வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

ஒருவன் எதை நினைக்கிறானோ..

Thought factor regarding Dreams and Goals


கனவு கண்டவர்களே இவ்வுலகத்தை காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.

எப்படி நாம் காணும் உலகம் மறைந்திருக்கும் எண்ணங்களால் நடைபெற்று வருகிறதோ, அதைப் போலவே மனிதர்களின் வாழ்வும், நடைமுறைகளும், கற்பனைத் திறன் கொண்ட கனவு காண்பவர்களின் அழகிய கனவுகளால் நிறைவேறுகின்றன.

மனித இனம் கனவாளர்களின் பங்கை மறந்துவிட முடியாது.

மனித இனம், கனவாளர்களின் கொள்கைகள் தேயவும், நோக்கங்கள் சாகவும் விட்டுவிட இயலாது.

அவை இனத்திலேயே வாழ்கின்றன.

மனித இனத்திற்குத் தெரியும். ஒரு காலத்தில் இக் கனவுகள்தான் நிஜமாக உருமாறி கண்கள் காணும்படியாக உருப்பெறப் போகின்றன என்று.

இசையமைப்பாளன், சிற்பி, ஓவியன், கவிஞன், தீர்கதரிசி, யோகி, ஆகிய இவ்வனைவரும், இனி வரும் காலத்தை அமைப்பவர்கள்.

சொர்கத்தை வடிவமைத்த சூத்திரதாரிகள்.

இன்று உலகம் அழகுடன் திகழ்கிறது என்று சொன்னால், அவர்களெல்லாம் அன்று வாழ்ந்ததாலேயே.

அவர்களில்லையேல், உலக மக்கள் துன்பத்தில் உழன்று அழிந்து போயிருப்பார்கள்.

ஒரு அழகிய கனவை, உயரிய கொள்கையை தன் இதயத்தில் ஏந்திய ஒருவன், ஒரு நாள் அது உண்மையாவதைக் காண்பான்.

கொலம்பஸ், ஒரு புதிய உலகத்தைப் பற்றி கனவு கண்டார். ஒரு நாள் அதைக் கண்டடைந்தார்.

கோபர்னிகஸ், அனேக சூரிய குடும்பங்கள் இருப்பதாக கனவு கண்டார். ஒரு நாள் அதை அனைவரும் காணும்படியாக வெளிப்படுத்தினார்.

புத்தர் கறையற்ற, தூய்மையான ஆன்மீக உலகம் ஒன்றைப் பற்றிய கனவு கண்டார். ஒரு நாள் அவர் அதில் நுழைந்து வாழ்ந்தார்.

உங்கள் கனவுகளுக்கு இன்னும் கற்பனைச் செறிவூட்டுங்கள்!

உங்கள் கொள்கைகளுக்கு இன்னும் தார்மீகச் செறிவூட்டுங்கள்!

உங்கள் மனதை நெருடிக்கொண்டிருக்கும் இனிய இசைக்கும் செறிவூட்டுங்கள்!

உங்கள் எண்ணத்தில் உருக்கொள்ளும் அழகுக்கும் செறிவூட்டுங்கள்!

உங்கள் அதி தூய எண்ணங்களை மிக அழகியதாகச் செறிவூட்டுங்கள்!

ஏனெனில், இவற்றிலிருந்துதான் மகிழ்ச்சி அளிக்கும் வாழ்க்கை முறையும், தேவலோகத்திற்கு இணையான சூழ்னிலைகளும் உருவாகின்றன!

இவற்றையெல்லாம் மிக விருப்பத்துடன் நீங்கள் செய்யும்போது, இதோ, உங்கள் உலகம் கடைசியில் உங்கள் கையில்!

விரும்புவது பெறுவதற்காக. வேட்கை கொள்வது சாதிப்பதற்காக!

மனிதனின் அடிமன விருப்பங்கள் முழு அங்கீகாரத்துடன் நிறைவேறும்போது, மிக தூய வேட்கைகள், விழைவுகள் அடையக்கூடாமல் பசித்திருக்கக் கூடுமோ?

இல்லை. அதுவல்ல சட்டம்.

*கேட்டால் கிடைக்கும்* என்பதன் அர்த்தம் அதுவல்ல.

உன்னத கனவுகளைக் காணுங்கள். அப்படிக் கனவு காணும்பொழுது, நீங்கள் அந்தக் கனவாகவே, கனவுப்படியே ஆகிவிடுவீர்கள்!

உங்கள் கனவே, எதிர்கால ஒரு நாளில் நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்பதர்க்கு, நீங்கள் உங்களுக்கே செய்து கொடுத்த சத்தியம்!

உங்கள் லட்சியக் கொள்கையே, நீங்கள் திரை விலக்கி அறிவிக்க உள்ள சாதனைகளின் தீர்க்க தரிசனம்!

எந்த ஒரு சாதனையும் முதலில் மற்றும் சில காலத்திற்கு ஒரு கனவாகவே இருந்தது.

பிரம்மாண்டமான ஆலமரம், முதலில் ஒரு சிறிய விதையில் தூங்கிக் கொண்டிருந்தது!

வானக்தை அளந்து சிறகடித்துப் பறக்கும் பறவை, முதலில் ஒரு முட்டையில் காத்துக் கொண்டிருந்தது!

ஆன்மாவின் உயரிய கனவில் ஒரு தேவதை தவித்து, துடித்துக் கொண்டிருக்கிறாள்!

இன்று உண்மையாய் வெளிப்பட்டிருக்கும் சாதனைகள் ஒவ்வொன்றிற்கும் கனவுகளே விதைகள்!

உங்களது தற்போதைய சூழ் நிலை, சகிக்க இயலாததாக இருக்கலாம்!

ஆனால், ஒரு கொள்கையை வகுத்து அதையே நினைத்து அதை அடைய முனையும்போது, சூழ் நிலை பழையது போலவே இருக்காது!

நீங்கள் *உள் மனதில்* பயணம் செய்துகொண்டே, *வெளியில்* அமைதியாக நிற்க இயலாது!

(அவன் என்பது ஒரு வசதிக்காகத்தான். அவ்வார்த்தை, இருபாலரையும் குறிக்கும்)

இதோ ஒரு இளைஞன்.

கடின உழைப்பிலும், ஏழ்மையிலும் உழலுகிறான். ஆரோக்யமற்ற வேலைச் சூழ் நிலையில் நெடு நேரம் பணியாற்ற வேண்டியுள்ளது.

படிப்பில்லை. எத்தகு நாகரீக பழக்கங்களுமில்லை.

ஆனால் அவன் நல்ல நிலைகளைப் பற்றிய கனவு காண்கிறான்.

அவன் தொடர்ந்து அறிவு, நாகரீகம், மேன்மை, அழகு ஆகியவற்றை எண்ணிப்பார்க்கிறான்.

அவன் தன் மனதில் ஒரு நல்ல வாழ்க்கை நிலையை கருக்கொண்டு வளர்த்துக் கொள்கிறான்.

பரந்த சுதந்திரமும், பெரிய வாய்ப்புகளும் கனவுகளாக அவனை ஆக்கிரமிக்கின்றன.

பரபரப்பு அவனை செயல்புரியத் தூண்டுகிறது.

உடனே அவன் தன் சிறு ஓய்வு நேரங்களையும் தன் திறமைகளையும், சேமிப்பையும், தன் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த முனைகிறான்.

வெகு வேகமாக அவன் மன நிலை மாறுவதன் காரணமாக அவன் பணிபுரியும் பணிச்சாலை அவனை பிடித்து வைக்கும் திராணியற்றுப் போகிறது.

அவன் மன நிலையும், தொழிற்சாலையும் எந்தளவிற்கு முரண்பட்டுவிட்டன என்றால், அவன் பணி புரிந்த பணிமனி, கிழிந்த துணியைப் போல் அவன் வாழ்விலிருந்து அவிழ்ந்து விழும்.

அவனுடைய விரிவடைய வேண்டும், முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடன் வாய்ப்புகள் கை கோர்த்துக் கொள்ளும்போது, அவன் முன்பு பணிபுரிந்த பணிமனை அவன் வாழ்விலிருந்து நிரந்தரமாக மறைகிறது.

ஆண்டுகள் சில கழிந்தபிறகு இந்த இளைஞனை முழு மனிதனாக நாம் பார்க்கிறோம்.

அவன் மனதின் ஆற்றலை உலக அளவில் செலுத்துவதையும், அதில் அவனுக்கு இணை அவனே என்றும் நாம் உணர்கிறோம்.

அவன் கைகளில் மிகப் பெரிய பொறுப்புகளை சுமந்து கொண்டிருக்கிறான்.

அவன் பேசுகிறான்! இதோ, பலருடைய வாழ்க்கை மாறுகிறது!

ஆண்களும் பெண்களும் அவன் வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக் கொண்டு தங்களுடைய குண நலன்களை மாற்றிக் கொள்கிறார்கள்!

பல வாழ்க்கைகள் சுற்றி வரும்படியாக அவன் ஒளி பொருந்திய நிரந்தர மையமாகிறான்!

தான் இளமையில் கண்ட கனவு நனவாகக் கண்டான்!

தன் குறிக்கோளுடன் இறண்டறக் கலந்து, தானே அதுவானான்!

எனவே இளைஞனே, இளம் பெண்ணே, நீயும் உன் கனவை ஒரு நாள் நிஜத்தில் காண்பாய்!

அது இதய பூர்வமானதாய் இருந்தால்! வெற்று ஆசை பயனற்றது.

இதய பூர்வமான கனவு, அடிப்படையானதாக இருப்பினும், அழகியதாக இருப்பினும், அல்லது இரண்டுமாக இருந்தாலும், நீ உன் இதய ஆழத்தில் மிகவிரும்பும் விழைவுகளை நோக்கி, பள்ளத்தை நாடிச் செல்லும் தண்ணீரைப் போல் சென்று சேர்வாய்!

உன்னுடைய கைகளில் உன் சொந்த எண்ணங்களின் சரிசமமான விளைவுகள் வைக்கப் படும்!

எதற்காக உழைத்தாயோ அதையே பெறுவாய்!

உன் தற்போதைய சூழல் எதுவாயினும், நீ விழுவாய், விழுந்து கிடப்பாய்! அல்லது உத்வேகத்துடன் எழுவாய்!

உன் எண்ணம் எப்படியோ அப்படி! உன் கனவு எப்படியோ அப்படி! உன் கொள்கை குறிக்கோள் எப்படியோ அப்படி!

உன் சிற்றின்ப ஆசைகளைப் போல் சிறியதாகச் சுருங்குவாய்!

அல்லது, உன் மேன்பட்ட வேட்கைகளைப் போல் பிரம்மாண்டமாய் விரிவடைவாய்!

கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா?

நீ இதோ இப்போது உன் கொள்கைகளுக்குத் தடையாய் இதுவரை இருந்த கதவைத் திறந்து கொண்டு, ஒரு கூட்டத்தின் முன்னால் சென்று நில்!

உன் பேனா இப்போதும் உன் காதுகளில் சொருகியிருக்கிறது!

உன் விரல்களில் இருந்து இன்னமும் பேனாவின் மை போகவில்லை!

வசப்படுத்தும் உன் உள் குரலில், பிரவாஹமாய், உன் மனதை, அறிவை, யோசனைகளைக் கொட்டு!

நீ ஒருவேளை ஆடு மேய்ப்பவனாய் இருக்கலாம்.

திறந்த வாய் மூடாமல், நீ நகரத்தின் தெருக்களில் ஆச்சர்யத்துடன் அலைந்து கொண்டிருக்கலாம்.

உன் உள்ளுணர்வு கூறியபடி ஒரு கலைக் கூடத்தினுள் செல்வாய்!

சில காலம் கழிந்ததும் அவன் உனக்குச் சொல்வான், *இனி உனக்கு கற்பிக்க என்னிடம் ஏதுமில்லை*

இதோ, இப்போது நீயும் ஒரு கலைஞன்!

சமீபத்தில்தான் நீ ஆடு மேய்க்கும் வேளையில் இதைப்போல் கனவு கண்டாய்!

எனவே, உன் கையிலுள்ள வைக்கோலையும் மேய்ச்சல் வெளியையும் உதறிவிட்டு, உன்னால் மறு மலர்ச்சி அடையப் போகிற உலகத்தை ஜெயிக்கப் புறப்படு!

சிலர் இப்படியும் இருக்கிறார்கள்.

சிந்திக்காமல் அறியாமையால் அவர்கள் செயல்களை கவனிக்காமல், அதன் தாக்கத்தையும், விளைவையும் பார்க்கிறார்கள்.

அதிர்ஷ்டத்தைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.

அதிர்ஷ்ட செல்வம் என்கிறார்கள். அடித்தது யோகம் என்கிறார்கள்.

ஒருவன் செல்வம் எய்துவதைக் கண்டு, *அடடா! இவன் எவ்வளவு அதிர்ஷ்டசாலி!* என்கிறார்கள்.

ஒருவன் அறிவுஜீவியாவதைக் கண்டு *இவனுக்கு அடித்தது யோகம்!* என்கிறார்கள்.

யோகியைப் போன்ற மேன்மையும், பரவலான அங்கீகாரத்தையும் பெற்றிருப்பவனைப் பார்த்து *ஹூம்! இவன் வாழ்வின் ஒவ்வொரு திருப்பு முனையிலும் வாய்ப்பு நன்றாக அமைந்து விட்டது* என்கிறார்கள்.

அவர்கள் முயற்சிகளையும், தோல்விகளையும், போராட்டங்களையும் விரும்பி ஏற்று, அனுபவம் அடைந்து, பிறகுதான் வெற்றி பெற்றார்கள் என்பதை இவர்கள் பார்ப்பதில்லை.

வென்றவர்கள் செய்த தியாகங்களை சிந்திப்பதில்லை! மனம் தளராத முயற்சிகளை எண்ணியும் பார்ப்பதில்லை.

அவர்கள் மனம் கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையை உணர்வதில்லை.

எட்டவியலாத சிகரங்களை, அவர்கள் மனக் கண்ணால் முதலில் கண்டு, அந்தக் கனவை நனவாக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் அறிந்து கொள்வதில்லை.

இருட்டும், மன வேதனையும் அவர்களுக்குத் தெரியாது.

அவர்கள் வெளிச்சத்தையும், மகிழ்ச்சியையும் மட்டும் பார்த்து *அதிர்ஷ்டம், யோகம்!* என்று சுலபமாக சொல்லிவிடுகிறார்கள்.

நீண்ட பயணத்தையும் அதன் கடினத்தையும் பார்க்காமல், அடைந்த நன்மையை மட்டும் பார்த்து * நல்ல யோகம் * என்கிறார்கள்.

செய்முறையை கவனிக்காமல், இறுதி முடிவை, வெற்றியைப் பார்த்து, *அட, வாய்ப்பைப் பார்த்தாயா?* என்கிறார்கள்.

அனைத்து மனித செய்கைகளிலும், முயற்சி மற்றும் முடிவு இரண்டும் உண்டு. முயற்சி எவ்வளவு வலிமையுடன் இருந்ததோ அந்தளவிற்கு முடிவு மகிழ்சிகரமாக இருக்கும்.

அதிர்ஷ்டத்திற்கு அங்கு வேலையுமில்லை. தேவையுமில்லை.

வென்ற பரிசுகள், பெற்ற சக்திகள், தேடிய பொருள், சேமித்த புத்தி, மற்றும் ஆன்மீக வசப்படுத்தல்கள் ஆகியன, முயற்சிகளின் கனிகளாகும்.

அவை முழுமையடைந்த எண்ணங்கள்.

வெல்லப்பட்ட குறிக்கோள்கள்.

நனவு படுத்தப்பட்ட கனவுகள்!

எந்தக் கனவை உன் உள்ளத்தில் போற்றுகிறாயோ, எந்தக் குறிக்கோளை உன் இதயத்தின் மகுடத்தில் வைத்துப் பெருமைப் படுத்துகிறாயோ, அதை நிச்சயமாக உன் வாழ்வுடன் பிணைத்துக் கட்டுவாய்!

நீ அதுவாக மாறுவாய்!

- ஜேம்ஸ் ஆலன்.

(தமிழில் நந்தவேரன்)

No comments:

Post a Comment