திற்கு கட்டாயம் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு நோட்டில் எழுதித்தருவேன்*

*டேய் துரோகி! ஒழிக்கச் சொன்னா வாழ வைக்க வழி சொல்றியேடா பாவி?*

*அட, ஆமாய்யா! அவன் வழ்க்கையிலயும் பணத்துலயும் ஜெயிக்கறதுக்கு என்ன பண்ணணுங்கறதை க்ளீனா ஒரு டைரியில் எழுதித்தருவேன். அந்த லிஸ்ட்டை அவன் கையில் குடுத்து, இதையெல்லாம் செஞ்சா நீ முன்னேறலாம். ஆனா, இந்தக் காரியங்களை நீ நாளைக்கு செஞ்சாப் போதும் என்று சொல்லிவிடுவேன்*

சாத்தான் எழுந்து மகிழ்ச்சிக் கூப்பாடு போட்டு, அவனைக் கட்டிப் பிடித்து குதியாட்டம் போட்டான்!

*உலகத்து மக்களை முற்றிலுமாக ஒழிக்கவல்ல சூப்பர் கெட்டப்பழக்கமே, உன் பெயர் என்ன?* என்று கேட்டான் சாத்தான்.

*நாந்தான் *ப்ரோகிராஸ்டினேஷன்*. அதாவது வேலையை தள்ளி வைக்கும் பழக்கம்*

ஜெயிக்கப் பிறந்தது!

ரொம்ப உயரத்துல வானத்தையே ஜெயிக்கற ராஜாளிப் பறவை ஒண்ணு பறந்துகிட்டு இருந்தது.

பாவம், அந்தப் பெண் ராஜாளிக்குப் பிரசவ வேதனை. வயித்துக்குள்ளே இருந்துக்கிட்டு ஒரு முட்டை யூட்ரஸை உதைக்குது. ஆச்சு! இன்னும் கொஞ்ச தூரம் பறந்தா, காட்டுல இருக்கற தன்னோட கூட்டுக்குப் போயிறலாம்னு பாத்தா, அதால தாங்க முடியலை. தன் கழுகுப் பார்வையால கீழே பூமியை நோட்டம் பார்த்தது.

அதன் கண்களில் ஒரு கிராமத்து பண்ணை வீடு தென்பட்டது. அங்கே இறங்கி, ஏற்ற இடத்தைத் தேடியது முட்டையிட. ஆஹா! வான்கோழி தன் கூண்டில் இரண்டு முட்டையிட்டிருந்தது. அதிலேயே ராஜாளியும் முட்டையிட்டுவிட்டு, *இனிமே எனக்கென்ன போச்சு* என்று பறந்து போய்விட்டது.

குஞ்சுகள் வெளிவந்து பதினைந்து நாள் ஆகிவிட்டது. ராஜாளிக் குஞ்சும் வான்கோழிகளோடு சேர்ந்து இரை பொறுக்கியது.

விவசாயினுடைய பெண், வான்கோழிகளுக்கு தானியங்கள் கொண்டு வந்து தெளித்தாள்.

ராஜாளி ஓடிப்போய் அவள் கையிலிருந்தே தைரியமாக கொத்திச் சாப்பிட்டது! மற்ற வான்கோழிகளெல்லாம் அதைக் கூப்பிட்டுத் திட்டின. *நாம வான்கோழி. மனுஷங்க பக்கத்திலயெல்லாம் நாம போகக் கூடாது*. ராஜாளிக் குஞ்சும் சரியென்று கேட்டுக் கொண்டது.

வான்கோழியெல்லாம் கூண்டுக்குள்ளேதான் படுத்துக் கொள்ளும். நம் ராஜாளி மட்டும் உயரப் பறந்து மரத்தின் மீதுதான் படுத்துக்கொள்வேன் என்றது.

பெரிய வான்கோழி, *டேய், ஒழுங்கா உள்ள வந்து படுடா. நாம வான்கோழி. மேலே பறக்கக் கூடாது*

சிறிதுநாள் கழித்து, பெரிய வான்கோழி கத்திக்கொண்டே ஓடிவந்தது.

*எல்லோரும் ஓடிப்போய் ஒளிஞ்சுக்குங்க! வானத்துல நம்மோட எதிரி வந்துக்கிட்டிருக்கான்! மாட்டினா தொலைஞ்சோம்*

எல்லா கோழிகளும் புதரில் மறைந்துகொண்டு எட்டிப் பார்த்தன.

நம் ராஜாளியும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, வானத்தில் கம்பீரமாக ஒரு ராஜாளிப் பறவை பறந்து சென்றது.

*அம்மா! அதோ அந்த வானத்து ராஜாவைப் போல் நம்மால பறக்க முடியாதாம்மா?*

*என்னதிது, அதிகப் பிரசங்கித்தனம்? வான்கோழியெல்லாம் பறக்க ஆசைப்படக்கூடாது*

தன்னை வான்கோழி என்று நினைத்திருந்த அந்த ராஜாளிப் பறவையிடம் வானத்தையே ஜெயிக்கக் கூடிய ரத்தச் சிவப்பு விழிகளும், கூரிய அலகும், வேகமும், ஊசி போன்ற நகங்களும் இருக்கத்தானே செய்தது?

ந்த ராஜாளி வானத்தையே ஜெயிக்கப் பிறந்தது!

ஆனால், தோற்பதற்காக தன்னை வளர்த்துக்கொண்டது!

வான்கோழியாகவே வாழ்ந்து, இறந்து போனது.


ஜெயிக்கறவங்க!

ரு கிராமப்புற விவசாயி தன் நிலத்தில் நிலக்கடலை போட்டார். வருடா வருடம் நிலக்கடலையை விற்றுவிடுகிறோமே, இந்த வருடம் அதனை அரைத்து எண்ணெய் எடுத்தால் என்ன என்று அவருக்குத் தோன்றியது.

எண்ணெய் எடுக்க செக்கு அமைப்பது என்றால் நிறைய பணம் வேண்டுமே? அக்கம் பக்கத்து விவசாயிகளைப் பார்த்துப் பேசினார்.

மாடுகளும், செக்கும் வாங்க பண உதவி செய்தால், அவர்கள் விளைவித்த கடலையையும் அரைத்து எண்ணெய் எடுத்துத் தருவதாக முடிவு செய்யப்பட்டது.

நிலக்கடலையும் விளைந்தது. எண்ணெயும் பிரமாதமாக வந்து கொண்டிருந்தது.

அவர் மகன் பட்டணத்தில் காலேஜில் படித்துக் கொண்டிருந்தான். லீவில் கிராமத்து வீட்டிற்கு வந்த மகனுக்கு ஒரே ஆச்சர்யம்! நிலக்கடலையிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் *அளகை* பார்த்துக் கொண்டேயிருந்தான்.

*ஏலேய் மகனே, என்ன பாக்குற?*

*அப்பா, நுகத்தடியை ஏந்திக்கிட்டு சுத்திச் சுத்தி வருதே இந்த மாடுக, இதுங்களுக்குப் போர் அடிக்காதா?*

*அதுங்களுக்கு வேலையே அதுதானே? சரி சரி வா, நாம சாப்புடப் போலாம்*

*அப்பா, இந்த மாடுகளுக்குச் சாப்பாடு?*

*கூளம் போட்டுத் தண்ணி காட்ட இன்னும் நேரமிருக்கு. நீ வா ராசா*

சாப்பிடும்போது பையன் எதையோ யோசித்துக்கொண்டிருந்தான்.

*ஏலே, என்னலே யோசனை?*

*இல்லப்பா, இப்ப நாம சாப்பிட வந்துட்டமே, மாடுக செக்கை இழுக்காம நின்னுட்டா?*

*அதெல்லாம் நிக்காதுடா. அப்படியே நின்னாலும் அதோட கழுத்துல மணி கட்டியிருக்கேன். மணிச் சத்தம் நின்னுட்டா, போய்ப் பாத்துக்கலாம். நீ சாப்புடு*

*அப்பா, அந்த மாடுக ஒரே இடத்துல இருந்துக்கிட்டு தலையை மட்டும் ஆட்டிக்கிட்டு இருந்தா நமக்கு எப்படி தெரியும்?*

*அப்படியெல்லாம் செய்யாதுடா*

*சப்போஸ் செஞ்சா?*

பொறுமையுடன் இவ்வளவு நேரம் கேட்டுக்கொண்டே, கொண்டவனுக்கும் மகனுக்கும் சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்த பையனின் அம்மா சொன்னாள், *அப்படியெல்லாம் செய்யக்கூடாதுன்னுதான் அந்த மாடுகளை ஒங்கப்பன் பட்டினத்துக்கு அனுப்பி காலேஜுல படிக்க வெக்கலை*

ஆங்கைஸு! ஜெயிக்கறவங்ககிட்ட வரிசையா பிரச்சனைகளை சொல்லிக்கிட்டே வந்தியானா, அவுங்க ஒவ்வொண்ணுத்துக்கும் தீர்வுகளைச் சொல்லி செயல்படுத்துவாங்க.

எந்தத் தீர்வைச் சொன்னாலும் அதுல ஒரு குற்றத்தைக் கண்டுபிடிக்கறவங்க, தோத்தவங்க வரிசையில போய் நிக்கறாங்க! ஒன்னிய மாதிரி!


என் முதல் பயணம் எங்கே?

ரு பெரிய ஏற்றுமதி இறக்குமதி கம்பெனியின் முதலாளி, அவருடைய உதவியாளரைக் கூப்பிட்டார்.

*நம்ம கம்பெனியோட வரவு செலவு எனக்குத் திருப்தியா இருந்தாக்கூட லாபத்துல பாதி, கப்பல் வாடகைக்கே போயிடுது. அதனால நம்ம கம்பெனிக்காக சொந்தமா ஒரு கப்பல் வாங்கிடலாம். ஏற்பாடு பண்ணுங்க* என்றார்.

புதிய கப்பலின் கேப்டன் முதலாளியை வந்து சந்தித்தார். *ஐயா, புதிய கப்பலை வாங்கி எங்களுக்குப் பணி புரிய வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி! சரி, முதல் பயணம் எங்கே?* என்று கேட்டார்.

*என் கம்பெனியின் உபரிப் பணம் பூராவும் இன்வெஸ்ட் பண்ணி இந்தக் கப்பலை வாங்கி இருக்கேன். இதோட ஸேஃப்டி ரொம்ப முக்கியம்* என்றார் முதலாளி.

*அது வந்து ஸார்...! கடல்ல போகும்போது புயல் வீசலாம். கடல் கொள்ளையர்கள் தாக்கலாம். பனிப்பாறை வந்து மோதலாம். ஏன், கப்பல் பாகங்களில் பழுது ஏற்படலாம். தேய்மானமும் ஏற்படும்* என்றார் கேப்டன்.

முதலாளி அதிர்ந்து போய்விட்டார்.

*யோவ், என்னய்யா இது? இவ்ளோ ரிஸ்க்கோட கப்பலை ஓட்ட வேண்டாம். அது துறைமுகத்துலேயே பத்திரமா இருக்கட்டும்*

*சரி ஸார். ஆனா....*

*என்னய்யா ஆனா?*

*சும்மா துறைமுகத்துல நிறுத்தினாக்கூட வாடகை கட்டியாகணும். அதுவுமில்லாம, சும்மா நிறுத்தி வெச்சா, கப்பல் பாகங்களெல்லாம் துருப்பிடிக்கும்*

முதலாளி யோசித்தார்.

*யோவ் கேப்டன், கப்பலை நிறுத்தி வெக்க வேண்டாம். கடல்ல ஓட்டுய்யா! என்னோட முதலீடு துருப்பிடிச்சுப் போறதைவிட தேய்ஞ்சு போறதே மேல்* என்றார்.



டேய் ஆங்கைஸு! நீ சும்மா இருந்தாலும் துருப் பிடிக்கத்தான் போறே. எதையாவது சாதிச்சு, திரும்பவும் ஜெயிச்சு, மறுபடியும் வின் பண்ணி, தேய்ஞ்சுதான் போயிடேன்? புகழோட!

வெற்றிப் படகு

தான் படைத்த உலகைக் கடவுள் வந்து பார்த்தார்.

ஒன்றும் சொல்லிக்கொள்கிறமாதிரி இல்லை.

கோபம் வந்துவிட்டது கடவுளுக்கு. *நான் உலகத்தை அழிக்கப்போகிறேன்* என்று உறுமினார்.

*ஐயா, கருணை காட்டுங்கள்! படைப்பின் மேன்மையைச் சிறிது விட்டுவையுங்கள்* என்று தேவதைகளெல்லாம் வேண்டிக்கொண்டன.

*சரி. உலகத்தில் யோக்கியமான ஒரு குடும்பத்தைக் கண்டுபிடியுங்கள். அவர்களை மட்டும் காப்பாற்றி, மற்றவர்களை அழிக்கிறேன்* என்றார்.

தேவதைகள் அலைந்து திரிந்து நோவா என்றொரு மனிதரை அழைத்து வந்தன.

கடவுள் சொன்னார். *நியாயமான மனிதனே! நோவாவே, உன் குடும்பத்தை முற்றிலுமாக மரத்தால் செய்யப்பட்ட, தண்ணீர் புக முடியாத, கீல் பூசப்பட்ட ஒரு படகில் ஏற்று. ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களையும் உள்ளே வைத்துக்கொள். உலகம் தண்ணீரில் மூழ்கப்போகிறது* என்றார்.

*கடவுளே, என் ஆடு மாடுகள்...* என்று பணிவுடன் கேட்டார் நோவா.

கடவுள் யோசித்துவிட்டு, *நோவா, நீ அடுத்த வாழ்வில் என்னென்ன மிருகங்கள் உலகிற்குத் தேவை என்று நினைக்கிறாயோ அவற்றிலெல்லாம் வகைக்கு ஒரு ஜோடியாக ஏற்றிக்கொள்* என்றார்.

அப்படியே செய்யப்பட்டது. பெருமழை பொழிந்து உலகமே அழிந்துவிட்டது. ஒரு மாதம் கழித்து நோவாவின் மரக்கப்பல், அராரத் என்ற மலை உச்சியில் தரை தட்டியது.

நோவா, மரக்கலத்தின் உள்ளிருந்த பறவைகள், விலங்குகள் அனைத்தையும் ஜோடி ஜோடியாக வெளியே விட்டார். கடேசியாக நோவாவும், அவருடைய மனைவியும் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள்.

நோவாவின் மனைவி நின்றாள்.

*என்னங்க, இந்த மரக் கூண்டு இப்படியே நின்னா, பிற்கால சந்ததிகள் உள்ளே எட்டிப்பாத்து, "இதுலயா நோவாவின் மனைவி ஒரு மாசம் குடும்பம் நடத்துனா?" அப்படின்னு கேலி பேசுவாங்களே? அதனால, இந்த கப்பலை அழிச்சுடுங்க* என்றாள்.

நோவா சொன்னார்...

*அது எனக்குத் தெரியாதா? அதுக்குத்தான் ஒரு ஜோடி கரையான்களை இறக்கிவிடாமல் அதுலேயே விட்டு வெச்சுருக்கேன். அதுங்க பாத்துக்கும். நீ கவலைப்படாம வா* என்றார் நோவா.


ங்கைஸு! ஒரு ஜோடி கெட்ட எண்ணம் ஒனக்கு இருந்தாப் போதும். ஒன்னோட வெற்றிப் படகை அதுங்க அரிச்செடுத்துடும்!


நன்றி


உயிர்தேடும் நினைவுகள் .காம்

No comments:

Post a Comment